You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்புகள்: படிக்க எளிய வடிவில் சென்னை புத்தக கண்காட்சியில்
18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃப்ரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தற்காலிக வாசிப்புக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது சென்னையில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி இந்தப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்த அனந்தரங்கம் பிள்ளை, புதுச்சேரியின் ஃபிரெஞ்சு ஆளுநராக த்யூப்ளே இருந்தபோது, 1746ல் தலைமை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1756வரை அவர் அந்தப் பதவியில் இருந்துவந்தார். 1761ல் அவர் மரணமடையும்வரை, தொடர்ச்சியாக நாட்குறிப்பில் அன்றாட நிகழ்வுகளைப் பதிவுசெய்துவந்தார். 1736 செப்டம்பர் 6ஆம் தேதி முதல், அவர் மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது 1761 ஜனவரி பத்தாம் தேதிவரை இந்த நாட்குறிப்புகளை சுமார் 25 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்திருக்கிறார்.
இந்த நாட்குறிப்புகள் 12 பகுதிகளாக ஏற்கனவே ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான், தற்கால வாசிப்பிற்கு ஏற்ற வகையில் இந்தப் புதிய பதிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
"ரங்கப்பிள்ளையில் எழுத்து தற்காலச் சூழலில் வாசிக்க எளிதாக இல்லை. நீண்ட வாக்கியங்களாக அவர் எழுதியிருந்தார். எளிய வாசிப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றுவதுதான் எங்கள் நோக்கம். தவிர, மொத்தமாக 12 வால்யூமும் இப்போது வாங்கக் கிடைப்பதில்லை. அதனால்தான், மறுபதிப்பைக் கொண்டுவர முடிவுசெய்தோம்" என்கிறார் வெண்ணிலா.
அனந்தரங்கம் பிள்ளையின் எழுத்தை எளிதாக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை.
"அனந்தரங்கம் பிள்ளையின் உரைநடைக்குள் செல்வதே மிகச் சிக்கலான விஷயமாக இருந்தது. அந்த மொழி என்ன சொல்கிறது என்பதை புரிந்துகொள்வதே மிக பெரிய சவால். முதல் முறை வாசிக்கும்போது அந்த காலகட்டத்துத் தமிழ், அதிலிருந்த பிற மொழிச் சொற்கள் ஆகியவை பெரும் சவாலாக இருந்தன. தவிர, பதிப்புகளிலும் பிழைகள் இருந்தன. தமிழ்ப் பதிப்பில் ஆட்களின் பெயர்கள், ஆண்டுகளின் பெயர்கள் ஆகியவை சில இடங்களில் தவறாக இருந்தன. அவற்றை ஆங்கிலப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு சரிசெய்தோம்" என்கிறார் வெண்ணிலா.
இந்தப் புதிய பதிப்பை 'அகநி' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் வெண்ணிலாவும் மு. ராஜேந்திரனும் பதிப்பாசிரியர்களாகச் செயல்பட, துணைப் பதிப்பாசிரியர்களாக ந.மு. தமிழ்மணி, துளசிதாஸ், தேவி. திருவளவன், நல்ல.வில்லியன் ஆகியோர் உதவி பதிப்பாசிரியர்களாக இந்தப் பதிப்பிற்குச் செயல்பட்டுள்ளனர்.
இந்த பதிப்பிற்காக ஜே.எஃப். ரைஸ், ரங்காச்சாரி, ஹென்றி டாட்வெல் ஆகியோர் பதிப்பித்த ஆங்கிலப் பதிப்பும் புதுச்சேரி அரசு வெளியிட்ட தமிழ்ப் பதிப்பும் மூலப் பதிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, அந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஆளுமைகள், இருந்த சில கோட்டைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.
அனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகள் பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியவை. 1755ல் லிஸ்பனில் நடந்த மிகப் பெரிய நிலநடுக்கம், ஆளுநர் துய்ப்ளேவின் பாதுகாவலர்களாக, வாட்டிகனில் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள சுவிஸ் கார்டுகள் செயல்பட்டது, புதிய வாழ்வைத் தேடி புதுச்சேரிக்கு வந்த ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்கள் பற்றிய குறிப்புகள், துய்ப்ளேவின் துணைவியார் மதாம் துய்ப்ளேவுக்கும் அனந்தரங்கம் பிள்ளைக்கும் இடையிலான மோதல்கள், பிரஞ்சு அரசவைச் செய்திகள் ஆகியவை அவரது நாட்குறிப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: