ரேவதி: அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரிஸ்டாட்டில் பெயருக்கு மேலே உயரப் பறக்கும் திருநங்கையின் பெயர் - நம்பிக்கை பகிர்வு

    • எழுதியவர், மு. நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

"தமிழ் இலக்கிய உலகில் பாலின சமத்துவம் இல்லை. ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை." இது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான துறையிலிருந்து உயர எழுந்து இருக்கிறார் திருநங்கை அ. ரேவதி.

மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே ஆகிய எழுத்தாளர்களுடன் இவரது பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முகப்பில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர், டெமோஸ்தினீஸ், சீசாரோ என ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர்கள் பெயர் ஏன் ஒன்று கூட இல்லை என எதிர்ப்பு தெரிவித்து கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

1989ஆம் ஆண்டு இவர்களே சில பெண் எழுத்தாளர்களின் பெயரை ஒரு பேனரில் எழுதி அந்த நூலகத்தின் முகப்பிலிருந்த ஆண் எழுத்தாளர்கள் பெயருக்கு மேலே வைத்தனர். ஆனால், அந்த பேனர் அங்கு அதிக நாட்கள் இல்லை. அகற்றப்பட்டுவிட்டது.

சரியாக 30 ஆண்டுகளுக்குப்பின் பெண்கள் உரிமைக்காக அங்கு நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூரும் வகையில் சர்வதேச அளவில் சில முக்கிய பெண் ஆளுமைகளின் பெயர்கள் தாங்கிய பேனர் மீண்டும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆளுமைகளில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை அ. ரேவதியும் ஒருவர்.

அவருடன் பேசினோம்,

யார் இந்த அ. ரேவதி?

"நீங்கள் சுலபமாக கேட்டுவீட்டீர்கள். ஆனால், எனக்குள் இருக்கும் ரேவதியை நான் கண்டடைய நான் எதிர்கொண்ட சிரமங்கள் அதிகம்" என்கிறார் அ. ரேவதி.

நாமக்கல் மாவட்டத்தில், துரைசாமி என்ற ஆண் பெயரில் சிறுவயதில் அறியப்பட்ட ரேவதி, ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போதே தன்னுள் ஏற்பட்ட பாலின மாற்றத்தை உணர ஆரம்பித்தார். பள்ளியிலும், வசிக்கும் இடத்திலும் பல வித கேளிகளுக்கும் சீண்டல்களுக்கும் ஆளானவர், பெற்றோராலும், சகோதரர்களாலும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறார்.

பின் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறியவர் டெல்லி, மும்பை, என பல்வேறு ஊர்களில் அலைந்து திரிந்திருக்கிறார். பொதுச் சமூகம் திருநங்கை, திரு நம்பிகளுக்குத் தரும் அத்தனை வலிகளையும் இவருக்கும் தந்திருக்கிறது.

பின் அங்கிருந்து பெங்களூரு சென்றவர் 1999ஆம் ஆண்டு 'சங்கமா' அமைப்பில் இணைந்திருக்கிறார்.

"இப்போது நீங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் ரேவதியை பண்படுத்தியது சங்கமாவில் இருந்த நூலகம்தான். நான் பெரிய இலக்கிய ஆளுமை எல்லாம் இல்லை. சொல்லப்போனால் பெரிதாகப் புத்தகம் வாசித்ததும் இல்லை. மொழி குறித்த அச்சம்கூட இருந்தது. எல்லாவற்றையும் புனிதமாக்கிய இந்த சமூகம் மொழியையும் புனிதமாக்கிவிட்டது, புனிதங்களை எதிர்கொள்வதிலிருந்த அச்சம்தான் அது" என்கிறார் எழுத்தாளர் அ. ரேவதி.

ஆனால், சங்கமாவில் இருந்த நூலகம்தான் எனக்கு வாசிப்பு அனுபவத்தை தந்தது. அங்குப் பல நூல்களை வாசித்திருக்கிறேன். அந்த சமயத்தில் எனக்குள் கேள்வி எழுந்தது. திருநங்கைகள், திருநம்பிகளின் வலிகளை சொல்லும் வெளிநாட்டவர்கள் எழுதிய ஆங்கிலப் புத்தகங்களே அதிகம் உள்ளன. இந்தியப் பார்வையில் எங்களின் பிரச்சனைகளைச் சொல்லும் ஒரு புத்தகம் கூட இல்லையே என்று எனக்குள் எழுந்த இந்த கேள்விதான் என்னைப் புத்தகம் எழுதத் தூண்டியது. ஆனால், அப்போதும் எழுதுவது குறித்த தயக்கம் இருந்தது. எனக்கு எழுத்து குறித்த நம்பிக்கை தந்தது எழுத்தாளர் பாமாதான். எனது தயக்கத்தை உடைத்து புத்தகம் எழுதத் தூண்டியவரும் அவர்தான்" என்று அந்த நாட்களை நினைவு கூறுகிறார் ரேவதி.

முதல் புத்தகம்

'உணர்வும் உருவமும்' என்ற நூலை 2004ஆம் ஆண்டு எழுதினார் ரேவதி. இந்தியாவில் திருநங்கைகள் குறித்து திருநங்கை ஒருவரே எழுதிய முதல் புத்தகம் இது. இந்த புத்தகத்தில் பேசப்பட்ட விஷயங்கள் விவாதத்திற்கு வித்திட்டது. திருநங்கைகளின் வாழ்வியல், அவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவர்களின் உரிமை என பல்வேறு விஷயங்களை திருநங்கைகளின் பார்வையிலிருந்து பேசிய அந்த நூல் பல விருதுகளையும் பெற்றது.

"நான் முதல் புத்தகத்தை எழுதிவிட்டேனே தவிர, இலக்கியத்தரமான எழுத்து எனக்குக் கைவரவில்லையோ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. அந்த சமயத்தில் பென்குயின் பதிப்பகம் 'உணர்வும் உருவமும்' புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட அனுமதி கேட்டது. இது எனக்கு நம்பிக்கை தந்தது. பென்குயின் பதிப்பகத்தாரிடம், "நான் என் சுயசரிதையை எழுதுகிறேன். அதனை நேரடியாக ஆங்கிலத்தில் வெளியிட முடியுமா?" என்று கேட்டேன். அவர்களும் சம்மதித்தார்கள். அப்படி வெளியானதுதான் 'The Truth about me: A Hijra life story' புத்தகம்" என்கிறார் அவர்.

அவர் தமது சுயசரிதையை ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டதற்கும் காரணம் கூறுகிறார்.

"அந்த புத்தகத்தில் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதி இருந்தேன். இது நேரடியாகத் தமிழில் வந்தால், அது பலருக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தலாம். அதனால்தான் நான் ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டேன். இதில் விந்தை என்னவென்றால் எனக்கு ஆங்கிலம் தெரியாது" என்கிறார்.

பின் பலர் அளித்த நம்பிக்கை, அந்த புத்தகம் தமிழில் வர வேண்டிய தேவை குறித்து பலர் வலியுறுத்திய பின் அதனைத் தமிழில் "வெள்ளை மொழி" என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்.

தம் எழுத்தை செறிவாக்க எழுத்தாளர்க பெருமாள் முருகன் உதவுவதாகக் கூறுகிறார் ரேவதி.

"அவர் வீட்டின் அருகில்தான் என் வீடும். அடிக்கடி அவரை சந்திப்பேன். நிறைய உரையாடுவோம். என் எழுத்தை மேம்படுத்த அவர் ஆலோசனைகள் கூறுவார்" என்கிறார் ரேவதி.

கொலம்பியா அங்கீகாரம்

பட்லர் நூலகத்தில் இவர் பெயர் இடம் பெற்றதே, இவருக்கு இரண்டு நாட்களுக்குப் பின்தான் தெரிந்திருக்கிறது.

"கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. படிக்கும் நண்பர் ஒருவர்தான் இந்த விஷயத்தை எனக்குத் தெரியப்படுத்தினார். முதலில் ஏதோ சாதாரண விஷயம் என்று நினைத்துவிட்டேன். பின்தான், அங்குப் பெண் ஆளுமைகள் பெயர் வைப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டம் எல்லாம் தெரிந்தது. உண்மையில் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்" என்று கூறும் ரேவதி, அதனை நேரில் சென்று பார்க்க விரும்புவதாக கூறுகிறார்.

"நேரில் சென்று பார்க்க ஆசையாக இருக்கிறது. ஆனால், பொருளாதாரம்தான் தடையாக இருக்கிறது" என்கிறார் அவர்.

வாழ்வே நாடகமாக...

நாடக செயற்பாட்டாளர்கள் ஸ்ரீஜித், அரங்க கலைஞர் மங்கை உள்ளிட்டவர்களுடன் இயங்குகிறார் ரேவதி.

தன் வாழ்க்கையைப் பல மேடைகளில் ஓரங்க நாடகமாக முப்பதுக்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றியிருக்கிறார் ரேவதி.

அவர், "எங்களின் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சேர்க்க எழுத்தும், மேடையும்தான் சிறந்த வழி. அதனை என்னால் முடிந்த அளவுக்கு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன்" என்கிறார்.

திருநங்கைகள் திருநம்பிகள் குறித்த சமூகத்தின் பார்வை கொஞ்சமேனும் மாறி இருக்கிறது. ஆனால், இது போதாது. இந்திய உச்சநீதிமன்றத்தின் சட்டப்பிரிவு 377 குறித்த தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்கிறார் அவர்.

துயரங்களை கடந்து வந்த திருநங்கை பொன்னியின் போராட்ட கதை | Tale of Transgender

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :