வடிவேல் பாலாஜி மரணம் - சென்னை வீட்டில் அஞ்சலி செலுத்த குவிந்த ரசிகர்கள்

பட மூலாதாரம், VADIVEL BALAJI
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45 .
வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அவரை சேர்க்க அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தான், இன்று காலை அவர் உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜிக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காணொளி வடிவில் இந்த செய்தியை பிபிசி யூ-ட்யூப் பக்கத்தில் பார்க்க:வடிவேல் பாலாஜிக்கு என்ன நேர்ந்தது? காமெடி நடிகருக்கு நேர்ந்த துயரம்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
யார் இந்த வடிவேல் பாலாஜி?
தமிழக சின்னத்திரையில் பிரபல நடிகராக வடிவேல் பாலாஜி விளங்கினார். அவர் திரைப்பட நடிகர் வடிவேலு மீது அளப்பரிய அன்பு கொண்டவர். அதனால் தன் பெயருக்கு முன்னால் வடிவேலு என்ற பெயரை சேர்த்துக் கொண்டார்.
வடிவேல் பாலாஜி முதன் முதலாக ஜனவரி 25, 2008ல் நடந்த "கலக்கப்போவது யாரு?" நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் அவர் வெற்றி பெறவில்லை.
ஆரம்பத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரபலம் அடைந்த பாலாஜி, பின்னர் பெண் வேடம் உட்பட பல கெட்அப்களில் தோன்றினார். இதன் மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெருகியது.
'சிரிச்சா போச்சு', 'கலக்கப் போவது யாரு', 'ஜோடி நம்பர் ஒன்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
நடிகர் வடிவேலுவின் சாயல் இருப்பதால், அவரைப் போல் உடை அணிந்தவாறு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலாஜி அறிமுகமானார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'பந்தயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், சுட்ட பழம் சுடாத பழம், காதல் பஞ்சாயத்து, யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, தனது வீட்டில் இருந்தபடியே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் வடிவேல் பாலாஜி பகிர்ந்து கொண்டார். அப்போது கூட அவர் புன்னகை முகத்துடனேயே காணொளியில் பேசியிருந்தார்.
அவரது திடீர் மரணம், திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அதிர்ச்சியில் நண்பர்கள்
வடிவேல் பாலாஜியுடன் நெருக்கமாக சின்னத்திரை உலகில் பயணம் செய்த பலரும் அவரது மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
அவருடன் சின்னத்திரை உலகிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் 19 வருடங்களாக நடித்த ரோபோ சங்கர், வடிவேல் பாலாஜியின் மரணம் கடுமையான அதிர்ச்சிக்கு தன்னை உள்ளாக்கியதாகக் கூறி ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
"எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் வகையில் தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தக் கூடியவர் வடிவேல் பாலாஜி. மரணம் இப்படி கூட வருமா என நண்பனுடைய சாவை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது எனது குடும்பத்தினர் கூட அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். 10 நாட்களாக உயிருக்குப் போராடிய அவர் இப்போது நம்மோடு இல்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லோரும் பிரார்த்திப்போம். நல்ல கலைஞனுக்கு இப்படி ஒரு சாவை கொடுப்பதா என இறைவன் மீதே ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. எல்லோருக்கும் பிடித்த கலைஞன் வடிவேல் பாலாஜி" என்று ரோபோ சங்கர் தமது இரங்கலை பகிர்ந்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் பரணி வெளியிட்டுள்ள காணொளியில், சிறந்த கலைஞரும் மிகச்சிறந்த நண்பருமான வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று கூறி தமது இரங்கலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிற செய்திகள்:
- ரஃபால் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு ஏன் அவசியம்? - 10 முக்கிய தகவல்கள்
- கொரோனா வைரஸ்: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?
- 2019 - விளிம்பு நிலை மக்கள் தற்கொலைகளின் ஆண்டு: என்ன காரணம்?
- நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தின் வாயிலாக நியாயம் கிடைக்கவில்லை - முதல்வர் பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












