You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CSK vs DC: ஷிகர் தவான் சதம், தோனியின் முடிவு - சென்னை அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
முதல் பந்தில் இருந்தே விளாசும் தொடக்க வீரர் இல்லை, நடு ஓவர்களில் கோலி, ஸ்மித் போல ஆடுபவருமில்லை; இறுதி கட்டங்களில் டிவில்லியர்ஸ், ஹர்திக் பாண்ட்யா போல மிரள வைப்பவருமில்லை. நேர்த்தியான ஷாட்கள் ஆடுபவர் என்றும் கூற முடியாது.
இருந்தபோதிலும், தனது பிரத்யேக பாணியால், ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் பலமுறைகள் தனது அணி வெல்ல ஷிகர் தவான் காரணமாக இருந்துள்ளார்.
மிகவும் வேகமாக ஓடி ரன்கள் எடுப்பவர் இல்லை. பவுண்டரிகள், சிக்ஸர்கள் விளாசினாலும், ஆட்டமிழக்கும் வாய்ப்புகளை வழங்குவார் என்றே ஷிகர் தவான் குறித்து விமர்சகர்கள் மத்தியில் ஒரு பார்வை உண்டு.
ஆனால், அவருக்கே எதிரணி வாய்ப்புகளை வழங்கினால், அதுவும் 4 கேட்ச்கள், இரண்டு முறை ரன் அவுட் வாய்ப்பு என தொடர்ந்து எதிரணி வாய்ப்பளித்தால், மற்ற பேட்ஸ்மேன்கள் எப்படியோ, தவான் மறக்க முடியாத இன்னிங்ஸை விளையாடுவார்.
டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சனிக்கிழமை ஷார்ஜாவில் நடந்த போட்டியில் அது தான் நடந்தது.
பவர் பிளேயில் தடுமாறிய சிஎஸ்கே
போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே சாம் கரனின் விக்கெட்டை இழந்தது.
முதல் 6 ஓவர்களில் அந்த அணியால் 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஐபிஎல் தொடரிலேயே பவர் பிளே ஓவர்களில் மிக குறைந்த அளவு ரன்கள் எடுத்தது இதுவாகும்.
அதன் பின்னர் வாட்சன் - டுபிளஸஸிஸ் இணை அடித்தாட தொடங்கியது. மிக சிறப்பாக விளையாடிய டுபிளஸஸிஸ் 46 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.
தோனி 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, 16. 3 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்திருந்தது.
இறுதி ஓவர்களில் அதகளம்
ஆனால், கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே அணி எடுத்த 54 ரன்களால் 180 என்ற சவாலான இலக்கை அந்த அணி நிர்ணயிக்க முடிந்தது.
ராயுடு மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு விரைவாக ரன்கள் குவித்தனர்.
கடந்த போட்டியை போல இப்போட்டியிலும் ஜடேஜாவின் இறுதிகட்ட பங்கு அணிக்கு மிகவும் உதவியது. 13 பந்துகளில் 4 சிக்ஸர்களோடு அவர் 33 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
டெல்லியும் தொடக்கத்தில் தடுமாற்றம்
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய டெல்லி முதல் 2 விக்கட்டுகளை 5 ஓவர்களுக்குள் இழந்தது.
ஆனால் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் சரிவிலிருந்து மீள உதவினார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பவுண்டரிகள் அடித்த ஷிகர் தவான், குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அதிக அளவு ரன்கள் குவித்தார்.
விரைவாக அரைசதம் எடுத்த அவர், மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் தொடர்களில் தனது முதல் சதத்தை பதிவு செய்த தவான், 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அதேவேளையில் தீபக் சாஹர், தோனி, ராயுடு என தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் தவான் அளித்த கேட்ச்சை நழுவவிட்டது சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.
மைதானத்தில் சற்று பனிப்பொழிவு இருந்தது அவர்கள் கேட்ச்சை நழுவ விட்டதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் தவான் போன்ற பேட்ஸ்மேனுக்கு இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் என்ன நடக்குமோ, அது தான் நடந்தது.
தோனி எடுத்த முடிவு சரியா?
19-ஓவரை சிறப்பாக வீசிய சாம் கரன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதால், இறுதி ஓவரில் டெல்லி அணி 17 ரன்கள் எடுக்க வேண்டியாதாயிருந்தது.
ஷிகர் தவான் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகிய இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்த சூழலில், இடதுகை சுழல் பந்துவீச்சளரான ஜடேஜாவை தோனி இறுதி ஓவர் வீச அழைத்தது வியப்பளித்தது.
தனது ஆரம்ப ஓவர்களில் அதிக ரன்கள் அளித்த ஜடேஜா பந்துவீச, அக்ஷர் படேல் விளாசிய சிக்ஸர்களால் டெல்லி வென்றது.
தோனி எடுத்த முடிவு சமூகவலைத்தளங்களில் உடனே விவாதப்பொருளாக ஆனது. ஆனால் போட்டி முடிந்தவுடன் பேசிய தோனி, பிராவோ விளையாட முடியாமல் களத்தை விட்டு வெளியேறியதால் ஜடேஜாவை பந்துவீச அழைத்ததாக கூறினார்.
பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளதா?
2020 ஐபிஎல் தொடரில் இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே, 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதுவரை 6 புள்ளிகள் பெற்று, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் சென்னை அணி உள்ளது.
எஞ்சியுள்ள 5 போட்டிகளில் அதிக அளவு வெல்ல வேண்டும் என்பது மட்டுமல்ல, மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளையும் வைத்தே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது சாத்தியமாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: