You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் ஏன் தோற்றார்? ஒரு விரிவான அலசல்
- எழுதியவர், நிக் பிரையன்ட்
- பதவி, பிபிசி நியூயார்க் செய்தியாளர்
அமெரிக்காவில் 2016இல் நடந்த அதிபர் தேர்தல் முடிவு, வழக்கத்துக்கு மாறான ஒரு வரலாற்று விபத்து எனும் பிழையான கண்ணோட்டத்தை 2020 அதிபர் தேர்தல் மாற்றட்டும்.
டொனால்ட் டிரம்ப், இந்த தேர்தலில் 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இருக்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே, ஒட்டுமொத்தமாக இத்தனை அதிக வாக்குகளைப் பெறும் இரண்டாவது தலைவர் டிரம்ப்தான். அமெரிக்காவில் 47 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற டிரம்ப், தனக்கு விருப்பமான ஃபுளோரிடா, டெக்சாஸ் உள்பட 24 மாகாணங்களில் வென்று இருப்பதாகத் தெரிகிறது.
டிரம்புக்கு, அமெரிக்காவின் பல இடங்களில் நல்ல செல்வாக்கு இருந்தது. அதோடு, டிரம்பின் பல்வேறு ஆதாரவாளர்களுக்கும், அவர் மீது உள்ளூர ஒரு பிணைப்பு இருந்தது. எனவே ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அவரது ஆதரவாளர்கள் காட்டினார்கள்.
டிரம்ப், வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, அவரது ஆதரவாளர்கள், தங்கள் தலைவனின் ஆட்சி காலத்தை ஆராய்ந்தார்கள்.
2020-ம் ஆண்டில், டொனால்ட் டிரம்பின் பலவீனங்களை ஆய்வு செய்யும் அதே நேரத்தில், டிரம்பின் அரசியல் பலங்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
எது எப்படியோ, டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு விட்டார். மீண்டும் இரண்டாவது முறை அமெரிக்க அதிபர் பதவியைப் பெறாத, நவீன காலத்து அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் ஒருவராக இணைந்து இருக்கிறார்.
அத்துடன், தொடர்ச்சியாக எதிர்கொண்ட இரண்டாவது அதிபர் தேர்தலில், பாப்புளர் வோட் என்று அழைக்கப்படும் வெற்றிக்கு தேவையான வாக்குகளைப் பெறாத முதல் அமெரிக்க அதிபராகி இருக்கிறார் டிரம்ப்.
பலமே பலவீனம்
டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
டிரம்ப் விதிகளை உடைக்கும், அரசியல் அனுபவமே இல்லாதவராக (Political Outsider) இருந்தார். அதோடு இதுவரை சொல்ல முடியாதவைகளை, சொல்லத் தயாராக இருந்தார். இப்போது இந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், இதே காரணங்களுக்காக தோல்வியைத் தழுவி இருக்கிறார்.
டிரம்ப் ஒருவரை சுட்டு இருந்தால் கூட, டிரம்பின் ஆதவராளர்கள், அவருக்கே வாக்களித்திருப்பார்கள். ஆனால் அவரின் ஆணவம் மற்றும் அவரின் அதிரடி நடவடிக்கைகள், நான்கு ஆண்டுகளுக்கு முன் அவரை ஆதரித்தவர்களைக் கூட, இந்த முறை ஆதரிக்கவிடாமல் செய்துவிட்டது. இந்த விஷயம், குறிப்பாக அமெரிக்க புறநகர் பகுதிகளில் நடந்து இருக்கின்றன.
ஜோ பைடன், 373 நகர்புற பகுதிகளில், தனது செயல்பாட்டை மேம்படுத்தினார். இதனால் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின் போன்ற மாகாணங்களை மெல்ல தன் பக்கம் திருப்பிக் கொண்டார். அத்துடன் ஜோர்ஜா மற்றும் அரிசோனா மாகாணங்களின் கவனத்தையும் வெல்ல உதவியாக இருந்தது. டிரம்புக்கு, புறநகர் பெண்களிடம் சில பிரத்யேக பிரச்சனை இருந்தது.
2016-ல் வாக்களித்தவர்கள் இந்த முறை வாக்களிக்கவில்லை
மெத்தப் படித்த குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்புக்கு வாக்களித்தார்கள். அவர்களே, டிரம்பின் அதிபர் பதவிக் காலம், மிகவும் அசாதாரணமாக இருந்ததாக நினைத்து இருக்கிறார்கள். எனவே 2018-ம் ஆண்டு இடைக்கால தேர்தல்களில் நடந்ததை, இப்போது 2020-ம் ஆண்டிலும் பார்த்து இருக்கிறோம். டிரம்பின் அதிரடி நடவடிக்கைகளால், இந்த மெத்தப் படித்த குடியரசு கட்சி ஆதரவாளர்கள், இந்த முறை டிரம்புக்கு வாக்களிக்கவில்லை.
டிரம்பின் இன ரீதியிலான பிரச்சனைகளைத் தூண்டியது, ஒரு குறிப்பிட்ட இனத்தை உயர்த்திப் பேசும் இனவாத சொற்களைக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட இனத்தவரை தாழ்த்தி ட்விட் செய்தது, வெள்ளை இனவாதிகளை கண்டிக்காமல் விட்டது, அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகளை நசுக்கியது, விளாதிமிர் புதின் போல ஒரு சர்வாதிகாரியாக வலம் வர விரும்பியது, எப்போதுமே ஒரு அறிவாளி என்கிற ஒரு விதமான ஆணவத்தில் இருப்பது, conspiracy theory எனப்படும் சதி கோட்பாடுகளை ஊக்குவிப்பது, பொது வெளியில் தன் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கோஹென்னையே எலி என்று மோசமாக பேசியது போன்ற பல காரணங்களால், நிறைய படித்த, குடியரசு கட்சி ஆதவராளர்களே டிரம்புக்கு வாக்களிக்கவில்லை.
வெறுப்பு நீங்கி, ஒன்றிணைய வேண்டும்
நான், சக் ஹோவென்ஸ்டைன் என்பவரை சந்தித்துப் பேசினேன். இவர் கடந்த 2016 அதிபர் தேர்தலில் டிரம்பின் ஆதரவாளர். இந்த 2020 தேர்தலில், ஜோ பைடனுக்கு வாக்களித்து இருக்கிறார்.
மக்கள் சோர்ந்து விட்டார்கள். அவர்கள் அமெரிக்காவில் மீண்டும் இயல்பு நிலையைப் பார்க்க விரும்புகிறார்கள். மக்கள் நாகரிகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். வெறுப்பு உணர்வு நிறுத்தப்பட்டு, இந்த நாடு ஒன்றிணைவதைப் பார்க்க விரும்புகிறார்கள். இவை எல்லாம் சேர்ந்து ஜோ பைடனை அதிபராக்கும் எனச் சொன்னார்.
ஆதரவை பெருக்கவில்லை
டொனால்ட் டிரம்ப், தன் ஆதரவாளர்களைக் கடந்து, தன் செல்வாக்கை பெருக்கிக் கொள்ளவில்லை அல்லது கடினமாக அதை நோக்கி உழைக்கவில்லை. இது டிரம்பின் அரசியல் பிரச்சனை. கடந்த 2016 அதிபர் தேர்தலில், டிரம்ப் 30 மாகாணங்களை வென்றார். ஹிலாரி க்ளின்டனுக்கு வாக்களித்த 20 மாகாணங்களை, தன் பக்கம் ஈர்க்க பெரிய முயற்சி எடுக்கவில்லை.
2020 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் புதிதாக அதிபர் தேர்தலில் நிற்பவர் அல்ல. ஏற்கனவே நான்கு ஆண்டு காலம் அமெரிக்காவை ஆட்சி செய்த அதிபர்.
அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்த வேலைகளை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதில், கொரோனா வைரஸால் 2.3 லட்சம் அமெரிக்கர்கள் இறந்ததும் அடக்கம்.
எதிர்கட்சிகளின் விமர்சனங்களால் வழிநடத்தப்படும் எதிர்மறை சார்புநிலை அரசியல் நிறைந்த இந்த யுகத்தில், முந்தைய தேர்தலில் ஹிலாரி கிளின்டன் தோல்வியுற்றபோது அவரை செய்தது போல மிகக்கெட்டவராக டிரம்ப் இம்முறை விமர்சிக்கப்படவில்லை.
ஜோ பைடனை ஒரு வில்லன் போல சித்தரிக்க சரியான காரணங்கள் இல்லாததும் கூட, அவரை தமது அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி முன்னிறுத்த வாய்ப்பாக இருந்தது.
77 வயது அதிபர் போட்டியாளர் ஜோ பைடனும், போட்டி அதிகமாக இருக்கும் மாகாணங்களைச் சேர்ந்த, வெள்ளை இன, நடுத்தர, வேலை பார்க்கும் வர்க்க வாக்காளர்களை கவர வேண்டிய வேலையை கச்சிதமாகச் செய்தார்.
டிரம்ப் தோற்க காரணம் என்ன?
அதிபர் பதவியில் டிரம்பால் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது என பார்க்கும்போது சுவாரஸ்யமான கேள்வியும் விவாதமும் எழுப்பத் தோன்றுகிறது.
2016ஆம் ஆண்டில், டிரம்ப் வெற்றி பெற்ற பின், வாஷிங்டனில் அதுவரை நீடித்த அரசியல் முறைக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கு தங்களின் செயல்களுக்கான எதிர்வினை உடனடியாகவே தெரிந்தது. இத்தனைக்கும் அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்க்கவில்லை.
ஒருவேளை தான் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள்ளாக முதல் நாளிலேயே அவர் "அமெரிக்க படுகொலை" என்கிற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசி தொடக்கவுரை ஆற்றினாரே அதற்காக அவரைப் பிடிக்காமல் போயிருக்குமா? கூட்டம் குறைவாக இருக்கிறது என கடுமையாக கோபப்பட்டாரே டிரம்ப். தனது உணர்வை வெளிப்படுத்த தொடர்ந்து ட்விட்டரை அதிகம் பயன்படுத்துவேன் என்று கூறினாரே, அதுவாக இருக்குமா?
டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்ட முதல் நாளிலேயே, அமெரிக்க அதிபர் பதவி, டிரம்பை மாற்றாது: மாறாக, அதிபர் பதவியை, டிரம்ப் மாற்றுவார் என்பதை உணர்த்தினாரே அதுவாக இருக்குமா?
டிரம்ப் தன் பதவியை, பனிப்பந்து விளைவு போல நிறைய ஊழல்கள், நிறைய மோசமானப் பேச்சு, நிறைய அதிகாரிகளை மாற்றியது என பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டாரே - அதுவாக இருக்குமா? அல்லது கொரோனா வைரஸ் எனும் மிகப் பெரிய நெருக்கடி வந்தபோது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதே, அதனால் இழந்தாரா? - இப்படி பல கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்படுகின்றன.
ஆனால், கொரோனா வைரஸால்தான் டிரம்ப் மீண்டும் அதிபராக முடியாமல் போயிருப்பதாக கருதுவது தவறு.
கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே, டிரம்பின் அரசியல் நிலைமை வலுவாகவே இருந்தது. டிரம்ப் தன் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணையில் இருந்து தப்பினார். Approval ratings எனப்படும், டிரம்பின் செயல்களை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை 49 சதவிகிதமாக இருந்தது.
டிரம்பால், பொருளாதாரத்தை வலுவாக வளர்த்து எடுத்து இருக்க முடியும், அத்துடன் தொடர்ந்து பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்க அவரால் முடியும். பொதுவாக, இந்த இரண்டு காரணிகள், தற்போது ஆட்சியில் இருக்கும் அமெரிக்க அதிபருக்கு, இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிப்பதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
கொரோனா வைரஸ் ஒரு வாய்ப்பு
டிரம்பின் ஆட்சிக் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கி விட்டது எனச் சொல்வது தவறு. இது போன்ற நெருக்கடியான கால கட்டத்தில் தான் பல மகத்துவங்கள் வெளிப்படும். இதை அமெரிக்க அதிபர் வரலாற்றில் பார்க்க முடியும். ஃப்ராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட், அமெரிக்காவை, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டார். இன்று வரை, அமெரிக்க மக்கள் மத்தியில் அசைக்க முடியாத தலைவராக இருக்கிறார் ரூஸ்வெல்ட்.
அதே போல செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், ஜார்ஜ் டபிள்யூ புஷ் எடுத்த உடனடி நடவடிக்கைகள், அவரின் புகழை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதோடு இரண்டாவது முறையும் அவரை அதிபராக்கி அழகு பார்த்தது. எனவே டிரம்ப் அதிபராக இருந்த பதவிக் காலத்தை கொரோனா பாதித்துவிட்டது எனச் சொல்வதில் எந்த பொருளும் இல்லை. டிரம்ப் கொரோனா வைரஸை மோசமாக கையாண்டது தான், அவரின் தோல்விக்குக் காரணம்.
அமெரிக்கா, கடந்த 100 வருடங்களில் காணாத அளவுக்கு மோசமான சுகாதார பிரச்சனையை எதிர்கொண்ட்டிருக்கும் போதும், 1930-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பெரிய பொருளாதார சவாலை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போதும், 1960-களுக்குப் பின் இனவாத பிரச்சனைகள் எழுந்து இருக்கும் நேரத்திலும், அமெரிக்க அதிபர் தேர்தலில், கடைசி வரை டிரம்ப் போட்டியில் இருந்தது, இங்கு நினைவுகூரத்தக்கது.
டிரம்ப், அமெரிக்க மக்களை பிரிக்கும் ஒரு நபராகவே கருதப்படுகிறார். இவர் மீண்டும் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். பிரிந்து இருக்கும் அமெரிக்க மாகாணங்கள், திடீரென மீண்டும் ஒன்றாக இணைந்துவிடவில்லை.
ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அமெரிக்க வரலாற்றில் மிகவும் வழக்கத்திற்கு மாறான அதிபரை இந்த நாடு கேள்விப்பட்டதில்லை அல்லது பார்த்ததில்லை.
பிற செய்திகள்:
- அசத்திய ஸ்டாய்னிஸ், அச்சுறுத்திய சமத் - முதல்முறையாக இறுதியாட்டத்தில் டெல்லி
- பைடன் - கமலா அணியிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- அர்னாப் கோஸ்வாமி: அன்வே நாயக் வழக்கு முதல் பாஜக ஆதரவு வரை
- பிஹார் தேர்தல் 2020: நிதிஷ் குமாரின் கடைசி தேர்தல் ஆளும் கூட்டணிக்கு கை கொடுக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: