You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜோ பைடன் வெற்றி முதல் மெளனம் கலைந்த செளதி வரை - ஓர் பார்வை
அமெரிக்க தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரம் தொடர்பாக உலகின் பல நாடுகளும் அவற்றின் கருத்துகளை பகிர்ந்த வேளையில், ஒரு சில நாடுகள் மட்டும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி தொடர்பான தங்களின் உணர்வை வெளிப்படுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு செளதி அரேபியா தனது கருத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இவை தொடர்பாக பிபிசியில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு, உங்கள் பார்வைக்கு.
ஜோ பைடன் வெற்றி - கடைசியில் மெளனம் கலைந்த செளதி அரேபியா
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற தேவையான தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கையான 270ஐ விட அதிக வாக்குகளை பெற்ற நிலையில், அவருக்கு உலகின் பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்புடன் நெருக்கமாக உறவை வைத்திருக்கும் செளதி அரேபியா தரப்பு, எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில், செளதி மன்னர் ஷா சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் செளத், பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புடன் மிக நெருங்கிய நட்புறவை செளதி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபோது, மொஹம்மத் பின் சல்மான் நேரிலேயே அவரது பதவியேற்பு விழாவுக்குச் சென்றார். அதேபோல, டிரம்ப் செளதிக்கு வந்தபோது முன்னெப்போதுமில்லாத வரவேற்பை அவருக்கு அந்நாடு அளித்திருந்தது.
செளதி அரசு விமர்சகரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த செளதி பத்திரிகையாளருமான ஜமால் கஷோக்ஜி துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில் செளதி பட்டத்து இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான புகார்கள் கடும் சர்ச்சைக்கு உள்ளாயின. அந்த சம்பவத்தில் செளதிக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிரம்ப் மேற்கொண்டதாகவும் சர்ச்சை இருந்தது.
ஆனால், மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேலுடன் கொண்டிருக்கும் உறவுகள் மேம்பட டிரம்ப் மேற்கொண்ட திட்டத்தை செளதி ஆதரிக்கவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, செளதியுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் உறவுகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அந்த உறவை அர்த்தமுள்ளதாக்க முயல்வேன் என்று ஜோ பைடன் கூறியிருந்தார். இத்தகைய சூழலில், ஜோ பைடனின் வெற்றிக்கு உடனடியாக இல்லாமல் 24 மணி நேரம் இடைவெளி கொடுத்து செளதி வாழ்த்து தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம் - ஜோ பைடன் முழுமையான உரை
"இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர்," என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்." என அவர் கூறி உள்ளார்.
"சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். உங்கள் நம்பிக்கையைப் பெற முழு மனதாக பணியாற்றுவேன்,"என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க:அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம்: ஜோ பைடன் முழுமையான உரை
அமெரிக்க தேர்தல்: மீண்டும் பலத்தை நிரூபித்த இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள்
அமெரிக்க தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வெற்றி பெற்றுள்ளனர். டாக்டர் ஆமி பெரா, ரோ கன்னா, பிரமிளா ஜெய்பால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே அந்த நால்வர்.
மும்பையில் பிறந்த 52 வயதான மருத்துவர் ஹெரல் திபிர்னெனி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டெபி செல்கோ ஆகியோர் இடையே அரிசோனாவில் கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை இங்கே இன்னும் தொடர்கிறது.
ஹெரல் வெற்றி பெற்றால், பிரமிளா ஜெய்பாலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய-அமெரிக்கப் பெண்மணி ஆவார். இதற்கு முன்னர், பிரமிளா ஜெய்பால் 2016 ஆம் ஆண்டில் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த ஐந்து உறுப்பினர்களின் அணிக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில், 'சமோசா காகஸ்' என்று ராஜா கிருஷ்ணமூர்த்தி பெயரிட்டுள்ளார்.
இது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க:
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் அணியிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 279 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது.
77 வயதாகும் ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அதிக வயதில் பதவி ஏற்பவர் ஆகவுள்ளார்.
அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டில் அதிபராவதற்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடனின் அரசில் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ்.
இதன் மூலம், அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வான பெண்ணாகவும், முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகவும் உருவெடுத்துள்ளார் தமிழகத்தை தாய்வழிப் பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.
அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுற்று கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.
இந்த செய்தியை விரிவாக படிக்க:
ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் வெற்றி உலகின் மீது என்ன தாக்கம் செலுத்தும்?
ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பலவகையில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 77 வயதில் அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார்.
இதன்மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மூத்த வயதில் அதிபர் பதவி ஏற்பவர் ஆகிறார் ஜோ பைடன்.
அமெரிக்காவின் துணை அதிபர் பதவியில் இதுவரை பெண்கள் யாரும் இருந்ததில்லை. அந்த வகையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பதும் இதுவே முதல் முறை என்பதால், இதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகிறது.
ஆப்ரிக்க - அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் ஆசிய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் துணை அதிபர் பதவிக்கு வருவதும் இதுவே முதல் முறை.
இந்த செய்தியை விரிவாக படிக்க:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெண்கள் கௌரவக் கொலை சட்டத்தை கடுமையாக்குகிறது
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை, குடும்ப உறுப்பினர்களே கொலை செய்யும் குற்றங்களுக்கான, தண்டனைகளை கடுமையாக்கி இருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மேலே சொன்ன குற்றத்துக்கு, ஐக்கிய அரபு அமீரக நீதிபதிகள் மென்மையான தண்டனை வழங்கலாம் எனச் சொல்லப்பட்டு, ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டத்தை, திரும்பப் பெற இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு சொல்லி இருக்கிறது.
இந்த செய்தியை விரிவாக படிக்க:
மலேசியாவில் பணி இழப்பு: சாலையோர உணவகம் தொடங்கிய விமானி
கொரோனா விவகாரத்தால் மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் வேலையிழப்பு காரணமாக சாலையோர உணவகம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.
இதையடுத்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதாக கூறும் அவருக்கு மலேசியர்கள் பலரும் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை விரிவாக படிக்க:
பிற செய்திகள்:
- அசத்திய ஸ்டாய்னிஸ், அச்சுறுத்திய சமத் - முதல்முறையாக இறுதியாட்டத்தில் டெல்லி
- பைடன் - கமலா அணியிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- அர்னாப் கோஸ்வாமி: அன்வே நாயக் வழக்கு முதல் பாஜக ஆதரவு வரை
- பிஹார் தேர்தல் 2020: நிதிஷ் குமாரின் கடைசி தேர்தல் ஆளும் கூட்டணிக்கு கை கொடுக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: