You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி துணை முதல்வர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை உடைத்த மர்ம நபர்கள்
டெல்லியில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சிலர் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அந்த செயலில் ஈடுபட்டது பாரதிய ஜனதா கட்சியினர் என்று டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உச்ச நீதிமன்ற சாலை சந்திப்புக்கு வெகு அருகேயும் பிரகதி மைதானத்துக்கு எதிரேயும் உள்ளது. இந்த நிலையில், அவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் வியாழக்கிழமை புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குல்தீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார். அந்த காணொளி மணிஷ் சிசோடியா வீடு அமைந்த இடத்தில் பொருத்தப்பட்டதாக தெரிகிறது.
அதில், அவரது வீடு அமைந்த சந்தில் சுமார் 10 முதல் 15 பேர் வரை திடீரென வேகமாக வருகிறார்கள். வாயிலில் இரு காவலர்கள் நின்றிருந்தபோதும், அவர்களை தள்ளிக் கொண்டு அனைவரும் வீட்டுக்குள் செல்வது போல காட்சிகள் உள்ளன.
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகக்கூறியுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் வேளையில் எவ்வாறு ஒரு கும்பலால் மணிஷ் சிசோடியாவின் வீட்டுக்குள் நுழைந்து சூறையாட முடிந்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்தபோது மணிஷ் சிசோடியா அவரது வீட்டில் இல்லை.
இதேவேளை, மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி. நட்டா சென்ற வாகனங்கள் இலக்கு வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், "ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் இலக்கு வைக்கப்படுவது மிகவும் கவலை தருகிறது. இதற்கு பொறுப்பானவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அவரது அந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டிய கேஜ்ரிவால், "காவல்துறையினர் முன்னிலையில் ஒரு துணை முதல்வரின் வீடு தாக்கப்படுவது தவறு என்று கருதுகிறீர்களா, விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி மீதும் டெல்லி அரசு மீதும் அப்படி என்ன பாஜகவுக்கு கோபம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: