You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா மீதான துருக்கி நாட்டின் தாக்குதல்: ஒரு லட்சம் மக்கள் பரிதவிப்பு - ஐ.நா தகவல் மற்றும் பிற செய்திகள்
சிரியா மீதான துருக்கி நாட்டின் தாக்குதல்: ஒரு லட்சம் மக்கள் பரிதவிப்பு
குர்து படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா கூறுகிறது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனத் துருக்கி அதிபர் எர்துவான் கூறி உள்ளார்.
ஐ.எஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துகள் நின்றனர். சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாகச் செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் பகுதியில் இருந்து தனது துருப்புகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்கா. இதனை முதுகில் குத்தும் செயலாகக் கருதுகிறது சிரியா ஜனநாயகப் படை.
விரிவாகத் தெரிந்து கொள்ள:
துருக்கி - சிரியா தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்புகள்
ஷி ஜின்பிங் - நரேந்திர மோதி சந்திப்பு - இன்று என்ன திட்டம்?
வெள்ளிக்கிழமையன்று தமிழகம் வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் ஐந்து மணி நேரம் பேசியுள்ளனர்.
நேற்றைய சந்திப்பு குறித்து, "கவின்மிகு மாமல்லபுரத்தை சீன அதிபருடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி" என பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.
மேலும், மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரிவாகப் படிக்க:ஷி ஜின்பிங் - நரேந்திர மோதி சந்திப்பு - இன்று என்ன திட்டம்?
மாமல்லபுரத்தில் மோதி - ஜின்பிங்: இன்று என்ன நடந்தது? - 10 தகவல்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான முறைசாரா சந்திப்பிற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
"அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே! இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் குறிப்பிட்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
கெளதம் வாசுதேவின் உதவி இயக்குநர் பூம் பூம் மாட்டுக்கார குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கிய கதை
அவர் விருப்பத்தின் வழியில் சென்று இருந்தால், இந்நேரம் ஒரு திரைப்படத்தை இயக்கி இருப்பார். இதழியல் துறையிலேயே சிறப்பாக இயங்கிய அவர் அந்த திரைப்படங்களுக்காக விருதுகளைக் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால், ஒரு புள்ளியில் திரைத்துறை தந்த அனைத்து சௌகரியங்களையும் உதறிவிட்டு ஆதியன் சமூக குழந்தைகளுக்காகச் செயல்படத் தொடங்கிவிட்டார். ஆதியன் சமூகம் என்றால் உங்களுக்குப் புரியாமல் போகலாம். எல்லாருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் பூம் பூம் மாட்டுக்கார சமூகம்.
அவர் 'வானவில்' ரேவதி.
விரிவாகப் படிக்க:கெளதம் வாசுதேவின் உதவி இயக்குநர் சமூக செயற்பாட்டாளர் ஆன கதை
ரஜினிகாந்த் - சிவா கூட்டணி உறுதியானது
நடிகர் ரஜினிகாந்தின் 168 -வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் சிவா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித்துடன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து நான்கு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சிவா.
விரிவாகப் படிக்க:அஜித்தை தொடர்ந்து ரஜினிகாந்தை இயக்குகிறார் சிவா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்