You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரையில் தலித் சிறுவனின் முதுகில் பிளேடால் கீறிய சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன? #BBCGroundReport
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் பள்ளிக்கூட மாணவன் ஒருவனின் முதுகை சக மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் ஜாதி தொடர்பான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உண்மையில் அங்கு நடந்தது என்ன?
மதுரை நகரிலிருந்து சுமார் 23 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் பாலமேட்டிற்கு அருகில் இருக்கிறது மறவப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த சரவணக்குமார் (14) பாலமேட்டில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.
அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க ஜாதி பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்துவருகிறார்கள். அக்டோபர் 11ஆம் தேதியன்று - வெள்ளிக்கிழமை - மாலையில், பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஆதிக்க ஜாதி பிரிவைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சரவணக்குமாரின் முதுகில் கழுத்திலிருந்து நீளமாக பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"அன்றைக்கு சாயங்காலம் என் ஃப்ரண்டோட ஸ்கூல் பேகை அவன் எடுத்து ஒளிச்சு வச்சுட்டான். அதை நான் கண்டுபிடிச்சு எடுத்தேன். அதுனால அவனுக்குக் கோபம் வந்து, நான் ஒளிச்சு வச்சதை நீ ஏன்டா எடுத்தன்னு கேட்டான். அப்பறும் என்ன குத்தூசியால் குத்தவந்தான். அதை என் ஃப்ரண்ட் தடுத்துட்டான். அதுக்குப் பிறகு பஸ் ஸ்டாண்ட்ல உட்கார்ந்திருக்கும்போது, என் இடத்தில ஏன்டா உட்கார்ரன்னு சண்டைக்கு வந்தான். அப்புறம் எங்கேயோ போய் பிளேடு எடுத்துட்டு வந்து ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிட்டு, முதுகில கிழிச்சிட்டான்" என பிபிசியிடம் கூறினார் பாதிக்கப்பட்ட மாணவரான சரவணக்குமார்.
உடனடியாக சரவணக்குமாரின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரவணக்குமாருக்கு முதலுதவி செய்யப்பட்டது. காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டு, மாணவர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சில நாட்கள் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பியிருக்கும் சரவணக்குமார், தற்போது பாலமேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
"அந்த ஊர் பசங்க எப்பவுமே இப்படித்தான். ஏற்கனவே பல முறை என் மகனோட வம்பு இழுத்து, அடிச்சிருக்காங்க. பள்ளிக்கூடத்தில் போய் புகார் செய்தால் அவர்கள் அப்போதைக்குக் கண்டிப்பார்கள். அதோடு அவ்வளவுதான். அப்படி அலட்சியமாகவிட்டதால்தான் இந்த அளவுக்கு ஆகிவிட்டது" என்கிறார் சரவணக்குமாரின் தாயான ராசாத்தி.
ராசாத்தி கூலி வேலை செய்து வருகிறார். சரவணக்குமாரின் தந்தை ராமு வேறு ஊரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தனித்தனியாக வசிக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமம்தான் மறவப்பட்டி. இந்த கிராமத்தில் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 70 குடும்பத்தினர் இருக்கிறார்கள். அகமுடையார், பிள்ளைமார், மறவர் என பிற ஜாதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 300 குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
இங்குள்ள தாழ்த்தப்பட்டோருக்கும், ஆதிக்க ஜாதியினருக்கும் இடையில் இதற்கு முன்பாக ஒன்றிரண்டு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அவை ஊருக்குள்ளேயே பேசித் தீர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளில், மறவப்பட்டியில் ஆதிக்க ஜாதியினர் வசிக்கும் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பணிந்து செல்லக்கூடாது என்பது போன்ற பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
"ஒரு காலத்தில் அப்படியெல்லாம் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. இப்போது யாரும் அப்படிச் செய்வதில்லை. ஆனால், முதியவர்கள் சிலர் பழைய பழக்கத்தில் அப்படிச் செய்கிறார்கள்" என்கிறார் சரவணகுமாரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் ஆய்வாளரான மஞ்சமலை. மறவப்பட்டியைப் பொறுத்தவரை, இரு தரப்பிலுமே பலரும் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, காவல்துறை போன்றவற்றில் பணியாற்றி வருகிறார்கள்.
"என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை பள்ளிச் சிறுவர்களுக்கு இடையிலான பிரச்சனையாகத்தான் பார்க்கிறேன். இதை ஜாதிச் சண்டையாகப் பார்க்க முடியாது" என்கிறார் மஞ்சமலை.
இது தொடர்பாக சரவணக்குமார் படிக்கும் பாலமேடு அரசு மேல் நிலைப் பள்ளியில் சென்று கேட்டபோது, பள்ளிக்கூடத்திற்குள் ஜாதி ரீதியான பாகுபாடு மாணவர்களிடம் இல்லை என அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் கடுமையான மறுத்தனர். "இங்கே எந்த மாணவரையும் ஜாதியைக் குறிக்கும் வகையில் கயிறு கட்டிவரவோ, பொட்டு வைத்துவரவோ அனுமதிப்பதில்லை. நீங்கள் எந்த மாணவரை வேண்டுமானாலும் சோதிக்கலாம்" என அங்கிருந்த உதவி தலைமையாசிரியர் தெரிவித்தார்.
பள்ளிக்கூடத்தில் இதற்கு முன்பாக இதுபோல சண்டை நடந்து, சரவணகுமார் அடிக்கப்பட்டது குறித்து அவரது தாய் ராசாத்தி புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை எனக் கேட்டபோது, "சம்பந்தப்பட்ட மாணவர்களைக் கூப்பிட்டு அப்போதும் கண்டித்திருக்கிறோம். ஆனால், அது எல்லாமே பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு இடையில் நடக்கும் சண்டைகள். அது போன்ற சண்டைகள் எல்லா மாணவர்களுக்கு நடுவிலும் நடக்கின்றன" என்றார் அவர்.
"இந்தக் குறிப்பிட்ட விவகாரம் பள்ளிக்கூடத்திற்கு வெளியில், மாணவர்களுக்குள் நடந்த சண்டை. முதுகில் பிளேடால் கிழித்தது தவறு. அதற்கான நடவடிக்கையை காவல்துறை எடுத்துவருகிறது. பள்ளிக்கூடத்திற்குள் ஜாதி சார்ந்த எந்தப் பிரிவினையையும் நாங்கள் அனுமதிப்பதில்லை" என பிபிசியிடம் கூறினார் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜான்.
மறவப்பட்டியில் உள்ள ஆதிக்க ஜாதியினர் பகுதியின் ஊர்த் தலைவரான கோபாலிடம் இந்த சம்பவம் குறித்துக் கேட்டபோது, "பிளேடால் முதுகைக் கிழித்தது தவறுதான். அது குறித்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதற்கு ஜாதி காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. இந்த ஊரில் அம்மாதிரி பிரச்சனையே இல்லாதபோது இப்படி குற்றம்சாட்டக்கூடாது" என்கிறார்.
பிளேடால் முதுகைக் கிழித்த மாணவனின் தாய் ராசம்மா ஆடு மேய்த்து வருகிறார். தந்தை மதுரையில் வண்டி இழுத்து வருகிறார். அவரது குடும்பமும் இந்த சம்பவத்தால் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
ராசம்மாவிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது, "அன்றைக்கு ஆடு மேய்க்கப்போய்விட்டு சாயந்தரம் வந்தேன். அப்போதுதான் இந்த மாதிரி நடந்ததாகச் சொன்னார்கள். என் மகனிடம் கேட்டேன். 'அவன் என்னை வைதான். காலையிலிருந்து வம்பு இழுத்தான். அவன் முதலில் என் பையைத் தூக்கிட்டுப்போனான். நானும் பையைத் தூக்கிட்டுப் போனேன்' என்றான். கீழே கிடந்த பிளேடை எடுத்து விளையாட்டுக்குத்தான் செய்தேன் என்கிறான்" என்று மட்டும் சொன்னார்.
பாலமேடு காவல்நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர், 18 வயதுக்குட்பட்டவர் என்பதால், சிறுவர் நலக் குழுமத்திற்கு இது தொடர்பான தகவல் அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்