You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஷாந்த் சிங் ராஜ்புத்: ’’உன்னை நேசிக்க வாழ்நாள் இருக்கிறது’’- காதலி ரியா உருக்கமான பதிவு
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில், அவரது தோழி ரியா சக்ரபர்த்தி இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான கடிதத்தைப் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில், அவரது தோழியும் நடிகையுமான ரியா சக்ரபர்த்தி 30 நாட்கள் கழித்து இன்று இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
''என் உணர்ச்சிகளை எதிர்கொள்ள இன்னும் சிரமப்படுகிறேன். காதல் மீது எனக்கு நம்பிக்கை வந்ததும், அதன் சக்தியை புரிந்துகொண்டதும் உன்னால்தான்.''
''எளிமையான கணக்கு ஈக்வேஷன் கூட வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்கும் என்பதை நீ எனக்குக் கற்றுக்கொடுத்தாய். உன்னிடம் இருந்து தினமும் கற்றுக்கொள்வேன் என உறுதியளித்தேன்,'' என்று ரியா சக்ரபர்த்தி பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "நீ இப்போது இன்னும் அமைதியான இடத்தில் இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். பால்வெளிகளும், நிலவும், நட்சத்திரங்களும் 'சிறந்த இயற்பியலாளரை' வரவேற்றிருக்கும்.''
''அன்பும், மகிழ்ச்சியும் கொண்ட நீ நட்சத்திரங்களை ஒளிரச் செய்வாய். ஒரு அழகான மனிதருக்கான எடுத்துக்காட்டாக இருந்தாய். உலகம் கண்ட சிறந்த அதிசயம் நீ.'' என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
''நம் காதலை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றையும் திறந்த மனதுடன் நேசித்த நீ, நம் அன்பு நீளும் என்பதையும் காட்டியிருக்கிறாய்.''
''உன்னை இழந்து 30 நாட்கள் ஆகிறது. ஆனால், உன்னை நேசிக்க இந்த வாழ்நாள் இருக்கிறது.'' என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் தோழியான அங்கிதா லோகண்டேவும், இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.
அவரது வீட்டுப் பூஜையறையில் விளக்கு எரியும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ''கடவுளின் குழந்தை,'' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்?
1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார் சுஷாந்த். பிறகு, பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்த இவர், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்கத் தொடங்கினார்.
திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார். பின்னர் அவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
அதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.
'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.
'தோனி அண்டோல்ட் ஸ்டோரி' என்னும் படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- ‘பென்னிக்ஸ், ஜெயராஜ் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், சமூகத்தின் மீதான தாக்குதல்’ - 'லாக்கப்' சந்திரகுமார்
- புவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்
- நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை
- நிறைய நாடுகள் தப்பான வழியில் போகின்றன, நிலைமை மோசமாகும்: உலக சுகாதார நிறுவனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :