சித்ரா பகிர்ந்த கடைசி படம்: அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள், ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடரில் "முல்லை" என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சித்ராவின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தனது ரசிகர்களின் பிறந்த நாளன்று அவர்களது வீட்டுக்கு நேரடியாக சென்று இன்ப அதிர்ச்சி தருவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் உருவாக்கிய காணொளிகள் மற்றும் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் சித்ராவை, 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள்.

பெரும்பாலான படங்களில் புன்னகையுடன் காட்சியளிக்கும் சித்ரா, இன்று அதிகாலை தனியார் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பிரபலங்கள் பலர் சமூக வலைதள பக்கங்களில் சித்ராவின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவுடன் நடித்த ஹேம சதீஷ், தனது சமூக வலைதள பக்கத்தில், "நீ இப்படி பண்ணிருக்கக் கூடாது. எதற்கு இப்படி ஒரு முடிவு எடுத்த" என சித்ராவுடன் எடுத்த படத்துடன் பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதே தொடரில் சித்ராவுடன் நடித்த வெங்கட் "சத்தியமா உங்கிட்ட இருந்து இப்படி ஒரு முடிவை யோசித்துக் கூட பாக்க முடியவில்லை. எதற்கு இந்த மாதிரி பண்ண" என்று கூறியுள்ளார்.

பாடகி மற்றும் நடிகை சௌந்தர்யா, சித்ராவுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து அதில் "நீ என்ன பண்ணிருக்க சித்து... நீ இப்படி பண்ணிருக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

சிவாங்கி தனது பதிவில் "அக்கா நேற்று நாம எவ்வளவு சந்தோஷமா பாட்டுப் பாடி நடனம் ஆடினோம். ஏன் இப்படி பண்ணீங்க" என பதிவிட்டுள்ளார்.

மணிமேகலை சித்ராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து "நீ இந்த மாதிரி செய்கிற பொண்ணு இல்ல எதற்கு இந்த மாதிரி முடிவு எடுத்த என்று தெரியல. நேற்று இரண்டு பேரும் மேக்கப் அறையில் ஒன்றா இருந்தோம், நிறைய விஷயத்தைப் பற்றிப் பேசினோம், ஆனால் இப்போது நீ இல்ல என்பத என்னால் நம்பவே முடியவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்

இதற்கிடையே, கடந்த 12 மணி நேரத்துக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தை சித்ரா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் 1.62 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.

இரவில் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை பகிர்ந்துள்ள சித்ரா, அதிகாலையில் உயிரிழந்ததாக கூறப்படுவதை ஏற்க முடியவில்லை என அவரது ரசிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற மகிழ்ச்சியான படங்களையெல்லாம் வெளியிட்டு விட்டு ஏன் இவ்வாறு செய்தீர்கள் என ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: