You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லக்ஷ்மி: லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு சர்ச்சையில் அக்ஷய் குமார் படம் - தற்போதைய நிலை என்ன?
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் விவாதத்துக்கு உள்ளான நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள "லக்ஷ்மி பாம்" திரைப்படம், லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு என வட மாநிலங்களில் பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் இன்று வெளி வருகிறது. ஆனால், திட்டமிட்டப்படி பழைய பெயரில் அல்லாமல் "லக்ஷ்மி" என்ற பெயரில் அந்த படம் வெளியாகிறது.
2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி,நாயகனாக நடித்த படம் "காஞ்சனா". தற்போது அந்தப் படம் "லக்ஷ்மி பாம்" என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, தமிழில் இயக்கி கதாநாயகனாக நடித்த ராகவா லாரன்ஸ் இந்தியில் அந்த படத்தை இயக்கியுள்ளார்.
வட மாநிலங்களில் பிரச்சனை
இந்த நிலையில் இந்த படம் இந்தியாவின் வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
இந்த படம் வெளியாவதற்கு அகில பாரதிய இந்து மகாசபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த படம் இந்துக்களின் உணர்வை புண்படுத்துகிறது என்று அந்த அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் பவித்ரன் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததற்காகவும், "லவ் ஜிஹாத்" கருத்தை அந்த படம் ஊக்குவிப்பதற்காகவும் கூறி அந்த திரைப்படத்துக்கு தடை விதிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகனின் பெயர் ஆசிஃப், கதாநாயகியின் பெயர் பிரியா யாதவ்.
இந்து தெய்வங்களை அவமதிக்கும் திரைப்படத்தை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று இந்த மகாசபை செயலாளர் தர்மேந்திரா கூறியிருக்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லரில், அக்ஷய் குமார் ஒரு திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.நெற்றியில் பெரிய சிவப்பு குங்குமம், ஒரு சிவப்பு புடவை அணிந்து, தலைமுடியை அவிழ்த்து, கையில் திரிசூலத்துடன் நடனமாடி ஒரு தேவியின் வடிவமாக நடித்து இருக்கிறார். மேற்கு வங்கத்தில் இந்து துர்கையின் வடிவத்தை படத்தில் காண்பிக்கப்படும் சில காட்சிகள் பிரதிபலிப்பதாக சிலர் சர்ச்சையாக்கினர்.
வலதுசாரி அமைப்பான இந்து சேனா முன்னதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜாவடேகருக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்து ஜனஜாகிருதி சமிதி மற்றும் அகில் பாரதிய இந்து மகாசபா போன்ற பிற இந்து அமைப்புகள் இந்த படம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. இது வெவ்வேறு மத சமூகங்களைச் சேர்ந்த இரண்டு நபர்களின் கதை எனவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது.
ராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு படத்தின் தலைப்பை மாற்றக்கோரியது.
"லக்ஷ்மி பாம்" என்பது ஒரு இந்திய திரைப்படத்தின் சமீபத்திய எடுத்துக்காட்டு, இது ஒரு மத அல்லது அரசியல் குழுவினரால் எதிர்க்கப்பட்டு, படத்தின் வெளியீட்டில் தடைகளைத் தூண்டுகிறது.
படங்களை எதிர்க்கும் வலதுசாரி அமைப்புகள்
2017 ஆம் ஆண்டில், கர்னி சேனாவின் ஆர்வலர்கள், சஞ்சய் லீலா பன்சாலியின் "பத்மாவத்" படம் (அப்போது பத்மாவதி என்று பெயரிடப்பட்டனர்), வரலாற்றை சிதைத்ததற்காகவும், ராணி பத்மினியை "அவமதித்ததற்காக" அவருடன் அல்லாவுதீன் கில்ஜி நெருக்கமான கனவு காட்சியைக் கொண்டிருந்ததாக கிளம்பிய வதந்தியின் காரணமாக படத்தை எதிர்த்தனர்.
பன்சாலி மற்றும் தயாரிப்பாளர்கள் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் இறுதியாக தலைப்பை மாற்ற முடிவு செய்திருந்தன.
திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டர்கர் பத்மாவத் சர்ச்சையின் போது ஒரு பேட்டியில், "அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு, அவர்கள் ஜனநாயக மாண்போடு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள், நாங்கள் திரைப்படங்களை உருவாக்கி பார்வையாளர்களை மகிழ்விக்க இங்கு வந்துள்ளோம். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அதற்கான முறையான வழியும் உள்ளது" என்று கூறியிருந்தார்.
நெருக்கடிக்கு பணிந்த தயாரிப்புக்குழு
இந்நிலையில் அக்ஷய் குமாரின் வரவிருக்கும் படமான லக்ஷ்மி பாம்ப் படம் இப்போது "லக்ஷ்மி" என மாற்றப்பட்டுள்ளது.
லக்ஷ்மி பாம்ப் என்ற தலைப்பை எதிர்த்து பல இந்து அமைப்புகள் குரல் கொடுத்ததையடுத்து, இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அது லக்ஷ்மி தேவிக்கு அவமானம் என்றும் சில வலதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் பெயரை "லக்ஷ்மி" என மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கர்னி சேனா சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
பல ஊடக அறிக்கையின்படி, லக்ஷ்மி பாம் படம், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதன் உறுப்பினர்களின் பார்வைக்கு வியாழக்கிழமை சென்றது.
இந்த நிலையில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துடன் (சிபிஎப்சி) ஆலோசனை நடத்திய பின்னர், தயாரிப்பாளர்கள் அதன் பார்வையாளர்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு படத்தினஅ தலைப்பை "லக்ஷ்மி" என தயாரிப்பு நிறுவனம் மாற்றியுள்ளது.
"லக்ஷ்மி" என்பது 2011 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான காஞ்சனாவின் இந்தி ரீமேக் ஆகும், இது ராகவா லாரன்ஸ் இயக்கியது. முன்னதாக, செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில், இந்தி பார்வையாளர்களை "ஈர்க்கும் வகையில்" தலைப்பை காஞ்சனாவிலிருந்து லக்ஷ்மி பாம் என்று மாற்றினேன் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.
ராகவா லாரன்ஸ் தமிழில் நடித்த அளவுக்கு அக்ஷய்குமார் நடிக்கவில்லை என்றும் ஹிந்தி ட்ரைலர் பெரிதாக எங்களை ஈர்க்கவில்லை என்றும் ட்ரைலரை பார்த்த தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல தடைகளை தாண்டி இப்படம் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் திங்கட்கிழமை திரையிடப்படுகிறது.
பிற செய்திகள்:
- கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் ஏன் தோற்றார்? ஒரு விரிவான அலசல்
- அசத்திய ஸ்டாய்னிஸ், அச்சுறுத்திய சமத் - முதல்முறையாக இறுதியாட்டத்தில் டெல்லி
- பைடன் - கமலா அணியிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- அர்னாப் கோஸ்வாமி: அன்வே நாயக் வழக்கு முதல் பாஜக ஆதரவு வரை
- பிஹார் தேர்தல் 2020: நிதிஷ் குமாரின் கடைசி தேர்தல் ஆளும் கூட்டணிக்கு கை கொடுக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: