ரஜினிகாந்த் இமயமலை செல்கிறார்: முடிந்தது ஏ.ஆர். முருகதாஸின் தர்பார், தொடங்க இருக்கிறது சிவா திரைப்படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு பயணம்"

ரஜினிகாந்த் 10 நாள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்குப் புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்குச் சென்று தங்கத் திட்டமிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம், வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மும்பையில் இப்படத்தின் படப் பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடந்து வந்தது. இதில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.

இதற்கிடையே, இயக்குநர் சிவா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ரஜினியின் அடுத்த படமும் முடிவாகி, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் படப் பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ரஜினி. உடல்நலக் குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இமயமலை பயணத்தை ரத்து செய்தார்.

8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த 2018 மார்ச் மாதத்தில் 'காலா', '2.0' ஆகிய படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் இமயமலைக்கு சென்றார்.

பாபாஜி பக்தர்கள் தங்குவதற்காக ரிஷிகேஷில் இருந்து சுமார் 275 கி.மீ. தொலைவில் உள்ள துவாராஹாட்டில் தான் புதிதாகக் கட்டிக் கொடுத்துள்ள குருசரண் ஆசிரமத்தையும் அப்போது ரஜினி பார்வையிட்டார். அங்கு அவர் 2 நாட்கள் தங்கினார்.

அந்த பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவர், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட' படத்தில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் மீண்டும் தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சென்னையிலிருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட ரஜினி, இமயமலையின் அடிவாரமான உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார். அங்கிருந்து அடுத்தடுத்த இடங்களுக்கு காரில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முழுக்க ஆன்மிக சுற்றுலாவாக அமையும் இப்பயணத்தில் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு அவர் செல்கிறார். துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்கி, அடுத்து பாபாஜி குகைக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் இயக்குநர் சிவா படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார்.

தினமணி: "10 ரூபாய்க்கு சாப்பாடு, ரூ 1 செலவில் மருத்துவப் பரிசோதனை"

மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு, ஒரு ரூபாய் செலவில் 200 வகையான நோய்களுக்குப் பரிசோதனை உள்ளிட்ட வாக்குறுதிகள் சிவசேனை கட்சியின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும் மும்பையின் ஆரே பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவது குறித்து தோ்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மகாராஷ்டிரத்தில் 288 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை கட்சி 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தோ்தலுக்காக பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொண்ட அறிக்கையை, மும்பையில் சிவசேனைக் கட்சித் தலைவார் உத்தவ் தாக்கரேவும், அவரது மகனும், யுவசேனை அமைப்பின் தலைவருமான ஆதித்யா தாக்கரேவும் சனிக்கிழமை வெளியிட்டனார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநிலம் முழுவதும் 1,000 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும். அந்த உணவகங்களில் ரூ.10-க்கு முழுச் சாப்பாடு வழங்கப்படும். அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாநிலம் முழுவதும் 'ஒரு ரூபாய் கிளினிக்குகள்' தொடங்கப்படும். அங்கு 200 வகையான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்படும். வீட்டு உபயோகத்துக்கான மின்சாரக் கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். கடன் பிரச்சனையில் இருந்து விவசாயிகள் மீட்கப்படுவர் என்று அந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி: "'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் - மேலும் ஒரு மாணவி தாயுடன் கைது"

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தர்மபுரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவி மற்றும் அவருடைய தாயாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை சவீதா மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடாக மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்ந்தது தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை கடந்த மாதம் 26-ந்தேதி தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சென்னையைச் சேர்ந்த மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர் இர்பான் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்ததை தொடர்ந்து, அவரும் நீதிமன்ற காவலில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், காவல் நீட்டிக்கப்பட்டு தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தர்மபுரியை சேர்ந்த அர்ஜுனன் மகள் பிரியங்கா, ஆள்மாறாட்டம் செய்து சென்னை சவீதா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் பிடித்தனர். பின்னர் அவர்கள், விசாரணைக்காக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் 2 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அப்போது தாய்-மகளின் முகங்கள் துணியால் மூடப்பட்டிருந்தன. அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன்பிறகு தாயும், மகளும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே மாணவி பிரியங்கா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் படித்து வந்த சென்னை சவீதா மருத்துவ கல்லூரி முதல்வர் தாமோதரன், மருத்துவ கண்காணிப்பாளர் பொன்னம்பலம் நமசிவாயம் மற்றும் ஒரு பெண் பேராசிரியை ஆகியோர் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி பிரியங்கா தொடர்பான ஆவணங்களை கல்லூரி முதல்வர் தாக்கல் செய்தார். அவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். மாணவர் சேர்க்கையின் போது ஆள்மாறாட்டத்தை கவனிக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களின் பெயர் விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர். 3 மணி நேரத்துக்கும் மேல் இந்த விசாரணை நீடித்தது. விசாரணை முடிந்து மாலை 5.25 மணியளவில் கல்லூரி முதல்வர் உள்பட 3 பேரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "திருச்சி நகைக்கடையில் திருட்டுபோன 12 கிலோ நகைகள் மீட்பு"

திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் நடந்த திருட்டு வழக்கில் சரணடைந்த முக்கியக் குற்றவாளி முருகனிடமிருந்து 12 கிலோ தங்க நகைகளை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த 2-ஆம் தேதி சுவற்றில் துளையிட்டு ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ், முருகன் ஆகிய இருவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார்.

இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் முருகன் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி வந்த பெங்களூரு போலீஸார் பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை சனிக்கிழமை மீட்டனர். இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறைக்கு எந்தத் தகவலையும் பெங்களூரு போலீஸார் அளிக்காமல் திருவெறும்பூரில் முருகன் தங்கியிருந்த வீட்டை சோதனையிடச் சென்றனர். அப்போது, திருச்சி மாவட்ட போலீஸார் முருகன் வீட்டை பூட்டி சீல் வைத்திருந்ததைக் கண்டு ஏமாற்றத்துடன், பெரம்பலூர் வழியாக முருகனை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனங்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் பெங்களூரு போலீஸார் எனத் தெரியவந்தது.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

மாமல்லபுரத்துக்கு இப்படி ஒரு வரலாறா!!! | Mamallapuram & china connection | வியக்க வைக்கும் உண்மைகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :