கோயம்புத்தூர் சாமிக்கண்ணு வின்சென்ட்: நீங்கள் சினிமா காதலரா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் இவரை அறிந்திருக்க வேண்டும்

    • எழுதியவர், மு. நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஒன்பதாவது கட்டுரை.)

நீங்கள் சினிமா ரசிகரா? திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை விரும்புபவரா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் சாமிக்கண்ணு வின்சென்ட் குறித்து அறிந்திருக்க வேண்டும். இந்த டிஜிட்டல் உலகில் திரைப்படம் பார்க்கும் மீடியம் ஓடிடி ஆக அப்டேட் ஆகி இருந்தாலும், தொடக்கக் காலத்தில் திரையரங்கைத் தோளில் சுமந்து திரிந்தவர் சாமிக்கண்ணு.

தமிழகத்திலிருந்து புறப்பட்டு லக்னெள, லாகூர், பெஷாவர் என பல பகுதிகளுக்குப் பயணம் செய்து திரைப்படங்களை திரையிட்ட தமிழர் சாமிக்கண்ணு வின்சென்ட்.

யார் இந்த சாமிக்கண்ணு?

தம் வாழ்வை, ரயில்வே பணியாளராக தொடங்கியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். இவர் வாழ்வு ரயில்வே பணியிலிருந்து சினிமாவுக்கு தடம் மாறியது மிகவும் சுவாரஸ்யமானது. இது குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார், இந்திய திரைப்பட வரலாற்று ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன்.

அவர், " சாமிக்கண்ணு 1905ஆம் ஆண்டு அப்போது திருச்சியில் ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஃபிரான்சை சேர்ந்த டுபாண்ட் என்பவர் அப்போது ஊர் ஊராக சலனப்படங்களை திரையிட்டுக் கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து திருச்சி வந்த அவருக்கு, எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமானது. அவரிடமிருந்து புரொஜக்டரை ரூபாய் 2250க்கு வாங்குகிறார் சாமிக்கண்ணு." என்கிறார்.

சாமிக்கண்ணு வின்சென்ட் குறித்து விரிவாக ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் தியடோர் பாஸ்கரன்.

அதுபோல கடந்தாண்டு மறைந்த (2019) கோவையைச் சேர்ந்த இரா.பாவேந்தனும் சாமிக்கண்ணு குறித்து விரிவாக ஆய்வு செய்து, அவர் புகைப்படம், அவர் கட்டிய திரையரங்குகளின் புகைப்படம் என பல தரவுகளைப் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்தவர்.

ஒரு புரொஜெக்டரை வாங்குகிறார் அவ்வளவுதானே, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், ஏன் இவரைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உண்மையில் இந்த புரொஜெக்டர் தமிழகத்தில் ஒரு சமூக புரட்சியையே ஏற்படுத்தியது என்று பதிவு செய்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அது குறித்து நாம் தெரிந்துகொள்வதற்கு முன்பு சாமிக்கண்ணு கரங்களில் டுபாண்ட்டின் புரொஜெக்டர் வந்ததன் பின் இருந்த கஷ்டங்களையும், வந்த பிறகு என்னவெல்லாம் நடந்தது என பார்ப்போம்.

மாயக்கருவியின் மீதான மோகம்

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பேரன் வின்ஃப்ரெட் பவுலை சந்தித்தேன். அப்போது அவர் சினிமா மீதான சாமிக்கண்ணுவின் ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டார்.

வின்ஃப்ரெட், "திருச்சியிலிருந்த போது டுபாண்ட் திரையிட்ட லைஃப் ஆஃப் ஜீஸல் திரைப்படத்தை சாமிக்கண்ணு வின்சென்ட் பார்த்திருக்கிறார். அப்போது தான் அந்த மாயக்கருவி மீது சாமிக்கண்ணு வின்சென்ட்க்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது. டுபாண்ட் அந்த புரொஜக்டரை விற்பதை அறிந்து அவரை அணுகி இருக்கிறார். அவர் அப்போது அதற்கு வைத்த விலை ரூபாய் 2250. அந்த காலகட்டத்தில் அது மிகப்பெரிய தொகை. ரயில்வேயில் நல்ல வேலையில் இருக்கிறார். இந்த திரைப்படகருவி மூலமாக பணம் ஈட்ட முடியுமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், தம் எதிர்காலத்தைப் பணையம் வைக்க முடிவு செய்து குடும்பத்தினரிடம் அந்த கருவியை வாங்க பணம் கேட்டிருக்கிறார். அவரது அக்கா மற்றும் பிற உறவினர்கள் கொடுத்த தொகையைக் கொண்டு அந்த கருவியை வாங்குகிறார்," என்று கூறினார்.

தமிழருடன் தொடர்புடைய டூரிங் டாக்கீஸின் வரலாறு இந்த புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது.

புரொஜெக்டரை சுமந்து கொண்டு, அந்த தொழில் குறித்து எதுவும் தெரியாமல், சில மெளன படங்களின் ரீல்களுடன் எல்லா திசைகளிலும் பயணித்து இருக்கிறார்.

டூரிங் சினிமாவுடன் திரிந்த தூதுவன்

ஒரு டூரிங் சினிமாகாரனாக அவர் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியதும் திருச்சியில்தான்.

திருச்சி பிஷப் கல்லூரி அருகே ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து, முதல் முதலாக 'லைப் ஆஃப் ஜீஸஸ்` திரைப்படத்தைத் திரையிடுகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தமிழகமெங்கும் பயணித்திருக்கிறார். பின்னர் அப்போதைய பம்பாய், லக்னெள, லாகூர், பெஷாவர் என பல்வேறு இடங்களுக்கு பயணித்திருக்கிறார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று பதிவு செய்கிறார் தியடோர் பாஸ்கரன்.

திசையெங்கும் பயணித்த அவர் 1909ஆம் ஆண்டு சென்னை திரும்பி, அங்கு பாரீஸ் கார்னர் பகுதியின் அருகே டெண்ட் அமைத்து துண்டுப்படங்களை திரையிடத் தொடங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பதே புரொஜக்டருக்கான முகவராகவும் செயல்பட்டு தென் இந்தியா முழுவதும் சினிமா பரவ ஓர் ஊக்கியாக சாமிக்கண்ணு இருந்திருக்கிறார் என்றும் தியடோர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சாமிக்கண்ணு வின்சென்ட் குறித்து ம. செந்தமிழன் தனது 'பேசா மொழி' ஆவணப்படத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். சாமிக்கண்ணுவை ஒரு தூதுவனாக மக்கள் பார்த்தார்கள் என தனது ஆவணப்படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் செந்தமிழன்.

பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத அந்த காலகட்டத்தில் மக்கள் சாமிக்கண்ணுகாக காத்திருந்திருக்கிறார்கள். அவர் படங்கள் திரையிடும் நாட்களைப் பண்டிகை தினம் போல கொண்டாடி இருக்கிறார்கள் என 'பேசா மொழி' ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் அவர்.

சலனப்படங்கள், ஒரு புது அனுபவத்தைத் தந்தாலும், பேசா படங்களைப் பார்ப்பது மக்களுக்கு ஒருவிதமான அயர்ச்சியை தந்திருக்கிறது. அதனால் படங்களுக்கு மத்தியில் குஸ்தி நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சாமிக்கண்ணு வின்சென்ட் ஒரு மெஜிசியனாகவும் இருந்திருக்கிறார். திரையிடலுக்கு மத்தியில் மக்களை உற்சாகப்படுத்துவதற்காக மேஜிக் நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி இருக்கிறார்.

ஆனால் இது அவருக்கு ஒரு பிரச்சனையாகவும் ஆகி இருக்கிறது என குறிப்பிட்டார் வின்சென்டின் உறவினரான வின்ஃப்ரெட்.

அவர், "கிறிஸ்துவ மத போதகர்கள் இந்த மேஜிக் குறித்து அதிருப்தியை வெளியிட்டார்கள். இதனை தெய்வநிந்தனை என்றார்கள். அவர்களை நேரில் சந்தித்த வின்சென்ட் இது மந்திரம் அல்ல வெறும் தந்திரம் என நிரூபித்து இருக்கிறார். அதன் பிறகே மதபோதகர்கள் அவருக்கு பிரச்சனை தருவதை நிறுத்தி இருக்கிறார்கள்," என குறிப்பிடுகிறார்.

டூரிங் சினிமாவில் இருந்து தியேட்டருக்கு

டூரிங் சினிமாவுடன் ஒரு தூதுவனாக திரிந்த வின்சென்ட் பின்னர் கோவையில் வெரைட்டி ஹால் மற்றும் பேலஸ், எடிசன் திரையரங்குகளை தொடங்கி இருக்கிறார்.

பின்னாளில் டிலைட் என்று அழைக்கப்பட்ட வெரைட்டி ஹாலில் இந்தி படங்களும், பேலஸ் திரையரங்கில் ஆங்கில படங்களும், எடிசன் தியேட்டரில் தமிழ் படங்களும் திரையிடப்பட்டன என்று அவருடனான ஒரு சந்திப்பின் போது கூறினார் இரா. பாவேந்தன்.

திரைப்பட நடிகர் சத்யராஜ் தனது பதின்ம பருவத்தில் டிலைட் திரையரங்கில் ஏராளமான திரைப்படங்கள் பார்த்திருக்கிறார்.

டிலைட்டில் ஷோலே திரைப்படம் 25 வாரங்களுக்கு மேலாக ஓடியதாக ஒரு நேர்காணலில் பதிவு செய்கிறார் சத்யராஜ்.

அதுமட்டுமல்லாமல், தனது தாத்தா காலிங்கராயரும், சாமிக்கண்ணுவும் நல்ல நண்பர்கள் என்றும், காலிகராயர் வெரைட்டி ஹால் திரையரங்கினை வாங்க விரும்பினார் என்றும் ஆனால் அவரது உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார் சத்யயராஜ்.

இந்த திரையரங்கின் காரணமாகவே இப்போது கோவையில் இருக்கும் வெரைட்டி ஹால் சாலைக்கு இப்பெயர் சூட்டப்பட்டதாக குறிப்பிடுகிறார் இரா.பாவேந்தன்.

டூரிங் டாகீஸ், தியேட்டர் என தனது சினிமா பயணத்தில் திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார். 1933ஆன் ஆண்டு பயோனிர் ஃப்லிம்ஸுடன் இணைந்து வள்ளி திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். சம்பூர்ண ஹரிசந்திராவும், சுபத்ர பரிணயமும் இவர் தயாரிப்பில் வந்த திரைப்படங்களே.

சாமிக்கண்ணு ஏற்படுத்திய சமூக புரட்சி

சாதி கட்டமைப்பு வேரூன்றி இருந்த தமிழ் சமூகத்தில் அதனைக் கொஞ்சமாவது மட்டுப்படுத்துவதில் இந்த டூரிங் டாக்கீஸ்கள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. அப்போது டூரிங் டாக்கீஸிலும் சாதிய பிரதிபலிப்பு இருந்தாலும், குறைந்தபட்சம் அனைத்து சமூகத்தினரும் ஒரே இடத்தில் கூடும் இடமாக இது இருந்திகிறது என்பதை `பேசா மொழி` இயக்குநர் ம. செந்தமிழன் பதிவு செய்கிறார்.

இவை அனைத்தையும் கடந்து மின்சாரக் கூடம் அமைத்து சிறிய அளவில் மின்சார உற்பத்தியிலும் சாமிக்கண்ணு ஈடுபட்டார். இவரே இங்கிலீஷ் கிளப், புனித ஃபிரான்சிஸ் கான்வண்ட், இம்பிரீயல் வங்கி ஆகியவருக்கும் இவர் மின் விநியோகம் செய்திருக்கிறார். தான் திரையிடும் படங்களுக்கான போஸ்டர் தேவைகளுக்காக அச்சு தொழிலில் ஈடுபட்ட இவர். அதனை ஊக்குவிக்கவும் செய்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார் இரா.பாவேந்தன்.

செல்லரித்துக் கிடக்கும் வரலாறு

சாமிக்கண்ணு மட்டுமல்ல 1916ஆம் ஆண்டு தென்னகத்தின் முதல் சலனப்படமான "கீசக வதம்" படத்தை தயாரித்து வெளியிட்டவர் ரங்கசாமி நடராஜ முதலியார், சென்னையில் முதல்முதலாக விமானம் தீவுத்திடலில் வந்திறங்கிய போது அந்த நிகழ்வை படமாக்கிய மருதமுத்து மூப்பனார், தானே சுயம்பாக கற்று சென்னை ஃப்லிம் லேபரட்டரி அமைத்து படம் தயாரித்த ஜோசஃப் டேவிட் என எத்தனையோ தமிழர்கள் தமிழ் சினிமாவிற்கு வியத்தகு பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் சாமிக்கண்ணு குறித்தாவது சில ஆவணங்கள் உள்ளன. ஆனால் மருதமுத்து மூப்பனார், ஜோசஃப் டேவிட் ஆகியோரின் வரலாறு இன்று அந்த துறையில் இருக்கும் பலருக்கே தெரியாது என்பதுதான் பெருஞ்சோகம். ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே கோலோச்சிய ஒரு துறையில் தமிழர்கள் வியத்தகு சாதனைகளை புரிந்திருக்கிறார்கள். ஆனால், வரலாற்று பக்கங்களில் அவை செல்லறித்து கிடக்கின்றன.

மலையாளத்தின் முதல் மௌனத் திரைப்படமான விகதகுமாரன் திரைப்படத்தை இயக்கிய தமிழர் ஜே.சி.டேனியலை கொண்டாடுகிறது மலையாள திரை உலகம். அவர் குறித்து ஒரு திரைப்படமே வந்திருக்கிறது. சலனபடங்களின் முன்னோடிகளில் ஒருவரான ரகுபதி பிரகாசாவின் பேரில் ஆந்திரா அரசு ஒரு விருதை ஏற்படுத்தி இருக்கிறது என பதிவு செய்கிறார் தியடோர்.

ஆனால், தமிழ்நாட்டில் அப்படியான எந்த விஷயமும் நடக்கவில்லை என்பது சினிமா வரலாற்று ஆய்வாளர்களின் ஆதங்கம்.

இத்தனைக்கும் தமிழ் சினிமா உலகம் தமிழகத்திற்கு ஐந்து முதல்வர்களைத் தந்திருக்கிறது. ஆனால், தமிழ் சினிமா முன்னோடிகள் குறித்த எந்த ஆவணமும் காக்கப்படவில்லை.

குறிப்பாக தியடோர் பாஸ்கரனின் மெசேஜ் பியரெர்ஸ், சினிமா கட்டுரைகளின் தொகுப்பாக வந்த சித்திரம் பேசுதடி, பாம்பின் கண் ஆகிய புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவையே சினிமா குறித்த முக்கிய ஆவணங்களாக உள்ளன.

தியடோர் பாஸ்கரன், நிழல் திருநாவுக்கரசு, தமிழ் ஸ்டுடியோ அருண் மோ, எழுத்தாளர் பாமரன் என விரல்விட்டு எண்ணக்கூடிய தனி மனிதர்களும், சில திரைப்பட இயக்கங்களும் மட்டுமே இவர்களை தோளில் சுமந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: