Topless - விமர்சனம்

Topless - விமர்சனம்

பட மூலாதாரம், ZEE5

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் வெப் தொடர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் உள்ளூரில் தயாரிக்கப்படும் சுவாரஸ்யமான தொடர்களின் எண்ணிக்கை குறைவாகவேதான் இருக்கிறது.

இந்தப் பின்னணியில் ZEE 5ல் வெளியாகியிருக்கும் 'டாப்லெஸ்' தொடர் சற்று கவனிக்கக்கூடியதாக இருக்கிறது.

News image

பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த துரதிர்ஷ்டம் பிடித்த ஓவியம் ஒன்றைத் தேடி, அந்த ஓவியத்தை வரைந்தவரின் பேத்தியான ஹெலனா இங்கு வருகிறார். அவரிடம் அந்த ஓவியத்தை வாங்குவதற்காக நிறைய பணமும் இருக்கிறது. அதைக் கொள்ளையடிக்க நினைக்கிறது உருப்படாத கொள்ளைக் கும்பல் ஒன்று. குடும்ப மானத்தைக் காப்பாற்ற அந்த ஓவியத்தை அழித்தே ஆக வேண்டுமென கல்கி என்ற அரசியல்வாதியும் அதனைத் தேடித் திரிகிறார். அப்படியென்ன அந்த ஓவியத்தில் இருக்கிறது, குடும்ப மானத்திற்கும் ஓவியத்திற்கும் என்ன தொடர்பு, யாருக்கு ஓவியம் கிடைத்தது என்பதெல்லாம் மீதிக் கதை.

துவங்கும்போது கதை பயணிக்கும் திசை சற்று குழப்பமாக இருந்தாலும், சீக்கிரமே சூடுபிடிக்கத் துவங்கிவிடுகிறது. மொத்தம் மூன்று கும்பல்கள். அவை ஆறாகப் பிரிந்து, பிறகு சேர்ந்து ஓவியத்தைத் தேடுகிறார்கள் என்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், கலகலப்பான திரைக்கதையால் இதையெல்லாம் மறக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.

மூன்றாவது எபிசோடின் துவக்கத்தில் அமைச்சர் கல்கி ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கிறார். அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதம் அது. அந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் பெண்ணியவாதியைப் பார்த்து, அவர் துப்பட்டா போடாதது தனக்கு உறுத்துவதாகச் சொல்கிறார் கல்கி.

Topless - விமர்சனம்

பட மூலாதாரம், ZEE5

"உங்க அம்மா, பாட்டி எல்லாம் துப்பட்டா போட்டிருந்தாங்களா?" என அந்த பெண்ணியவாதி பதிலுக்குக் கேட்க, அவரை நாற்காலியை வைத்து அடித்தே கொன்றுவிடுகிறார் கல்கி.

ஒருவகையில் பார்த்தால், இந்தத் தொடர் வேகமெடுப்பது அந்தக் காட்சியில்தான். பெண்ணியவாதியின் அந்தக் கேள்வி ஏன் அவரை அவ்வளவு பாதிக்கிறது என்பதற்கும் அந்த ஓவியத்தில் விடையிருக்கிறது.

முழுக்க முழுக்க அபத்தமான, ஒரு த்ரில்லர் காமெடி இந்தத் தொடர். யாருடைய நடவடிக்கைக்கும் தெளிவான நோக்கமோ, அர்த்தமோ கிடையாது. தொடரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் சுயநலத்தோடு செயல்படுகிறார்கள் என்பது தொடருக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைத் சேர்க்கிறது.

இந்தத் தொடரில் யாருமே மையப் பாத்திரம் கிடையாது. யாரும் ஹீரோவோ, வில்லனோ இல்லை. ஒவ்வொருவரின் சுயநலமும் அவரவருக்கான முடிவைத் தருகிறது.

ஆனால், பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. இறந்தவர்கள் உயிர்த்தெழுவது, சிரிக்கவைக்கும் வாயுவை வைத்து நடக்கும் சம்பவங்கள் அளவுக்கு மீறி செல்வது, தொலைக்காட்சி ஜோதிடர் ஓருவர், தொடருக்கான கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பது ஆகியவை, இதன் தரத்தை கீழே இறக்குகின்றன.

இந்தத் தொடர் வயதுவந்தோருக்கான தொடர் என்பதால், வசனங்கள், பெயர்கள் (ஒரு கேரக்டரின் பெயர் ஜானி சின்ஸ்) என அனைத்திலும் புகுந்துவிளையாடியிருக்கிறார்கள்.

Topless - விமர்சனம்

பட மூலாதாரம், ZEE5

கல்கியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தான் வரும் காட்சிகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறார். பல நேரங்களில் சிறுசிறு பாத்திரங்களில் வருபவர்கள்கூட ஆச்சயரிப்படுத்தும்படி நடிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் உடல்மொழியும் வசனமும் கவனமாகத் தேர்வுசெய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு பல காட்சிகளில் மனம் கவர்கிறது. குறிப்பாக, துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவரது உள்ளங்கை ஓட்டையாகிவிட, அந்த ஓட்டைக்கு உள்ளே நுழைந்து ஒளிப்பதிவு செய்திருப்பதைப் போல வரும் காட்சி, அட்டகாசம். இதுபோல, ரசிக்க பல காட்சிகள் இந்தத் தொடரில் உண்டு.

மொத்தமே ஆறு பாகங்கள். 3 மணி நேரத்திற்குள் பார்த்துவிடக்கூடிய தொடர் இது. அபத்த காமெடிகள் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: