விஜய் சேதுபதி 800 படம் விவகாரம்: 'என் உயிருக்கு ஆபத்து' - இயக்குநர் சீனு ராமசாமி

விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த 800 படம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டதால் பலர் தன்னைத் தொலைபேசியில் மிரட்டுவதாகவும் அதனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் சென்னை போரூர் பகுதியில் வசித்துவருகிறார். இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்." என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவரைப் பலரும் தொலைபேசியில் அழைத்தபோதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. குரல் பதிவு மூலம் மட்டும், தனக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் கூறிவந்தார்.

இதையடுத்து அவரது வீட்டிற்கு விரைந்த ஊடகவியலாளர்களிடம் 800 விவகாரத்திற்குப் பிறகு தனக்கு தொடர் தொலைபேசி மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்தார்.

"சமீபத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வந்தபோது நான் வேதனைப்பட்டேன். இது தொடர்பாக எனது கருத்துகளை பொது வெளியிலும் அவரிடமும் சொன்னேன். விஜய் சேதுபதி தமிழர்களின் பகையை சம்பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் பேசினேன். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது."

"விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்து விலக முடிவெடுத்து 'நன்றி வணக்கம்' எனப் பதிவிட்டதும் அவரை தொலைபேசியில் அழைத்து 'இதற்கு என்ன பொருள்?' என்றேன். அதற்கு விஜய் சேதுபதி, ஆரம்பத்தில் இந்தக் கதை பிடித்துதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். பிறகுதான் அதில் அரசியல் விமர்சனம் இருப்பது புரிந்தது. என்ன செய்வதென தெரியாத சூழலில் தயாரிப்பு நிறுவனமே தனது முடிவை அறிவித்தது. ஆகவே 'நன்றி வணக்கம்' என தெரிவித்தேன் என்றார். இதோடு பிரச்சனை முடிந்தது.

இதற்குப் பிறகு நான் ஏதோ விஜய் சேதுபதிக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக் கருதி, தொடர்ந்து தொலைபேசியில் அழைக்கிறார்கள். வாட்ஸப்பில் அழைக்கிறார்கள், பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால் அவ்வாறு பதிவிட்டேன்" என்றார்.

என்ன மாதிரி மிரட்டல் எனக் கேட்டபோது கெட்ட வார்த்தையில் பேசுகிறார்கள் என்றும் தனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி சிலர் குளிர் காய முயற்சிப்பதாகவும் இந்த சம்பவங்கள் நான்கைந்து நாட்களாக நடப்பதாகவும் சீனு ராமசாமி தெரிவித்தார்.

விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உங்களை மிரட்டுவதாக நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது "அவர்கள் மிரட்ட மாட்டார்கள். அவர்கள் எனது தம்பிகள். ஆனால், யார் எதற்காகச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார். விஜய் சேதுபதியிடம் இது குறித்து பேசிவிட்டதாகவும் "இதைக் கண்டுகொள்ள வேண்டாம். நமக்குள் யாரும் முரண்பாட்டை உருவாக்க முடியாது" என அவர் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து தென்மேற்குப் பருவக் காற்று, தர்மதுரை ஆகிய இரண்டு படங்களை சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார். தற்போது மாமனிதன் என்ற படத்தை விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிவருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இந்தப் புகாரை சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :