பிகில், கைதி: தீபாவளிக்கு மோதும் திரைப்படங்கள் - ரீலிஸ் தேதி என்ன?

விஜய் நடித்த பிகில் திரைப்படமும் கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் தீபாவளியை ஒட்டி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பிகில், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே தீபாவளியை ஒட்டி வெளியாகுமெனக் கூறப்பட்டிருந்தது. நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், பிகில் திரைப்படம் வெளியாகும் தேதி இன்று மாலை ஆறு மணியளவில் அறிவிக்கப்படுமென அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இதற்கு சில மணி நேரத்திற்குப் பிறகு, கார்த்தி நடித்த கைதி படத்தைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபு, கைதி படத்தின் தமிழ், தெலுங்கு போஸ்டர்களை வெளியிட்டு, படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகுமெனக் கூறினார்.

அதன் பிறகு மாலை ஆறு மணியளவில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பிகில் படமும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகுமென அறிவித்தார். அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், இரு நாட்களுக்கு முன்பாக அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையே இந்தப் படங்கள் வெளியாகின்றன.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கியிருக்கும் பிகில் திரைப்படம், பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. கார்த்தி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கைதி திரைப்படம் பாடல்கள், காதல் காட்சிகள் இல்லாத த்ரில்லராக உருவாகியிருக்கிறது.

இந்த இரு திரைப்படங்களின் ரிலீஸ் தேதியையும் முன்வைத்து விஜய், கார்த்தி ரசிகர்கள் ட்விட்டரில் இது தொடர்பாக #BigilReleaseDate, #KaithiDiwali உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டாகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பிகில் இசை வெளியீட்டு விழா: விஜய் பேசியது என்ன?

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :