You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா பினாமி சொத்து வாங்கினார்' - வருமான வரித்துறை
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - சசிகலா வாங்கிய சொத்து
ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலா ரூ.168 கோடிக்கு 'பினாமி' சொத்துகள் வாங்கியது உண்மை என வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.
அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிதாக ஏராளமான சொத்துகளை வாங்கினார். அப்போது ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சசிகலா இவ்வாறு பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.
இதையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர் வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் சசிகலா ரூ.1,674 கோடியே 50 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சொத்துகளை சில பினாமிகள் மூலமாகவும் வாங்கியிருப்பது தெரியவந்தது என்கிறது அந்த செய்தி.
புதுச்சேரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் சசிகலாவின் பினாமி என்று கூறி அவர்களுக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. அவர்களது சொத்துகளை முடக்கம் செய்தது.
அதை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தினமணி - வணிக நிறுவனங்களில் தூய தமிழ்
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு 'வணிக நிறுவனங்களில் தூய தமிழ்த் திட்டம்' என்ற புதிய திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது என்கிறது தினமணி செய்தி.
பிற மொழிக் கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசும் அடித்தட்டு மக்களையும் ஊக்குவிக்கும் வகையில் தூய தமிழ்ப் பற்றாளா் பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பேருந்து நடத்துநா், பள்ளி இரவுக் காவலா், கல்லூரி மாணவா், காய்கறி விற்பனையாளா் உள்ளிட்ட பலா் இந்தப் பரிசுக்கு விண்ணப்பித்துள்ளனா். இந்தத் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து தற்போது 'வணிக நிறுவனங்களில் தூய தமிழ்த் திட்டம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வணிகத் துறை சாா்ந்த தூய தமிழ் சொற்களை புழக்கத்தில் கொண்டு வருதல், முடிந்தவரை வாடிக்கையாளா்களையும் தூய தமிழில் பேச ஊக்கப்படுத்துதல் ஆகியவையே இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும் என அகரமுதலி இயக்ககத்தின் இயக்குநா் தங்க.காமராசு கூறியுள்ளார்.
இந்து தமிழ் திசை - 'முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்'
அதிமுகவுக்கான மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என்று அதிமுக குற்றம் சாட்டுவதாக இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.
சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்துக்கும், அதிமுகவுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, முஸ்லிம் சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
அதிமுக உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் சிறுபான்மையின மக்களுக்கு உதவ இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அதிமுக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறது அவர்களின் அறிக்கை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: