You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகுபலியில் காளக்கேயர்கள் பேசிய 'கிளிக்கி' மொழியை கற்பது எப்படி? மதன் கார்க்கியின் இலக்கணம்
- எழுதியவர், வெ. வித்யா காயத்ரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாகுபலி படத்தில் காளக்கேயர்கள் பேசிய மொழிக்கு 'கிளிக்கி' என்கிற அடையாளத்தைக் கொடுத்து, அந்த மொழியை இலக்கண முறைப்படி வடிவமைத்திருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. அவருடனான கலந்துரையாடலிலிருந்து.
கே : இந்த மொழியை பாகுபலி படத்தில் எப்படி அறிமுகப்படுத்தினீர்கள் ?
ப : பாகுபலி படத்தில் இந்த மொழி குறித்து எழுதும்போது அதற்கு எந்த எழுத்து வடிவமும் இல்லை. அந்தப் படத்திற்கு தேவையான சொற்கள் மற்றும் இலக்கணங்களை மட்டுமே உருவாக்கியிருந்தேன். அந்தப் படம் முடிவடையும்போது என்னுடைய அகராதியில் கிட்டத்தட்ட 700 சொற்களும், 40 இலக்கண விதிகளும் இருந்தன. எப்படி அந்த வாக்கியம் அமைக்கப்பட்டது என எனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக இலக்கண விதிகளை அமைத்தேன்.
சொற்களுடைய அர்த்தத்தினை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு ஒலிகளைத் தேர்ந்தெடுத்து சொற்களை உருவாக்கினேன். மென்மையான பொருளுடைய சொற்களுக்கு மென்மையான ஒலிகளும், சற்று வன்மையான பொருளுடைய சொற்களுக்கு வன்மையான ஒலிகளும் பயன்படுத்தினேன்.
இதற்கு முக்கிய காரணம், இயக்குநர் ராஜமெளலி பாகுபலி படத்தில் காளக்கேயர்கள் பேசும்போது அதற்கு சப்-டைட்டில் போட மாட்டேன் எனக் கூறியதுதான்.
காளக்கேயர்கள் பேசுவதை வைத்தே படம் பார்ப்பவர்கள், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் அப்படி வார்த்தைகளை உருவாக்கினேன். இந்த மொழியின் சிறப்பம்சம் என்னவெனில் இதில் பயன்படுத்தப்படும் கிளிக் ஒலிகள்தான்.
கே : இதற்கு முன் யாராவது உங்களைப் போன்று புதிய மொழிகளை உருவாக்கியிருக்கிறார்களா? எப்படி இந்த எண்ணம் வந்தது?
ப : நிறைய பேர் புதிய மொழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், திரைப்படங்களில் புதிய மொழிகளை உருவாக்கியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஸ்டார் வார், ஸ்டார் ட்ரெக், கேம் ஆஃப் த்ரோன்ஸ் இவற்றிலெல்லாம் புதிய மொழிகளை பயன்படுத்தியிருப்பார்கள்.
அப்படியில்லாமல், எளிமையான மொழியை இந்த கால கட்டத்திற்கு ஏற்றவாறு எப்படி உருவாக்கலாம் என யோசித்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
கே : இந்த மொழியின் வரி வடிவம் என்ன ?
ப : 22 குறியீடுகள் இதில் இருக்கிறது. இந்த 22 குறியீடுகளை படித்தால் உங்களால் கிளிக்கி மொழியை முழுமையாக எழுதவும் படிக்கவும் முடியும். ஆங்கிலத்தில் எழுதவும், படிக்கவும் நமக்கு 52 குறியீடுகள் தேவை. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரை வைத்தும் சோதனை செய்தோம்.
ஒரு மணி நேரம் அவர்கள் இந்த மொழியைக் கற்ற பின்னர் அவர்களால் நான் சொல்கிற கிளிக்கி வார்த்தையை எழுத, படிக்க முடிகிறது. இந்த மொழியை கற்றுக் கொள்ளும்போது மிகவும் கேளிக்கையாக இருக்கும்.
கே : இந்த மொழியை யாரெல்லாம் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறீர்கள்? இதனால் என்ன பயன் ?
ப : புதிய மொழி ஒன்றைக் கற்றுக் கொள்ளும்போது நம்மை அது புத்துணர்ச்சியாக்கும். அப்படி கற்றுக் கொள்வதற்கு எளிமையான மொழி இது. இன்னும் குழந்தைத்தனமாக சொல்ல வேண்டுமெனில், இரண்டு நண்பர்கள் ரகசியமாக பேசுவதற்கு இந்த மொழியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மொழிக்கான பயிற்சியை முறைப்படுத்தி இந்த மொழியை கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கிறோம். இதற்காக பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு உதவுவதாக கூறியிருக்கிறார். கிளிக்கி மொழி இவர்களுக்கான மொழிதான் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் உலகத்திற்கான பொதுவான மொழியாக இருக்கும்.
கே : எதற்காக இந்த மொழியை கற்றுக் கொள்வதற்காக ஓர் இணையத்தளத்தை உருவாக்கினீர்கள் ?
ப : இந்த மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இணையதளம் மூலமாக அவர்களுக்கு முதலில் இந்த மொழியை கற்றுக் கொடுக்கலாம் என நினைத்தேன்.
ஆனால், இந்த இணையதளம் ஆரம்பித்த பிறகு பலரும் நேரடியாக வகுப்பு எடுக்கும்படி சொல்கிறார்கள். பலர் அவர்களுடைய பெயர்களை கிளிக்கி மொழியில் மாற்றி அதனை அவர்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
கே : இந்த மொழியில் ஒரு பாடல் உருவாகியிருப்பதாக கேள்விபட்டோம். அது குறித்து சொல்லுங்கள்?
ப : மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாகுபலி படம் வெளிவந்த சமயத்தில் பாடகர் பாப் ஸ்மிதா கிளிக்கி மொழியில் ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பலரும் கிளிக்கி மொழியில் பாடல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஸ்மிதாவே பலமுறை என்னிடம் கிளிக்கி மொழியில் மறுபடியும் ஒரு பாடல் பாட வேண்டும் என சொல்லியிருக்கிறார். சமீபத்தில் ஆண்ட்ரியா கிளிக்கி மொழியில் பாடியிருக்கிறார். அந்தப் பாட்டிற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். அந்தப் பாடல் வருகிற மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: