You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரம்யா நம்பீசன் பேட்டி: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை மிகவும் பாதித்தன"
ரம்யா நம்பீசன் இயக்கியிருக்கும் குறும்படம் `UNHIDE'. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் குறும்படம் குறித்து அவரிடம் பிபிசி தமிழுக்காக வித்யா காயத்ரி பேசியதிலிருந்து...
கேள்வி: இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுது வந்தது?
பதில்: இயக்குநர் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை. என்னுடைய முதல் அடியாகத் தான் இதை நினைக்கிறேன். நம்முடைய சமூகத்தில் நடைபெறக்கூடிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. எப்பொழுதும் பெண்கள் மீதே பழி வந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களை ஏன் குற்றம் சாட்டவில்லை? Ramya Nambeesan Encore-னு ஒரு யூடியூப் சேனல் வைச்சிருக்கேன். அந்த தளத்தில் பொழுதுபோக்கைத் தவிர மக்களுக்குத் தேவையான விஷயங்களையும் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்தக் கதை எனக்குள் தோன்றியவுடன் இதைத் தமிழ் மொழியில் தான் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். ஏனெனில், நம்முடைய எண்ணங்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்ய தமிழ் மொழி நல்ல களம்.
கேள்வி: `UNHIDE' பொறுத்தவரை வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ளன. வசனங்களை நீங்கள்தான் எழுதினீர்களா?
பதில்: `பிளான் பண்ணி பண்ணனும்` என்கிற காமெடி படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் என்னுடைய ஐடியாக்கள் குறித்து சொன்னேன். வசனங்கள் ஷார்ப் ஆக இருக்க வேண்டும் என ஆங்கிலத்தில் உதாரணங்கள் சொன்னேன். ஏதாவது செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் வசனங்கள் அமைப்பதற்கு எனக்கு உதவி செய்தார்.
கேள்வி: பாலியல் ரீதியான குற்றங்களுக்கு எதிரான நிரந்தரத் தீர்வு என்ன என்பது இன்றளவும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. நீங்கள் அந்தக் குற்றங்களுக்கு எது தீர்வாகும் என நினைக்கிறீர்கள்?
பதில்: இந்த சிஸ்டம் தவறாக இருக்கிறதா இல்லை நம்முடைய பார்வை தவறாக உள்ளதா என எதுவுமே தெரியவில்லை. நாம அந்தக் குற்றத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என எனக்குள்ளே தோன்றிய கேள்விகளைத்தான் இந்தக் குறும்படம் மூலமாக கேட்டிருக்கிறேன். இப்போதிலிருந்தாவது அந்தக் கேள்விக்கான பதிலை முன்னெடுக்க வேண்டும். நான் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பெண்ணோ, ஆணோ அவர்களை மனிதர்களாகப் பாருங்கள் என்பது தான் நான் சொல்ல நினைக்கிற விஷயம். இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு என்ன வழி என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்.
கேள்வி: தமிழ் சினிமாவில் படங்கள் மூலமாக சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா?
பதில்: எனக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், அப்படி இயக்குநராவதற்கு நிறைய அனுபவமும், வாசிப்பும் தேவைப்படுகிறது. இயக்குநர் ஒரு கதையை அழகாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு எனக்கு கொஞ்சம் காலமும், அனுபவமும் தேவை. நிச்சயம் இயக்குநராக என்னைப் பார்க்கலாம். ஆனால், இத்தனை வருடங்கள் நான் சினிமாவில் இருந்திருக்கிறேன். என் மனதுக்குள் பல ஆண்டுகளாகத் தோன்றிய விஷயங்களை என்னுடைய கலை வடிவம் மூலமாக வெளிப்படுத்த நினைத்தேன். அதன் வெளிப்பாடே இந்தக் குறும்படம்.
கேள்வி: 'மீ டூ'குறித்து உங்களின் பார்வை?
பதில்: தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களை முதலில் தைரியமாக அவர்கள் வெளியில் சொல்வதற்காகவே தலை வணங்குகிறேன். ஏனெனில், பல வலிகளைத் தாண்டித்தான் அவர்கள் மீ டூ குறித்துப் பேசுகிறார்கள். யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அதற்கு சமமான உரிமையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால்தான் சமூகத்தில் ஏதாவது மாறும். இப்பொழுது எல்லா இடங்களிலும் பெண்கள் குறித்த பார்வை மாறிக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் இந்த விஷயங்கள் மாறாது. தொடர்ந்து இது குறித்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: