ரஜினியின் தர்பார்: “படம் வாங்கியவர்களை காப்பாற்ற முடியவில்லை, தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்?” - டி. ராஜேந்தர்

பட மூலாதாரம், Lyca
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.ராஜேந்தர் மற்றும் செயலாளர் மன்னன் இருவரும் இன்று தர்பார் பட சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தர்பார்நஷ்டம்
செய்தியாளர் சந்திப்பில் அவர், "ரஜினிகாந்த் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி, லைக்கா திரைப்பட நிறுவனம் தயாரித்த தர்பார் திரைப்படத்தை வாங்கிய திரைப்பட விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், நஷ்டமடைந்திருக்கிறார்கள் என்கிற சூழ்நிலையில் அவர்கள் அவர்களுடைய கோரிக்கைகளுக்காக பல்வேறு விதமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ரீதியாக பாதிக்கப்பட்ட விநியோகஸ்தரர்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள எங்களுடைய சங்கங்களில் இது தொடர்பாக புகார் கொடுத்திருந்தார்கள்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தரர்கள் கூட்டமைப்பில் புகார் மனு கொடுத்திருந்தார்கள். இந்தப் படத்தை விருப்பப்பட்டு இவர்கள் குறைந்தபட்ச உத்தரவாதத்துடன் வாங்கியிருந்தால் சட்டரீதியாக சென்று அந்த தயாரிப்பாளரையோ அல்லது வேறு யாரையோ இந்த சங்கங்கள் வலியுறுத்தாது என்பது ஏற்கனவே கடைப்பிடிக்கப்படும் வழிமுறை. இவ்வளவு விலை கொடுத்து அவர்கள் வாங்கியிருக்கக்கூடாது. இதை வேறுவிதமாகத் தான் அணுக வேண்டும் என நானும், மன்னனும், மூத்த விநியோகஸ்தரர்களும் வலியுறுத்தியுள்ளோம்," என்றார்.

பட மூலாதாரம், Twitter
முருகதாஸிடம் கேட்பது ஏன்?
"ஒரு தவறான கருத்து பரப்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட விநியோகஸ்தரர்கள் அத்தனை பேரும் தயாரிப்பாளரிடம் தான் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளரிடம் தான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.வட்டி வாங்கி நஷ்டப்பட்டவர்கள் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் இந்தப் படத்தின் இயக்குநருக்கு இதுவரை யாருக்கும் கொடுக்காத அளவிற்கான சம்பளத்தைக் கொடுத்துவிட்டோம்.
அந்தப் படத்தின் கதாநாயகனுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்துவிட்டோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் நாங்களும் நஷ்டமடைந்திருக்கிறோம். இந்தப் படத்தின் பட்ஜெட்டை ஏற்றியது, இப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியது அந்த குறிப்பிட்ட இயக்குநர் தான். உங்களுடைய கோரிக்கையை அவர்களிடம் சொல்லுங்கள் என லைக்கா நிறுவன தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாக எங்களுடைய விநியோகஸ்தரர்கள் சொல்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
‘டப்பிங் படம்’
"ரஜினி நடித்த 'பேட்ட' படத்துடைய வசூலை இந்தப் படம் பெற்றிருந்தாலாவது நஷ்டத்தை நாங்கள் சமாளித்திருப்போம். ஆனால், இவ்வளவு விலைக்கு ஏற்றிக் கொடுத்துவிட்டீர்கள். அதோடு இல்லாமல் தவறான நேரத்தில் படம் வெளியிடப்பட்டுவிட்டது. பொங்கல் சமயத்தில் தர்பார் பழைய படமாகிவிட்டது. கலெக்ஷன் இப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுவிட்டது." என்றார்.

பட மூலாதாரம், Twitter
மேலும் அவர், "படத்தில் பாதி பேர் இந்தி பேசுகிறார்கள். இது டப்பிங் படம் மாதிரியாக உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் இதை யாரிடம் சொல்வது எனக் கேட்டவர்களிடம் நீங்கள் கேப்டன் ஆஃப் தி ஷிப் ஏஆர் முருகதாஸை சந்தித்துப் பேசுங்கள் எனப் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தரர்களிடம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைக்கா சொன்னதாக என்னிடத்திலும், மன்னனிடத்திலும் எங்களுடைய சங்கத்தில் சொன்னார்கள்.
ஏ. ஆர் முருகதாஸ் ஒரு தவறான கருத்தைப் பரப்புகிறார். அவரை இவர்கள் சந்திக்கச் சென்றது அவரிடம் நஷ்டஈடு வாங்குவதற்காக இல்லை. அவரை சந்தித்து அவர்களுடைய கோரிக்கை மனுவைக் கொடுப்பதற்காகவே சென்றார்கள். இது தவறா? அவர்களை ஏஆர் முருகதாஸ் சந்திக்கவில்லை. கோரிக்கை மனு கொடுப்பதற்காக அவருடைய அலுவலகம் சென்றதற்காகவே விநியோகஸ்தரர்கள் மீது எஃப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக முற்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய தரப்பு விளக்கம் என்னவெனில், பாதிக்கப்பட்ட விநியோகஸ்தரர்கள் யாரும் முருகதாஸை தவறான எண்ணத்தோடு சென்று அணுகவில்லை.
முருகதாஸிடம் சீனியர் இயக்குநர் என்கிற முறையில் சொல்கிறேன்.. இன்று விநியோகஸ்தரர்கள் மீது குற்றம் சுமத்திவிட்டீர்களே உங்களுக்கும் சங்கம் இருக்கிறது. அங்கே இது தொடர்பாக புகார் மனு கொடுத்தீர்களா? சங்கங்கள் இருக்கும்போது நேரடியாக காவல்துறையைத்தான் அணுகுவீர்கள் என்றால் இத்தனை சங்கங்கள் எதற்காக?," என்று கேள்வி எழுப்பினார்.
"இவர்களுடைய படத்தை வாங்கியவர்களைக் காப்பாற்ற முடியாத இவர்களா இந்த தமிழ் நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள்?," என்று கூறினார்.
சட்டரீதியாக அணுகுவோம்
"'தர்பார்' படத்தை வாங்கியதற்காக ஒருவேளை இவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக முத்தரப்பையும் ஒன்றுதிரட்டி அவர்களை காப்பாற்றுவதற்கு நாங்கள் நிச்சயம் குரல் கொடுப்போம். நாங்களும் சட்டரீதியாக பிரச்னையை அணுகுவோம்," என்றார் டி. ராஜேந்தர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தரர் கூட்டமைப்பின் செயலாளர் மன்னன் பேசும்போது, செல்வமணி அவர்கள் தவறான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். விநியோகஸ்தரர்கள் தவறான கணக்கு சொல்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தவறான கணக்கு சொன்னால் கத்தி எப்படி ஜெயிக்கும் ? வசூல் பண்ணாத படத்தை வசூல் பண்ணவில்லையென்று தானே சொல்ல முடியும். முருகதாஸ் கொடுத்த வழக்கை தார்மீக அடிப்படையில் அவர் வாபஸ் வாங்க வேண்டும்,"என்றார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: “எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்” - சீனாவில் சிக்கி தவிக்கும் பெண்
- மாநிலங்களவையில் கர்ஜித்த விப்லவ் தாக்கூர் - யார் இவர்? பேசியவை என்ன? - 5 தகவல்கள்
- இந்தியா - நியூசிலாந்து: இந்திய அணி போராடி தோல்வி, தொடரை வென்ற நியூசிலாந்து
- இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும் - பிரதமர் மோதி வலியுறுத்தல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













