You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழர் வரலாறு: ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்
- எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார்.
இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தெற்காசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது.
நாகங்கள் பூமிக்குள் இருந்து வந்து, மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதனால், ஆதி காலத்து மக்கள் அவற்றை மண் புற்றுக்குள் வைத்து வழிபாடுகளை நடத்தியுள்ளமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
கட்டுக்கரை மற்றும் நாகபடுவான் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆகழ்வாய்வுகளின் போதே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆதாரங்களின் ஊடாக வட இலங்கை மக்கள், நாக வழிபாட்டை குல வழிபாடாக கொண்டிருந்தமை உறுதிப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள முழங்காவில் நகருக்கு அண்மையிலேயே இந்த பகுதிகளில் அமையப் பெற்றுள்ளன.
நாகபடுவான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாக வழிபாட்டு சான்றுகளில் சில, தெற்காசிய நாடுகளில் இதுவரை கிடைக்கவில்லை என பேராசிரியர் கூறுகின்றார்.
நாகபடுவான் - ஊரின் பெயர்
நாகபடுவான் என்ற பெயரில் நாகம் இருப்பதுடன், படுவம், படுவான் என்றால் ஆழமான குளம் அல்லது பெரிய குளம் என பொருட்படுகின்றது என கூறப்படுகின்றது.
இதன்படி, நாககுளம் என்ற பொருளை கொண்ட இந்த ஊரின் பெயர் மாற்றம் பெறாது, பண்டைய தமிழ்ச் சொல்லிலேயே நாகபடுவான் என அழைக்கப்படுவதாக பேராசிரியர் விளக்கமளிக்கின்றார்.
குறித்த இடத்திலிருந்து ஆதிகால பண்பாட்டுச் சின்னங்கள், சுடுமண்ணிலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாகம், நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கள் உள்ளிட்ட பழமை வாய்ந்த அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்கள், ஆதிகால மக்கள் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அத்துடன், நாகச் சிற்பத்தை பானையில் வைத்து வழிபட்டமைக்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்கு புதிய விடயங்களாக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.
குறித்த அகழ்வு குழியொன்றிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட, அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பெரிய பானை, மண்ணில் புதைக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் பாம்பு வந்து போவதற்கான வாய்ப் பகுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், அந்த பானையைச் சுற்றி மூடிய நிலையில் பாம்பு புற்றை அடையாளப்படுத்தும் 4 சிறு கலசங்களும் காணப்படவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பானையிலிருந்து மண் அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போது, நாக பாம்பின் சிலை பானையால் மூடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பானையின் மூன்று திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அவற்றில் அமர்ந்துள்ள தெய்வங்களின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது.
நான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகபாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது.
இந்த ஆதாரங்கள் பாம்பு புற்று வழிபாடு தோன்றுவதற்கு முன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோன்றிய தொன்மையான வழிபாட்டு மரபு எனக் கூறலாம் என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், ஒன்று மேற்பட்ட நாக வடிவங்கள், மண் சட்டிகளில் வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
நாக வழிபாட்டு ஆலயங்களில் நாகதோஷம் நீங்க செப்பு அல்லது மண் பாத்திரங்களில் நாக பாம்பை வைத்து ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபு ஆதிகாலத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என பேராசிரியர் கருதுகிறார்.
திருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரம் நகருக்கு வட பகுதியிலுள்ள பிராந்தியம், நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பெயர்கள் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15ஆம் நூற்றாண்டில் யாழ்பாணம், பட்டினம் என்ற பெயரும் தோன்றும்வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
பண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும், அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக் கூறப்பட்டு வந்ததற்கு தற்காலத்தில் வடஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததையே கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றது எனலாம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: