You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிஞ்சா அமைப்பு திட்டமா? ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பா? மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த பரபரப்பு விவாதம்
மலேசியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சதித்திட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் வசித்து வரும் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்புள்ளதா என்பது குறித்து இந்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மலேசிய அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும், ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? என்றும் எதிர்கட்சி சார்பில் திங்கட்கிழமை மலேசிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மலேசியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ரோஹிஞ்சா தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் உள்ள அயோத்யா, புத்த கயா (Bodhgaya), ஸ்ரீநகர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வெகு விரைவில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் என்றும் இந்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்காக நடந்த ஹவாலா பணப்பரிமாற்றத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு தரகருக்கு தொடர்புள்ளதாகவும் ரோஹிஞ்சா தீவிரவாத அமைப்பின் தலைவர் உரிய தொகையைப் பெற்றிருப்பதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியன்மாரில் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணின் தலைமையில் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று வெளியான தகவலை சுட்டிக்காட்டிய மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், இது தொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
"ஊடகத்தில் வெளியான இந்த தகவல் தொடர்பாக காவல்துறைக்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை என்று மட்டுமே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இத்தகைய ஒரு திட்டம் தீட்டப்படுகிறதா என்பது குறித்து அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதை வெளிக்காட்டும் விதமாகவே இந்த பதில் உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு திட்டமிட இயலாது," என்று ராம்கர்பால் சிங் எம்பி தெரிவித்தார்.
ரோஹிஞ்சா அமைப்புக்கும் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையே ஏதேனும் தொடர்புள்ளதா என்றும் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஜாகிர் நாயக்கின் பின்னணி உள்ளதா என்பது குறித்தும் இந்திய உளவுத்துறை விசாரித்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், இது குறித்து மலேசிய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். இதில் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்புள்ளதா என தெரிய வேண்டும். இந்திய அதிகாரிகள் தெரிவித்ததாக வெளியான தகவல்களை மலேசிய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதா?," என ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.
தீவிரவாத தாக்குதல் குறித்து காவல்துறைக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இந்திய தரப்பிடம் இருந்து வரவில்லை என மலேசிய காவல்துறை தலைவர் நேற்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற சதித்திட்டங்களை தீட்டுவது என்பது ஒரே இரவில் சாத்தியமாகக் கூடியது அல்ல என்றார்.
மேலும் மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் எனும் இந்தியாவின் கோரிக்கையை மலேசிய அரசு ஏற்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், "தீவிரவாத தாக்குதல் விசாரணை தொடர்பில் மலேசிய அரசின் ஒத்துழைப்பை இந்தியா இதுவரை கோரவில்லை. அவ்வாறு கோரும் பட்சத்தில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
தீவிரவாத தாக்குதல் குறித்து அறிக்கை கிடைத்த பின்னர் அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்யும் என்றார் அவர்.
பிற செய்திகள்:
- கூகுள், யூட்யூப் சேவைகள் 15 நிமிடங்கள் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி
- விவசாயிகள் போராட்டம்: 10 சங்கங்கள் ஆதரவு தந்துள்ளதாக கூறும் இந்திய அமைச்சர்
- சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: காரணம் என்ன?
- விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தாரா பராக் ஒபாமா? உண்மை என்ன?
- இளம் ஊடகவியலாளரை தூக்கிலிட்ட இரான்: மதகுரு மகனுக்கு மரண தண்டனை ஏன்?
- சங்ககால சோழர் நாணயத்தில் மனித உருவம்: தமிழர் வரலாறு பற்றி புதிய செய்திகள்
- இன்று சூரிய கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்?
- விவசாயிகள் போராட்டத்தைச் சமாளிக்க பாஜக புதிய உத்தி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: