ப.சிங்காரம்: இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் தமிழர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? ஆவணப்படுத்திய நாவல்கள் #தமிழர்_பெருமை

    • எழுதியவர், மு. நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை.)

தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய ஆனால் பெரிய புகழ் வெளிச்சம் இல்லாமலே இறந்து போன அல்லது எந்த புகழ் வெளிச்சத்தையும் விரும்பாத தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் கலைஞன் ப. சிங்காரத்தின் பிறந்த நாள் இன்று.

எழுத்தாளர்களின் எழுத்தாளர்

அவர் எழுதியது "கடலுக்கு அப்பால்", "புயலிலே ஒரு தோணி" என இரண்டு நாவல்கள் தான். ஆனால், அந்த இரு நாவல்களும் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்பவை.

எழுதிய போது பெரிதாகப் போற்றப்படாமல் இருந்தாலும், இப்போது வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்படுபவை அவை. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர். கலைஞர்களின் கலைஞர் என இப்போது இலக்கியக் கூட்டங்களில் கொண்டாடப்படுகிறார்.

அவர் எழுதிய இரண்டு நாவல்களும், இரண்டாம் உலகப் போரில் தமிழர்களின் பங்கையும் பகையையும், அவர்களது புலம்பெயர் வாழ்க்கையையும், காதலையும், தொழிலையும் விவரிக்கிறது.

இந்த இரு நாவல்களுக்கான கதைக்களம் தமிழ்நாடு அல்ல. சிங்காரம் தன் தொழில் நிமித்தமாகச் சென்ற சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகள்.

கரும்பு தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் கூலிகளாகவும் தமிழர்கள் பல நாடுகளில் பணியாற்ற அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். சில நாடுகளில் வட்டிக்கடை நடத்தவும் பிற தொழில் செய்யவும் சங்ககாலம் முதல் இப்போது வரை சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படிச் சென்றவர்கள் வாழ்க்கை அந்த நாடுகளில் எப்படி இருந்தது என பதிவு செய்தது மிகவும் குறைவு.

இதன் காரணமாகவே `கடலுக்கு அப்பால்' மற்றும் 'புயலிலே ஒரு தோணி' ஆகிய இருநாவல்களும் இரு பெரும் புலம்பெயர் நாவல்கள் என கொண்டாடப்படுகின்றன.

இந்த இரு நாவல்களும் வெளிவந்து பல தசாப்தங்கள் ஆன பிறகும் அவ்வளவு புதிதாக இருக்கிறது. சிங்காரம் அந்த காலத்தில் நிகழ்த்திக் காட்டி இருப்பது ஒரு பெரும் பாய்ச்சல் என ஓர் இலக்கிய உரையாடலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சாம்ராஜ்.

புனைவும், நிஜமும்

இருநாவல்களும் புனைவுதான் என ப.சிங்காரம் கூறுகிறார். ஆனால், முழுக்க முழுக்க புனைவுதான் என கடந்துவிட முடியாத அளவுக்கு நிஜம் இந்த கதைகளோடு இணையொத்ததாக இருக்கிறது.

கதைமாந்தர்கள் பெயர்கள் சிங்காரம் கூறுவது போல புனைவாக இருக்கலாம். ஆனால், கிழக்கு இந்திய நாடுகளில் 1930களில் தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றியது நிஜம், வட்டிக்கடை நடத்தியது நிஜம், சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப்படையில் இணைந்து போராடியது நிஜம், இதில் வரும் வரலாற்று நிகழ்வுகளும் நிஜம்.

இந்த இரு நாவல்களிலும் கதாநாயகன் ஒரு சாகச விரும்பி. இந்திய தேசிய ராணுவப்படையில் இணைந்து ஜப்பானுடன் கைகோர்த்து பிரிட்டன் ராணுவத்தை எதிர்க்கிறான். ஒரு கட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மரணித்த செய்தி கிடைத்தவுடன் ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து சமர் செய்கிறான். இவை இந்த நாவல்களில் காட்டப்படும் புறவாழ்வு என்றால் கிழக்கிந்திய நாடுகளிலிருந்த தமிழர்களின் காதல், கடவுள் பக்தி என அகவாழ்வும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் போர் குறித்த பதிவுகள் குறைவு. அதை மிக நுட்பமாக ஆழமாகச் செய்தவர் சிங்காரம் என்கிறார் இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான ந. முருகேசபாண்டியன்.

ப. சிங்காரத்தை நேரில் சந்தித்த சில எழுத்தாளர்களில் ந. முருகேசபாண்டியன், எழுத்தாளர் சி. மோகன் உள்ளிட்டவர்கள் சிலர்.

"இந்த இரு நாவல்களிலும் வரும் போர் குறித்த பல சம்பவங்களை அவர் நேரில் பார்த்திருக்கிறார். கிழக்கு ஆசியாவில் அவர் இருந்த பகுதிக்கு இந்தியத் தேசிய ராணுவப் படை முகாமுக்கு சென்று பல மணி நேரம் அவர்களுடன் உரையாடி இருக்கிறார். அவைதான் அவர் எழுத்தில் வெளிப்பட்டு இருக்கிறது," என்கிறார் முருகேசபாண்டியன்.

சிங்காரமே ஒரு சாகசக்காரராகத்தான் இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை முழுவதும் சாகசங்கள் நிறைந்திருக்கின்றன. அதுதான் அந்த நாவலில் வெளிப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார் முருகேசபாண்டியன்.

தமிழர்களை வீரர்கள் சூரர்கள் என்று விதந்தோதவில்லை. தமிழர்கள் பழம் பெருமை பேசிக் கொண்டே நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இழப்பவர்கள் என கிடைத்த இடங்களில் எல்லாம் விமர்சனம் செய்கின்றன இந்த இருநாவல்களும்.

"இந்திய தேசிய ராணுவப் படையில் சிங்காரம் பணியாற்றி இருக்கவில்லை. அதில் பணியாற்றிய பல நண்பர்கள் மூலம் அறிந்த தகவல்கள், கதைகள் மற்றும் மராமத்துப் பணியாளராகப் போர்க்களத்துக்குச் சென்றுவந்த அனுபவங்களின் புனைவெழுச்சியாகவே தன் படைப்புகளைச் சிங்காரம் உருவாக்கி இருக்கிறார்," என்கிறார் சி.மோகன்.

சிங்காரத்தின் சொல் ஆளுமை

இந்த இரு நாவல்களும் நம்மை கீழை நாடுகளின் வீதிகளுக்கே அழைத்துச் செல்கின்றன. இவரது எழுத்து நமது மனக்கண்ணில் அப்போது அந்த நிலப்பரப்பு குறித்த சித்தரத்தை வரைகிறது. இதற்கு முக்கிய காரணம் சிங்காரத்தின் சொல் பிரயோகம்தான். அன்னெமர், உப்பாஸ், கம்பொங், கந்தோர், கித்தா, கிலிங் அந்த நிலத்தில் அப்போது எந்த சொல் பயன்படுத்தப்பட்டதோ அதை அப்படியே எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

அதுபோல இங்கிருந்து கிழக்கு இந்தியாவிற்கு தொழில் நிமித்தமான சென்ற மக்களின் சொல் வழக்கையும், சொலவடையையும் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார். இது நமக்கு நாவலை இன்னும் நெருக்கமாக்குகிறது.

ஆனால் , இந்த இரு நாவல்களும் வெளியான சமயத்தில் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. அந்த சமயத்தில் தமிழ்ச் சமூகத்தில் கோலோச்சிய எழுத்தாளர்கள் அவரை அங்கீகரிக்கவும் இல்லை.

புகழ் ஒளியின் நிழல்

"அந்த காலத்தில் நாவலுக்கென்று ஓர் இலக்கணம், வடிவம் இருந்தது. அதன் எந்த சட்டகத்திற்குள்ளும் பொருந்தாமல் இருந்தது ப.சிங்காரத்தின் இந்த இரு நாவல்கள். இதன் காரணமாகவே இவரை அங்கீகரிப்பதில் அப்போது கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு தயக்கம் இருந்திருக்கிறது. ஆனால், அதே காரணத்தினால்தான் இந்த இரு நாவல்களும் காலத்தைக் கடந்து நிற்கின்றன," என்கிறார் ந. முருகேசபாண்டியன்.

மேலும் அவர், "அப்போது ப. சிங்காரத்தின் எழுத்தை உச்சி முகர்ந்தவர்கள் கி.ராஜநாராயணன், தஞ்சை பிரகாஷ் உள்ளிட்ட சில எழுத்தாளர்கள்தான். கி.ரா ப. சிங்காரத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தஞ்சை பிரகாஷ் நேரில் சென்று பார்த்திருக்கிறார்," என்று கூறுகிறார்.

சிங்காரத்தின் படைப்பு மேதமை குறித்த என் அவதானிப்புகள், நவீன தமிழ் இலக்கியச் சூழலில் முதலில் அசட்டையாகப் புறக்கணிக்கப்பட்டன.என் சொந்த ஊர்க்காரர் என்பதாலேயே அவரை நான் அளவுக்கு அதிகமாக கொண்டாடுவதாக நினைத்தார்கள். ஆனால், தொடர்ந்து மேற்கொண்ட மறுவாசிப்புகளில் அதன் மகத்துவம் குறித்த என் கணிப்பு திடப்பட்டது என்கிறார் எழுத்தாளர் சி.மோகன்.

முருகேசபாண்டியன், "சிங்காரமும் அப்போதைய தமிழ் எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துகள் குறித்து பெரிதாக எந்த மதிப்பீடுகளும் இல்லாமல்தான் இருந்தது. யாரும் தீவிரமாக எழுதுவதில்லை. விஷயங்களை ஊன்றி கவனிப்பதில்லை என்பது அவரது அவதானிப்பு. தமிழ் நிலத்தைவிட்டுப் பல ஆண்டுகள் தள்ளி இருந்ததாலோ என்னவோ அவர் அதிகமாக ஆங்கில இலக்கியங்களைப் படித்திருக்கிறார். எர்னெஸ்ட் ஹெமிங்கே அவருக்கு பிடித்தமான எழுத்தாளர்," என்கிறார்.

சமகால எழுத்தாளர்களோடு நட்போ, பழக்கமோ சிங்காரத்துக்கு இல்லை என்பதை கடந்து அதில் பலரை அவர் அறிந்துகூட வைத்திருக்க இல்லை என்று கூறும் சி.மோகன், எழுத்து இயக்கங்களோடு எவற்றோடும் சிங்காரம் தொடர்பு வைத்திருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

சி.மோகன், "ஹெமிங்வேயின் போர்க்கால நாவல்கள் அவரைப் பெரிதும் ஈர்த்திருக்கின்றன. ஹெமிங்வேயின் நாவல்களில் அவருக்கு மிகவும் பிடித்தமானது, 'ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்'. பின்னாளில், அவர் போர்க்காலப் பின்னணியில் தன்னுடைய நாவல்களை உருவாக்க ஹெமிங்வேதான் ஆதர்சமாக இருந்திருக்கிறார்." என்று எழுதுகிறார்.

ப.சிங்காரம் குறித்துப் பல தருணங்களில் எழுதி இருக்கிறார் சி.மோகன்.

"'புயலிலே ஒரு தோணி'யின் படைப்பு மொழி, நவீனத் தமிழ் உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதைமாந்தர்களின் மன மொழி, தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாக வசப்படவில்லை. மனதின் தன்னிச்சையான நினைவோட்டங்கள் வெகு அநாயசமாக மொழிநடையில் புரள்கின்றன," என குறிப்பிடுகிறார் சி. மோகன்.

தனது ’நடைவழிக் குறிப்புகள்’ நூலில் ப.சிங்காரத்தை ஒரு கட்டுரையும், 'நடைவழி நினைவுகள்' புத்தகத்தில் சிங்காரம் குறித்து நான்கு தொடர் கட்டுரைகளையும் சி.மோகன் எழுதி இருக்கிறார்.

ஓர் உண்மை என எதுவும் இல்லை

தமிழ் உலகம் கற்பித்த அனைத்து மதிப்பீடுகளையும் பகடி செய்கிறது சிங்காரத்தின் எழுத்து. போர் பின்னணியிலும் ஒரு எள்ளல் தொனி கதை முழுவதும் விரவி கிடக்கிறது.

இது குறித்து விவரிக்கும் முருகேசபாண்டியன், "மனிதர்கள் நுட்பமானவர்கள், ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். குரோதம், துரோகம், அன்பு என அனைவரிடமும் இருக்கிறது. இங்கு ஓர் உண்மை என எதுவும் இல்லை. எல்லாரிடமும் தங்கள் தரப்பு நியாயம் என ஒன்று இருக்கிறது. இவன் கெட்டவன், இவன் நல்லவன் என வகைப்படுத்தாமல் மனிதனின் மேன்மையை, சிறுமையை அதன் போக்கில் பதிவு செய்கிறார்," என்று கூறுகிறார்.

அதுபோல தமிழ் சமூகத்தின் கட்டுப்பட்டித்தனத்தையும் போகிற போக்கில் துவம்சம் செய்கிறார் சிங்காரம். எழுத்தாளர்கள் அவரை அங்கீகரிக்க அஞ்சியமைக்கு அதுக் கூட காரணமாக இருந்திருக்கலாம் என பதிவு செய்கிறார் முருகேசபாண்டியன்.

சிங்காரத்தின் எழுத்தாளுமையை விவரிக்கும் முருகேசபாண்டியன், "அவரது முதல் 'கடலுக்கு அப்பால்' நாவலில் இரு பாண்டியன் எனும் கதை மாந்தர் வருகிறார். அவரைப் பற்றி சில பத்திகளுக்கு விவரிப்பு இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு பின் அவர் எழுதிய அவரது இரண்டாவது நாவலான 'புயலிலே ஒரு தோனி' முழுக்க முழுக்க பாண்டியை சுற்றி நடக்கிறது. இதனை அப்போது எப்படிச் சிந்தித்தார் என்றே தெரியவில்லை. இது போன்ற விஷயங்கள்தான் அவர் காலத்தைக் கடந்தும் கொண்டாடப்படக் காரணம்," என்கிறார்

'புயலிலே ஒரு தோணி`யின் படைப்பு மொழி, நவீனத் தமிழ் உரைநடைகளில் மிகவும் விசேஷமானது என்று கூறும் சி. மோகன், “விவரணை மொழியில் புனைவுத் திறன் சிங்காரத்துக்குக் கூடி வரவில்லை. எனினும், மனதின் தன்னிச்சையான நினைவோட்டங்கள் வெகு அநாசயமாகப் பதிவாகின்றன,” என்று குறிப்பிடுகிறார்.

சிங்காரத்தின் வருத்தம்

இப்போது இந்த இருநாவல்களும் கொண்டாடப்பட்டாலும் எழுதிய காலத்தில் அவை பெரிதாகப் போற்றப்படவில்லை. இந்த இரு நாவல்களையும் பிரசுரிக்கவே அவர் சிரமப்பட்டிருக்கிறார். 1950 ஆம் ஆண்டு அவர் 'கடலுக்கு அப்பால்' நாவல் எழுதி இருக்கிறார் அது பல போராட்டங்களுக்குப் பிறகு 1959ஆம் ஆண்டுதான் பிரசுரம் ஆகி இருக்கிறது. 'புயலிலே ஒரு தோணி' நாவலை 1962ஆம் ஆண்டு எழுதி இருக்கிறார். அந்த நாவல் சரியாக ஒரு தசாப்தத்திற்கு பிறகு 1972 ஆண்டுதான் வெளி வந்திருக்கிறது.

நூல்களில் வெளியிடுவதில் பெற்ற கசப்பான அனுபவங்களின் காரணமாகத் தொடர்ந்து எழுதுவதில்லை என நண்பர்களிடம் சிங்காரம் கூறியதாகப் பதிவு செய்கிறார் ந.முருகேசபாண்டியன்.

மறு பதிப்பாக வந்த 'கடலுக்கு அப்பால்' நாவலுக்கு ந.முருகேசபாண்டியன் எழுதிய முன்னுரையில் இப்போதைய தமிழ் தலைமுறையினருக்குத் தீவிரமாகப் படிக்கிற, எழுதுகிற பழக்கமே இல்லாமல் போய்விட்டது என ப.சிங்காரம் வருத்தப்பட்டதாகப் பதிவு செய்கிறார்.

"இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு, சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னிக்கு நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படி பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில் ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்," என சிங்காரம் கூறி இருக்கிறார்.

இறுதி நாட்கள்

கடைசி வரை புகழ் ஒளியின் நிழல் படாமல் வாழ்ந்திருக்கிறார் சிங்காரம். அதையே அவர் விரும்பியும் இருக்கிறார். கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்த பிறகு மதுரை தினத்தந்தி பதிப்பில் பணியாற்றி இருக்கிறார்.

தனது இறுதிக்காலத்தில் தாம் ஈட்டிய ஏழு லட்ச ரூபாய் பணத்தை நற்காரியங்களுக்கு செலவிட கூறி கொடுத்துவிட்டு. தனது புகைப்படத்தையும், தனது பெயரையோ எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார். அதே ஆண்டு, அதாவது 1997 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உடல்நலக் கோளாறின் காரணமாக இறந்திருக்கிறார்.

தனது இறப்பு செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை அவர் கூறி இருந்ததாக எழுதுகிறார் முருகேசபாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: