You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெருந்தொற்றிலிருந்து மீண்ட சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் என்ன?
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு, கடந்த காலாண்டில் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை பொருளாதாரத்தில் 4.9 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது சீனா.
உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாதான் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முதல் நாடு.
ஆனால் 2020ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவிலிருந்து மீண்டுவருகிறது.
இருப்பினும் இந்த வளர்ச்சி பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்ட 5.2 சதவீதத்தைக் காட்டிலும் குறைவாகத்தான் உள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் சீன பொருளாதாரம் 6.8 சதவீத அளவு குறைந்தது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன.
1992ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை சீனா பதிவு செய்ய தொடங்கியதிலிருந்து முதன்முறையாக சீன பொருளாதாரம் அப்போதுதான் பெரும் சரிவைச் சந்திருந்தது.
மீண்டும் வளர்ச்சி
திங்களன்று வெளியிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள், சீன பொருளாதாரம் வேகமாக சரிவிலிருந்து மீண்டு வருகிறது என்பதை காட்டுகிறது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு துல்லியமானது என நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காலாண்டின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் அதே காலாண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
சீனாவில் பணிகளை உருவாக்குதல் என்பது நிலையான ஒன்றாகத்தான் உள்ளது என்றும், அதனால் பொருள்களை வாங்கும் திறனும் பெரிதாக குறையவில்லை என்றும் ஹாங்காங்கில் உள்ள ஐஎன்ஜி வங்கியின் சீனாவைச் சேர்ந்த தலைமை பொருளாதார நிபுணர் தெரிவிக்கிறார்.
செப்டம்பர் மாதத்திற்கான வர்த்தக வளர்ச்சியும் சரிவிலிருந்து மீண்டுவருவதாகவே காட்டுகிறது. கடந்த வருடத்தில் செப்டம்பர் மாதத்தை ஒப்பிட்டு பார்த்தால் இந்த வருடம் ஏற்றுமதிகள் 9.9 சதவீதமாகவும், இறக்குமதிகள் 13.2 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த இரு தசாப்தங்களில் சீனா, சரசரியாக 9 சதவீத அளவு பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. பொருளாதாரமும், வர்த்தகமும் அதிகரித்திருந்தாலும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் சராசரி வேகம் சற்று மட்டுப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியின் வேகம் குறைந்ததற்கு கொரோனா பெருந்தொற்றை ஒரு காரணமாக கூறினாலும், அமெரிக்காவுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக போரும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
பணப்புழக்கம்
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த வருடத் தொடக்கத்தில் மத்திய வங்கி பொருளாதார சரிவை சரி செய்ய சில கொள்கைகளை தளர்த்தினாலும், சமீபத்தில் அந்த தளர்வை மீண்டும் இறுக்கியுள்ளது.
சீனாவின் ப்ரீமியர் லி குவாங், இந்த வருடத்திற்கான பொருளாதார இலக்கை முழுமையாக அடையச் சீனா மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என எச்சரித்திருந்தார். இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்தது.
ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் சீனாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல தொடங்கியுள்ளது என டோக்கியோவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவிக்கிறார்.
அதிகரிக்கும் உள்நாட்டுப் பயணங்கள்
மேலும் அக்டோபர் மாதம் சீனாவின் `பொன்னான வாரம்` என கருதப்படும் விடுமுறை நாட்கள் வந்தன. இதன்மூலம் அதிகரிக்கும் பயணத்தால் பொருளாதாரம் வளரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் பல லட்சக்கணக்கான சீனர்கள் உள்நாட்டிலேயே பயணித்து, செலவழித்து வருகின்றனர்.
கடந்த எட்டு நாட்கள் விடுமுறையில் ஏற்பட்ட 637 மில்லியன் பயணங்களால் சீனாவுக்கு பல கோடிகளில் லாபம் ஏற்பட்டுள்ளதாக சீன கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- நீட் தேர்வில் தனியார் பயிற்சி இன்றி வெற்றி: கோவை அரசுப் பள்ளி மாணவிகள் சாதித்தது எப்படி?
- MI Vs KKIP: அடுத்தடுத்த சூப்பர் ஓவர்களில் நடந்தது என்ன? - ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை அணி?
- பழங்கால ஈழத் தமிழர்களின் நாக வழிபாடு: வியப்பூட்டும் தொல்லியல் ஆதாரங்கள்
- இந்தியாவின் போர் கைதி பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஆன கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: