You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல்சன் திலீப்குமார்: விஜய்யின் 65வது பட இயக்குநர் - பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
- எழுதியவர், வினோத் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பலர் சென்னையை நோக்கி வருகின்றனர். அப்படி வரும் அனைவருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
இந்த நிலையில் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் சென்னை வந்து, தனியார் தொலைக்காட்சியில் உதவி கதாசிரியராகச் சேர்ந்து பின்பு, நிகழ்ச்சி இயக்குநராக மாறியவர் நெல்சன் திலீப்குமார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இயக்குராக இருந்து, கமலின் பாராட்டைப் பெற்ற அவர், வெள்ளித்திரையில் "வேட்டை மன்னன்" படம் மூலம் இயக்குநரானார்.
ஆனால், அந்த படம் பாதியிலியே கைவிடப்பட்டு பின்பு, கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை பெற்றார் நெல்சன் திலீப்குமார்.
தமிழ் திரைப்பட உலகில் பல முன்னணி இயக்குநர்கள் நடிகர் விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என்று முயற்சிப்பார்கள். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் விஜய்யின் படத்தை இயக்க வாய்ப்பு இப்போது நெல்சன் திலீப் குமாருக்கு கிடைத்திருக்கிறது.
ஆனால், அவரது பின்புலம் பலருக்கும் அறியாதவொன்று.
நெல்சன் திலீப்குமார் இயக்குநராக தமிழ் சினிமாவில் தற்போது அறியப்பட்டாலும், திரைக்கதை எழுத்தாளராக பல படங்களில் அவர் இதற்கு முன்பு பணியாற்றி உள்ளார்.
தமிழ் சின்னத்திரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் உருவான சில ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பத்தில் அவர் இயக்குநராக பணியாற்றினார். அப்போது பல பிரபலங்களின் அறிமுகத்தை பெற்ற அவர், தமிழ் சினிமாவில் இயக்குநராகும் அளவுக்கு வளர்ந்திரு்ககிறார்.
வேலூர் மாவட்டத்தில் பிறந்த நெல்சன் திலீப்குமார், தனது சொந்த ஊரில் பள்ளிக் கல்வி முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் 'விஷ்வல் கம்யூனிகேஷன்' துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மற்றும் சில தொடர்களுக்கும் அவர் பணியாற்றினார்.
முன்னதாக 2005ஆம் ஆண்டில் "அழகி" என்ற நிகழ்ச்சியின் துணை இயக்குநராக பணியாற்றிய நெல்சன் திலீப்குமார், அடுத்தடுத்து ஜோடி நம்பர் 1, ஏர்டெல் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் தமிழ் என பல நிகழ்ச்சிகளின் இயக்குநராகவும், தயாரிப்பு குழுவிலும் பணியாற்றினார்.
வெள்ளித்திரை அனுபவம்
2010ஆம் ஆண்டில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான "வேட்டை மன்னன்" திரைப்படத்தின் இயக்குநர் ஆவார், நெல்சன் திலீப்குமார். இத்திரைப்படமானது இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம்.
இவர் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிலம்பரசன், ஹன்ஷிகா என பல தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியாகி தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் பிரபலமானது. சிலம்பரசனின் ரசிகர்கள் கொண்டாடிய இப்படம், திடீரென சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.
தான் இயக்கிய முதல் திரைப்படம், பாதியில் நிறுத்தப்பட்ட பிறகு புதிய படவாய்ப்புகள் வராததால், தனது திரைப்பயணத்தை தொடக்கத்தில் இருந்து தொடங்கும் நிலைக்கு நெல்சன் தள்ளப்பட்டார்.
வாழ்வு கொடுத்த கோலமாவு கோகிலா
இதனால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் இணைந்து சில நிகழ்ச்சிகளை இயக்கிய இவர், 2018-ஆம் ஆண்டில் கோலமாவு கோகிலா என்ற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நகைச்சுவை படத்தின் இயக்குநராக தமிழ் முத்திரை பதித்தார்.
முன்னதாக. விஜய் தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகளை இயக்கி வந்தபோது, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அறிமுகம் அவருக்கு கிடைத்து அவர்களின் நட்பு வட்டத்திலும் நெல்சன் இடம்பிடித்தார்.
அப்போது தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா புரோடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் சில முக்கிய புள்ளிகளுடன் நெல்சன் எழுதிய ஒரு திரைக்கதை குறித்த கலந்துரையாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் ஏற்பாடு செய்தார்.
அதன் விளைவாக லைக்கா தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் "கோலமாவு கோகிலா" திரைப்படத்துக்காக நடிகை நயன்தாராவை சந்திக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு அமைந்தது. அந்த படமே நெல்சனின் திரைவாழ்வில் ஒரு மறுமலர்ச்சியாக அமைந்தது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "டாக்டர்" என்ற படத்தை நெல்சன் இயக்கினார்.
இதன் பிறகு "இளம் இயக்குநர்" பட்டத்தை விகடன் நிறுவனம் அவருக்கு அளித்து கெளரவித்தது. முன்னணி நாளிதழான "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா" சார்பில் "சிறந்த இளம் இயக்குநர்" விருதும் அவருக்கு கிடைத்தது.
விஜய் படத்தை இயக்க வாய்ப்பு
நீண்ட நாட்களாக திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளில் ஈடுபடாத சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2018ஆம் ஆண்டில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "சர்க்கார்" படத்தை தயாரித்தது. அந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து தமிழ் திரை வர்த்தகத்தில் புதிய மைல் கல்லை எட்டியது.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65வது திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாக மீண்டும் ஒருமுறை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும் "கத்தி", "மாஸ்டர்" ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அனிருத் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய படக்குழுவினர் விரைவில் அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்:
- அழிவின் விளிம்பில் பாறு கழுகுகள் - மனிதர்களுக்கு அபாயம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
- தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு எதிர்காலம் என்னவாகும்? - டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன் சிறப்பு நேர்காணல்
- ராஜா சாரி: நிலவில் கால் பதிக்க தகுதி பெற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க அதிகாரி - யார் இவர்?
- டெல்லி துணை முதல்வர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை உடைத்த மர்ம நபர்கள்
- இந்த மாதம் உங்கள் வானில் தெரியும் அற்புத நிகழ்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: