You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முத்தையா முரளிதரன் கோரிக்கை: '800' படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி
இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் தயாரிக்கப்படும் "800" படத்தில் அவரது பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதியிடம், அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது கடிதத்தை மேற்கோள்காட்டி "நன்றி, வணக்கம்," என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழரான முத்தையா முரளிதரன் அந்நாட்டில் விடுதலைப்புலிகள் உடனான இலங்கை ராணுவத்தினரின் போரில் அரசுக்கு ஆதரவாக இருந்ததாகவும், அவர் தமிழ் இன வெறுப்பாளர் என்றும் கூறி 800 திரைப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமூக இயக்கங்கள், திரைப்பிரபலங்கள் ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தான் தமிழ் இன வெறுப்பாளர் இல்லை என்றும் இலங்கையில் பிறந்ததுதான் தனது குற்றமா என்றும் கூறி முத்தையா முரளிதரன் தரப்பு கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து எவ்வித பதிலோ விளக்கமோ வராத நிலையில் அவர் 800 படத்தில் நடிப்பது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழகத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயகுமார் ஆகியோர் கடந்த வாரம் கருத்து வெளியிட்டனர்.
இந்த நிலையில், முத்தையா முரளிதரன் தரப்பில் அவரது கையெழுத்திட்ட ஒரு பக்க அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தனது சுய சரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள்
"என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்."
"ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒரு போதும் நான் சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி பதில்
இது குறித்து நடிகர் விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் திங்கட்கிழமை மாலையில் கேட்டபோது, "நன்றி, வணக்கம் என்று டிவிட்டரில் போட்டிருக்கிறேன். அப்படியென்றால் எல்லாம் முடிந்து விட்டது. புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனி இதில் பேச ஒன்றுமில்லை" என்று தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் 800 பட தயாரிப்பு நிறுவனம், அடுத்த என்ன செய்யப் போகிறது, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
பிற செய்திகள்:
- இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்
- பெருந்தொற்றிலிருந்து மீண்டு சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைவதன் காரணம் என்ன?
- நீட் தேர்வில் தனியார் பயிற்சி இன்றி வெற்றி: கோவை அரசுப் பள்ளி மாணவிகள் சாதித்தது எப்படி?
- இலங்கையில் தலைமறைவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் 6 நாட்களுக்கு பிறகு கைது மற்றும் பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: