You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஷாந்த் சிங் மரணம்: ஊடக விவாதங்கள் பற்றி மும்பை உயர்நீதிமன்றம் என்ன கூறியது?
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விசாரணை போன்ற விவாத நிகழ்ச்சிகள், தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வழக்கின் போக்கை அது மாற்றும் வகையில் அமையலாம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மும்பை காவல்துறையில் தலைமை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளான பி.எஸ். பஸ்ரிச்சா, கே. சுப்ரமணியம், டி. சிவானந்தம்,சஞ்சீவ் தயாள், சதீஷ் சந்திர மாத்தூர், முன்னாள் ஆணையர்களான மகேஷ் சிங், தனஞ்சய் என். ஜாதவ், தீவிரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவர் கே.பி. ரகுவான்ஷி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் இன்று பரிசீலித்தது.
அப்போது நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளில் விசாரணை அமைப்பின் புலனாய்வை ஊடகங்கள் நடத்தும் விசாரணை வடிவிலான விவாதங்கள் பாதிக்கக்கூடும் என்பதால் அத்தகைய போக்கை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பிறகு இந்த விவகாரத்தில் பதில் அளிக்க இந்திய அரசு, செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம், செய்தி ஒளிபரப்பாளர்கள் தர நிர்ணய ஆணையம், மகராஷ்டிரா மாநில அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் விசாரணைக்காக, இன்று மூன்றாவது நாளாக ரியா சக்ரபொர்த்தி, அவரது தந்தை இந்தர்ஜீத் சக்ரபொர்த்தி, ரியாவின் சகோதரர், சுஷாந்தின் தொழில் கூட்டாளி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
முன்னதாக, இந்த வழக்கில் அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபொர்த்தி மீது சிபிஐ, அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புத்துறையின் விசாரணை இறுகுவதாக செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து, ரியாவுக்கு ஆதரவாக பல பாலிவுட் திரை நட்சத்திரங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கோலிவுட்டில் அரிதாகவே அந்த வழக்கு குறித்தும் ரியாவின் நிலை குறித்தும் பேசுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களின் மனநிலையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள திரைப்பிரபலங்கள் சிலரை தொடர்பு கொண்டு பிபிசி பேச முயன்றது. ஆனால், பலரும் விசாரணை நடந்து வருவதாகக் கூறி தட்டிக்கழித்த வேளையில், பிபிசியிடம் பேசிய நடிகை கஸ்தூரி மட்டும், "வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
வேறு நடிகைகளோ, நடிகர்களோ, திரை பிரபலங்களுக்காக வழக்கமாக குரல் கொடுப்பவர்களோ இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை.
மெளனம் கலைந்த பாலிவுட்
"இந்த வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியிருக்கும் வேளையில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரியா சக்ரபொர்த்தியை ஏதோ ஒரு குற்றிவாளி போல ஊடகங்கள் சித்தரிக்க முற்படுவதையும், இழிவுபடுத்த முயல்வதையும் பார்க்கும்போது எனது இதயம் சுக்குநூறாகிறது" என்று பாலிவுட் திரைநட்சத்திரம் வித்யாபாலன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை லக்ஷ்மி மஞ்சு தமது டிவிட்டர் பக்கத்தில் "ரியாவுக்கு எதிரான இழிவுபடுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த திரைத்துறை விழித்தெழ வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகை வித்யா பாலன் அவரது பதிவுக்கு அனுப்பிய பதிலில், "இந்த விஷயத்தை உரத்துக் குரல் கொடுத்த உங்களுக்கு கடவுளுடைய ஆசீர்வாதங்கள். நேசமிகு இளைய நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மரணம் துயரத்தை ஏற்படுத்தும் அதே நேரம் அவர் "ஊடக சர்க்கஸ் ஆகியிருப்பது துரதிருஷ்டவசமானது."
"அதே நேரம் ஒரு பெண்ணாக ரியா சக்ரபொர்த்தியை இழிவுபடுத்துவதை பார்க்கும்போது எனது இதயம் சுக்குநூறாகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியாக இருக்க வேண்டாமா அல்லது நிரபராதியாக நிரூபிக்கப்படும்வரை குற்றவாளியாக இப்போது கருதப்படுகிறதா? குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காவது நாம் சிறிது மதிப்பளித்து சட்டம் அதன் கடமையை செய்ய அனுமதிப்போம்" என்று வித்யா பாலன் கூறியிருந்தார்.
இதேபோல, ரியா சக்ரபொர்த்தியின் நீண்ட கால தோழியான சிபானி தண்டேகரும் நான் உன்னுடனேயே இருக்கிறேன் #JusticeforRhea என்று குறிப்பிட்டு தமது கருத்தை பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் ரியா சக்ரபொர்த்திக்கு ஆதரவான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்யத்தொடங்கினார்கள்.
மற்றொரு பிரபல நடிகையும் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தவருமான டாப்சீ பன்னு, "எனக்கு சுஷாந்தையோ ரியாவையோ தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், எனக்கு ஒன்று தெரியும். அது நீதித்துறையை முந்திக்கொண்டு ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் முன்பே அவரை குற்றவாளியாக்கப்படுவதை புரிந்து கொள்ள மனிதம் மட்டுமே தேவை. உங்களுடைய புனிதத்துக்காகவும் இறந்தவரின் புனிதத்துக்காகவும் சட்டத்தை நம்புங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார்.
சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக மும்பை நகர காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பிஹார் காவல்துறை பதிவு செய்த வழக்கை அம்மாநில அரசு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றமும் பின்னர் உறுதிசெய்தது.
முன்னதாக, சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும் பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபொர்த்து மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
சுஷாந்தின் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவரது பணத்தை அவரது முன்னாள் தோழி ரியா அபகரித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் ஊடகங்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புகார் தொடர்பாக ரியா சக்ரபொர்த்தி சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் . பின்னர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் இரு தினங்களுக்கு முன்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு நேர்காணல் அளித்ததும் சுஷாந்த் சிங் மரணம் மற்றும் ரியாவுக்கு நீதி கேட்டு சமூக ஊடகங்களில் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: