சுஷாந்த் சிங் மரணம்: ரியா சக்ரவர்த்தி சிக்குவாரா? இறுகும் சிபிஐ விசாரணை

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையை இந்திய புலனாய்வுத்துறை விசாரித்து வரும் நிலையில், அவருடன் கொண்டிருந்த உறவு, அவரது பணத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகையும் சுஷாந்தின் முன்னாள் தோழியுமான ரியா சக்ரவர்த்தி.

சுஷாந்தின் மரணம் தொடர்பான தகவல் வெளிவரத் தொடங்கியதில் இருந்தே ரியா சக்ரவர்த்திக்கு அதில் தொடர்பு இருப்பதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் குற்றம்சாட்டி வந்தார்.

இது தொடர்பாக அவர் பிஹார் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் அந்த வழக்கு சிபிஐக்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டது. சமூக ஊடகங்களிலும் சுஷாந்த் சிங்கின் மரணம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் விவகாரமாக கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்தும் ரியா சக்ரபர்த்திக்கும் அவருக்கும் இருந்த நெருக்கம் குறித்தும் அதிகமாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு பிஹார் அரசு உத்தரவிட்டதை மகராஷ்டிராவைச் சேர்ந்த ரியா சக்ரவர்த்தியும் அம்மாநில அரசும் ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோதும், சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், ஆஜ் தக் செய்தித் தொலைக்காட்சிக்கு ரியா சக்ரவர்த்தி அளித்த பேட்டியில், சுஷாந்த்துடன் கொண்டிருந்த உறவு, அவரது நடத்தை, செலவின பாணி, நண்பர்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஐரோப்பா பயணத்தின் ரகசியம்

அவரிடம் நேர்காணல் நடத்திய ராஜ்தீப் சர்தேசாய், "சுஷாந்துடன் பழகியபோது இருவரும் மேற்கொண்ட ஐரோப்பா பயண அனுபவத்தில் அவருக்கு ஒருவித மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தீர்களா" என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு ரியா, "ஐரோப்பா புறப்படும் நாளன்று, சுஷாந்த் என்னிடமும், மற்றவர்களிடமும், தனக்கு விமான பறக்கும்போது க்ளாஸ்ட்ரோபோபியா எனப்படும் மூடிய பகுதியில் இருப்பது போன்ற அச்சம் ஏற்படும் என்று சொன்னார். அதற்கு அவர் மோடாஃபினில் என்ற மருந்து எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்".

"நாங்கள் பாரிஸில் தரையிறங்கியபோது, முதல் மூன்று நாட்களுக்கு, சுஷாந்த் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவில் செய்யமுடியாத எல்லாவற்றையும், அங்கே செய்து தன்னுடைய மற்றொரு குதூகலமான பக்கத்தை எனக்கு காட்டுவதாக அவர் சொல்லியிருந்தார். ஏனென்றால், அங்கு அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ள கொள்ளமாட்டார்கள் என்று அவர் நினைத்தார்." என்று ரியா கூறினார்.

ஆனால், ஸ்விட்ஸர்லாந்த் சென்றபோது சுஷாந்த் சரியாகவே இருந்தார். நல்ல எனர்ஜி இருந்தது. வெளியே வந்தார். மகிழ்ச்சியாக இருந்தார். பிறகு நாங்கள் இத்தாலி சென்றபோது, பழம்பெரும் கட்டடக்கலை நிறைந்த விடுதியில் தங்கினோம். அங்கு அவர் பழையபடி பயந்துகொண்டு அறையை விட்டு வெளியே வரவேயில்லை" என்று ரியா கூறினார்.

மன அழுத்த நோய் உள்ளதா?

"அன்று இரவு அவரால் தூங்க முடியவில்லை. இங்கு எதோ இருக்கிறது என்று சொன்னார். கெட்ட கனவு கண்டிருப்பார் என்று நினைத்தேன். கவலையாக இருந்தது. திடீரென்று ஏதாவது உருவங்கள் தென்பட்டால், அது பொதுவாக நமது மனப்பிரம்மை என நினைப்போம். ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. நாம் இங்கிருந்து சென்றுவிடலாம் என்று நான் சொன்னேன். ட்ரிப் முழுவதும் ரூமில் இருந்து வெளியே வர அவர் விரும்பவில்லை. அப்போது, 2013இல் இதே போல தனக்கு ஏற்பட்டதாக அவர் சொன்னார். அப்போது அவர் ஒரு மனநல மருத்துவரை சந்தித்தார். அவரது பெயர் ஹரேஷ் ஷெட்டி என நினைக்கிறேன். அவர் தான் சுஷாந்தை மோடாஃபினில் மருந்தை உட்கொள்ள அறிவுறுத்தியிருந்தார். அதன்பிறகு அவர் சரியாக இருந்தார். இடையிடையே ஆன்க்ஸைட்டி அட்டாக்ஸ் ஏற்படும். ஆனால், அப்போதெல்லாம் அவர் மிகவும் கவலையாக இருந்தார். இந்த காரணங்களால் எங்களுடைய ஐரோப்பா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பினோம்" என்று ரியா கூறுகிறார்.

இதையடுத்து, காதலர்களின் சுற்றுப்பயணத்தில் உங்களுடைய சகோதரர் உடன் வரலாமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு ரியா, "சுஷாந்துக்கும் எனது சகோதரர் ஷோவிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஷோவிக்கை எனது சக்களத்தி என்று சிலர் நகைச்சுவையாக சொல்வார்கள். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை. சுஷாந்த், நான், ஷோவிக் ஆகிய மூவரும் RHEALITYX என்ற நிறுவனத்தை எங்களுடைய பயணத்துக்கு முன்பாக தொடங்கியிருந்தோம். அவருக்கு என் மீது காதல் இருந்தது என்றே எனக்கு தோன்றியது. அவரது கனவு நிறுவனமான ஆர்டிஃபிஷல் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தில் எனது பெயரையும் இணைத்திருந்தது அதற்கு உதாரணம் என்று கருதினேன். அவரை நிர்பந்தித்து எனது பெயரை இணைத்தேன் என்ற குற்றச்சாட்டு என்மீது விழும் என்று நான் நினைக்கவேயில்லை. அந்த நிறுவனத்தில் நான், எனது சகோதர் மற்றும் சுஷாந்த் சமமான பார்ட்னர்கள். இதற்காக, மூவரும் தனித்தனியே, 33 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டியிருந்தது. என் சகோதரருக்கு சரியான வேலை இல்லை. அதனால் அவரது பங்கையும் சேர்த்து நான்தான் கொடுத்தேன் என்றார் ரியா.

"சுஷாந்த் பணத்தை நான் நம்பியிருக்கவில்லை"

ஆனால், நீங்களும் உங்கள் குடும்பமும், சுஷாந்தை நம்பியே இருக்கிறீர்கள் என்றும் ஐரோப்பா பயணத்துக்கு அவர்தான் பணம் செலவழித்ததாகவும் சொல்லப்படுகிறதே? என கேட்டபோது, ரியா மறுத்தார்.

"பாரிஸில், ஷியன் என்ற கம்பெனிகாக எனது ஷூட் திட்டமிடப்பட்டிருந்தது. அது ஒரு ஆயத்த ஆடை நிறுவனம். அந்த அழைப்புக்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அந்த ஃபேஷன் ஷோவில் கலந்துகொள்ள என்னிடம் கூறப்பட்டது. எனது புறப்பாடு, வருகைக்கான பிஸினஸ் கிளாஸ் விமான பயணச்சீட்டு, ஹோட்டல் புக்கிங் அனைத்தும் அந்த நிறுவனத்தால் செய்யப்பட்டது. அத்துடன் பாரிஸ் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் டூர் சென்றால் நன்றாக இருக்கும் என்று கருதிய சுஷாந்த், அவற்றை ரத்து செய்து விட்டு, எங்களுக்கான பயணச்சீட்டை அவரே முன்பதிவு செய்தார். தங்கும் விடுதி கட்டணத்தையும் அவரே கொடுத்தார். எனக்கு இதனால் எந்த பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால், ட்ரிப் மீக நீண்டதாக உள்ளதே என்றும் அதிக பணம் செலவாகிறதே என்றும் நான் நினைத்தேன். அவர் எப்போதுமே, இப்படித்தான். அரசருடைய வாழ்க்கையை அவர் வாழ்பவராக இருந்தார்" என்று ரியா கூறினார்.

மேலும் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ரியா, "ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன், தனது ஆறு நண்பர்களுடன் சுஷாந்த் தாய்லாந்து சென்றார். அந்த பயணத்துக்காக மட்டும் அவர் 70 லட்சம் ரூபாய் செலவு செய்தார். தனியார் ஜெட் எடுத்துக்கொண்டு சென்றார். இது சுஷாந்தின், ஆடம்பர வாழ்க்கை தேர்வு. நான் சுஷாந்தின் பணத்தால் வாழவில்லை. மாறாக ஒரு தம்பதி போல வாழ்ந்தோம்" என்கிறார் ரியா.

சுஷாந்த் தந்தையின் புதிய காணொளி

ரியாவின் இந்த நேர்காணல் வெளியான சில மணி நேரத்தில் சுஷாந்த்தின் தந்தை ஒரு காணொளியை தயாரிக்கிறார். அதை ஏஎன்ஐ செய்தி முகமை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறது.

அதில், ரியா சக்ரபர்த்தி நேர்காணலில் வெளியிடும் தகவல்களுக்கு முரணாக அவரது தந்தை கே.கே. சிங் கடுமையான குற்றச்சாட்டுளை முன்வைக்கிறார்.

``என் மகன் சுஷாந்திற்கு ரியா சக்ரபர்த்தி தான் நீண்ட காலமாக விஷம் கொடுத்து வந்திருக்கிறார். அவர் தான் கொலையாளி. அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கிறார்.

இதுபோன்ற காணொளியை சுஷாந்த் மரணம் நடந்த சில வாரங்களிலும் கே.கே. சிங் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக, ரியா சக்ரபர்த்தி மற்றும் சிலர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவுத் துறையினர் வழக்குப் பதிவு செய்த ஒரு நாள் கழித்து கே.கே. சிங்கின் கோரிக்கை வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் தடுப்புத்துறை வழக்கு

போதைப் பொருள் அல்லது மூளையின் செயல்பாட்டை மறக்கச் செய்யும் பொருட்களைப் பயன்படுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் பிரிவின் கீழும், கிரிமினல் சதிக்கு உடைந்தையாக இருப்பதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் பிரிவின் கீழும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா தலைமையில் டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை அந்தக் குழு விசாரிக்கும் என்றும் அதன் தலைமை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கூப்பர் மருத்துவமனையில் சவக்கிடங்கு அறைக்குள் ரியா சக்ரபர்த்தி நுழைய எப்படி அனுமதிக்கப்பட்டது என்று கேள்வி கேட்டு கூப்பர் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மும்பை காவல் துறைக்கும் மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளது. எந்த விதியின் கீழ் ரியா சக்ரபர்த்திக்கு அந்த அனுமதி அளிக்கப்பட்டது என அதில் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.

ராஜ்புத்தின் தணிக்கை அதிகாரி சந்தீப் ஸ்ரீதர் நேற்று சான்டாகுரூஸில் டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில், மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.

சுஷாந்த் பணப்பரிவர்த்தனைகள் ஆய்வு

ஆகஸ்ட் 3 ஆம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தினர். ``ராஜ்புத்தின் வங்கிக் கணக்குகள் பரிவர்த்தனைகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து, தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். தேவை ஏற்பட்டால் ஸ்ரீதரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும்'' என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் ஓர் அதிகாரி தெரிவித்தார்.

ரியா சக்ரவர்த்திக்கு எதிராக ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கடந்த ஜூலை 28 ஆம் தேதி பிஹாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் தனியாக பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கை ஜூலை 31 ஆம் தேதி பதிவு செய்தனர். அந்த வழக்கில் அவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சிபிஐ அதிகாரிகள் மும்பையில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் இல்லத்தில் வைத்து, ரியாவின் சகோதரர் ஷோவிக்கிடமும் சுஷாந்தின் குடியிருப்பில் தங்கியிருந்த சித்தார்த் பித்தானியிடமும் இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து ரியாவையும் விசாரணைக்கு அழைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விசாரணை நடவடிக்கைக்கு முன்னதாகவே, அதிகாரிகளிடம் கூற வேண்டிய தகவல்களை, ஊடகங்களிடம் ரியா கசியச் செய்திருப்பதாக வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள் கருதுகிறார்கள்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக அடுத்தடுத்து மும்பையிலும் பாட்னாவிலும் நடக்கும் முன்னேற்றங்களுக்கு மத்தியில் இந்த வழக்கில் ரியா சக்ரபர்த்திக்கு நெருக்கமானவர்களை இலக்கு வைத்து சிபிஐ தனது விசாரணை வளையத்தை இறுக்கி வருகிறது. இதனால், இந்த வழக்கில் அடுத்த வரும் நாட்களில் பல முக்கிய திருப்பத்தை எதிர்பார்க்கிறோம் என்று டெல்லி சிபிஐ தலைமையகத்தில் உள்ள அதன் உயரதிகாரிகள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: