You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி.வி. தொடர்களை உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து ஏன் பார்க்கக் கூடாது? - ஒரு மனநல ஆய்வு
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
'உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களைப் பழிவாங்க நீங்கள் எந்த அளவுக்கும் செல்லலாம்…சட்டம் காவல் என்று எது குறித்தும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்..`
இதைத்தான் இன்றைய பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்கள் நமக்கு சொல்கின்றன என்ற விமர்சனம் பரவலாகவே உண்டு.
சினிமா பெருமளவில் வெகுஜன மக்களைச் சென்று சேருகிறது என்றால், மிக எளிதாக மக்களைச் சென்றடைகிறது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், தொடர்களும்.
ஆனால் அந்த தொடர்களில் காட்சிப்படுத்தப்படும் குடும்ப அமைப்புகளுக்கும் நடைமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் மனோதத்துவ மருத்துவர் சிவபாலன்.
சமீபத்தில் ஒரு பிரபலதொலைக்காட்சி சானலில் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும், தொடரில் பெண்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகக் காட்சிகள் அமைந்ததால் அந்த சானலுக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த சீரியல் தொடங்குவதற்கு முன்பு ஆறு நாட்களுக்குத் தொடர்ந்து , 30 நொடிகள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மன்னிப்பு விவகாரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதால் நடைபெற்றது ஆனால் தினம் தினம் சிறு சிறு காட்சிகளின் மூலமாகவோ அல்லது கதாபாத்திரங்கள் மூலமாகவோ இந்த தொடர்கள் நமது இல்லங்களில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
'நம்பிக்கையற்ற தன்மை'
தொலைக்காட்சிகளில் வரும் பெரும்பாலான எதிர்மறை கதாபாத்திரங்களையும், சூழல்களையும் நாம் தொடர்ந்து பார்க்கும்போது, "மனிதர்கள் மீதுள்ள நம்பிக்கை குறையத் தொடங்கி உறவுகளில் அது பாதிப்பை ஏற்படுத்தும். நாளடைவில் குடும்ப அமைப்பையே அது பாதிக்கும்." என்கிறார் மருத்துவர் சிவபாலன்.
மேலும், "சினிமாவோ , நாடகத் தொடரோ இரண்டுமே கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான், அதில் சித்தரிப்பதுபோல், நிஜ வாழ்க்கையில் முழுமையான நல்லவர்கள் என்றோ அல்லது முழுமையான கெட்டவர்கள் என்றோ யாரும் இல்லை. அனைத்து மனிதர்களுக்குள்ளும், நல்ல குணங்களும் தீய குணங்களும் சேர்ந்தே இருக்கும். எனவே இம்மாதிரியான காட்சிகளால் நாம் நிஜ மனிதர்களை மதிப்பீடு செய்யத் தொடங்கிவிடுவோம். அவர்களின் சிறு தவறுகளையும் பலவீனங்களையும் வைத்து அவர்கள் குறித்து நாமே தவறான ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்." என்கிறார் சிவபாலன்.
இந்தியாவில் தொலைக்காட்சிகளில் வரும் கருத்துகள் குறித்தோ காட்சிகள் குறித்தோ புகார் தெரிவிக்க ஒளிபரப்பு தகவல் புகார் கவுன்சில் உள்ளது (Broadcasting content complaint council ) இந்த சுயாதீன கண்காணிப்பு அமைப்பு 2011ஆம் ஆண்டு இந்தியன் பிராட்காஸ்டிங் பவுண்டேஷனால் அமைக்கப்பட்டது.
இதன்படி நேயர்கள் வன்முறையைத் தூண்டும் காட்சிகளையோ, குழந்தைகளுக்கு எதிரான காட்சிகளோ, தகாத வார்த்தைகளைக் கொண்ட காட்சிகளோ என பல்வேறு பிரிவில் தங்கள் புகார்களை அளிக்கலாம்.
'குற்ற உணர்வற்ற நிலை'
ஒரு தொலைக்காட்சி தொடர் குறித்து நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பலாம்.
ஆனால் ஒரு விஷயத்தை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க அதுவே நமக்குச் சரி என்று தோன்றுவிடுகிறது.
நாடகத் தொடர்களில், எதை வேண்டுமானாலும் செய்து தாங்கள் நினைப்பதைச் சாதிக்கலாம் என்பது போன்ற கதாபாத்திரங்களை நாம் தொடர்ந்து பார்க்கும் போது, வாழ்க்கையில் நாம் தவறு செய்யும்போது நியாயமாக நமக்கு ஏற்படக்கூடிய குற்றவுணர்வுகள் இல்லாமல் போய்விடுகிறது என்கிறார் சிவபாலன்.
மேலும், "தொடர்ச்சியாக தொடர்களை பார்க்கும் போது நிஜ வாழ்க்கைக்கும், சீரியல் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசங்களை மறந்து நாம் எதில் இருக்கிறோம் என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது." என்கிறார் அவர்.
"இதில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களையும், அனைத்து விஷயங்களையும் உணர்வுப்பூர்வமாக அணுகுபவர்களையும் இது சட்டெனப் பாதித்துவிடுகிறது." என்கிறார் அவர்.
`குழந்தைகளுக்கானது அல்ல`
தொலைக்காட்சி தொடர்கள் மீது அதிக விருப்பம் கொண்டவர்களை மட்டுமல்லாமல் அவரை சாந்தவர்களையும் அது வெகுவாக பாதிக்கும் என்கிறார் சிவபாலன்.
இதற்கு வலு சேர்ப்பதுபோல் இருந்தது நம்மிடம் பேசிய குடும்பத்தலைவி லதாவின் கருத்து. பொதுவாக மதிய நேரங்களிலும், இரவு உணவு உண்ணும்போதும் தொடர்களைப் பார்த்ததாகவும், ஆனால் தன்னுடன் தொடர்களைப் பார்த்த தனது 8 வயது மகன் பள்ளியில் தனது நண்பனிடம் அதைப்பற்றி பேசியதாக ஆசிரியர் கூறியதிலிருந்து மகன் முன்னிலையில் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டதாகவும் கூறுகிறார் அவர்.
"அனைத்து மனிதர்களையும், சமமானவர்களாகவும், நம்பிக்கையுடையவர்களாகவும் ஒரு குழந்தை பார்க்கும்போதுதான் அந்த குழந்தை ஒரு நல்ல ஆரோக்கியமான சூழலில் வளர்கிறது என்று அர்த்தம். இம்மாதிரியான தொடர்கள், குழந்தைகள் தங்களுடன் இருப்பவர்களை சந்தேக கண்ணோட்டத்துடனும், போட்டியாளராகவும் பார்க்கும் தன்மையை வளர்க்கின்றன. " என்கிறார் சிவபாலன்.
குழந்தைகள் சிறு வயதில், டி.வி. சீரியல் பாத்திரங்களையும் நிஜ பாத்திரங்களையும் வேற்றுமைப்படுத்திப் பார்க்க முடியாமல் அதை நிஜமான மனிதர்கள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும், அது அவர்களை நிச்சயம் பாதிக்கும் என்றும் கூறுகிறார் அவர்.
பிற செய்திகள்:
- சீனா - வங்கதேச கூட்டணியால் திருப்பூர் தொழிலாளர்களுக்கு என்ன இழப்பு?
- சிறிய நட்சத்திரத்தை சுற்றும் மிகப் பெரிய கோள் - கோட்பாடுகளை திருப்பிப்போட்ட கண்டுபிடிப்பு
- ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’- ஐ.நா. சபையில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய மோதி
- மகளை நேசித்த தந்தை; இயற்கையை நேசித்த மகள் - ஒரு நெகிழ்ச்சி கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்