PUBG BAN: பப்ஜி உள்பட 118 செயலிகளை முடக்கியது ஏன்? இந்திய அரசு என்ன சொல்கிறது?

இந்தியா முழுவதும் PUBG ஆன்லைன் விளையாட்டு செயலி உள்பட 118 செல்பேசி செயலிகளை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்தத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆண்ட்ராய்டு, ஐஃபோன் செல்பேசி தளங்களில் ஏராளமான செயலிகள், பயனர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திருடுவதாகவும் அந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்தியா அல்லாது வெளிநாட்டு சர்வர்கள் மூலம் தரவுகளை திருடும் பணியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்துறை அமைச்சகம் தவறான செயலிகளை முடக்குவதற்கு பரிந்துரை செய்திருந்தன.

அதன் அடிப்படையில் நடத்திய கண்காணிப்பில் அவை பயனர்களின் தரவுகளை திருடுவது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இந்திய பாதுகாப்பு அவற்றின் செயல் அச்சுறுத்தலாக அமையும் என்றும் கருதி 118 செல்பேசி செயலிகளை முடக்கியிருப்பதாக இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது முடக்கப்பட்ட செயலிகளில் பல சீனாவை மையமாகக் கொண்டு இயங்கி வருபவை.

இந்திய அரசின் நடவடிக்கைக்கு உள்ளான செயலிகளில் Baidu, WeChat Work, Tencent Weiyun, Rise of Kingdoms, APUS Launcher, Tencent Weiyun, VPN for TikTok, Mobile Taobao, Youko, Sina News, CamCard ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இதில், மிகவும் பிரபலமானது PUBG எனப்படும் ஆன்லைன் விளையாட்டு செயலி. இந்தியாவில் அந்த செயலியின் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 3.30 கோடி பேர் என்று கூறப்படுகிறது. ஐந்து கோடி பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கொரோனா பொது முடக்க காலத்தில் இந்தியாவில் தான் இந்த செயலியை அதிக பயனர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளனர்.

இந்த செயலியில் விளையாட்டு மட்டுமின்றி வர்த்தகமும் உள்ளது. இதில் விளையாடிய பல சிறார்கள், வீட்டில் இருந்து பணத்தைத் திருடியும் வங்கிக்கடன் அட்டை, டெபிட் கார்டுகள் மூலம் விளையாட்டில் பங்கேற்று பொருட்களை வாங்கிய செயல்கள், அவை தொடர்பான குற்றப்புகார்கள் காவல்துறையில் ஏராளமாக பதிவாகியுள்ளன.

பல இடங்களில், தங்களின் பிள்ளைகளில் குறிப்பாக மாணவர்கள் அதிக அளவில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக பெற்றோர்கள் கவலைகளை வெளியிட்டு வந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவிலான விவாதத்தையும் தூண்டியது.

பப்ஜி விளையாட்டு என்பது என்ன?

இந்த விளையாட்டின்படி ஒரு வரைபடத்தை பயனர் தேர்வு செய்தவுடன், அதில் 100 பேர் விமானத்தில் இருந்து குதிப்பார்கள். நேரம் ஆக, ஆக அந்த வரைபடத்தின் எல்லை தூரம் சுருங்கிக் கொண்டே இருக்கும்.

இறுதியில், முதலிடத்தில் இருக்கும் போட்டியாளரை வெற்றியாளராக அந்த செயலி அறிவிக்கும். அந்த வரைபடத்தில் இருக்கும் வீடுகளில் உள்ள ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எதிர் போட்டியாளர்களை அந்த பயனர் வீழ்த்துவதே ஆட்டத்தின் நோக்கம்.

இந்தியாவில் மட்டும் பப்ஜி விளையாட்டில் 3.30 கோடி பேர் ஈடுபடுவதாக தரவுகள் கூறுகின்றன. சமீபத்தில் தமது செயலி மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 27 வரை 22,73,152 கணக்குகள் மற்றும் 14,24,854 சாதனங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக கூறியது.

பயனர்களின் தரவுகளை திருடும் ஹேக்கர்கள் எக்ஸ் ரே விஷன் அல்லது வால் ஹேக்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட முறையை பயன்படுத்தியதால் 32 சதவீதம் பேருக்கு தடை விதித்ததாகவும் பப்ஜி நிறுவனம் கூறியிருந்தது.

இந்த செயலிக்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து, அதற்கு ஆப்பிள் நிறுவனம் கூட தமது ஆப்ஸ்டோரின் முகப்புப் பக்கத்தில் "PUBG Mobile's New Era" என்ற பெயரில் விளம்பர பக்கத்தை வெளியிட்டிருந்தது.

இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இரு மாதங்களுக்கு முன்பு மோதல் தீவிரமானபோது, சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டொக் செயலிக்கு தடை விதித்த இந்திய அரசு பிறகு, ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 செயலிகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 118 செயலிகளை இந்திய அரசு முடக்கியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: