சினிமா டிக்கெட் விற்பனையில் தலையிடும் தமிழக அரசு - ரசிகர்களுக்கு பாதிப்பா?

சினிமா
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் முழுவதுமாக ஆன்லைன் மூலமாகவே விற்பனையை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிவிப்பின் உண்மையான அர்த்தம் என்ன?

செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சினிமாவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

"இப்போது புக் மை ஷோ போன்றவர்கள் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் அடுத்த நிலையில் உள்ள சில நகரங்களிலுமே ஆன்லைனில் டிக்கெட்களை விற்பனை செய்கிறார்கள். இனி அரசே ஆன்லைனில் டிக்கெட்டை விற்பனை செய்ய ஒரு செயலியை உருவாக்குவோம். முதலில் மல்டிப்ளக்ஸ்களிலும் பிறகு, மாநகரங்களில் உள்ள ஏசி தியேட்டர்களிலும், படிப்படியாக பிற திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனையை அந்த செயலி மூலம் செய்யத் துவங்குவோம். இணைய தளங்களில் இப்போது ஒரு டிக்கெட்டிற்கு கூடுதலாக 30 ரூபாய் வாங்குகிறார்கள். நாங்கள் விற்பனை செய்யும்போது கூடுதல் சுமை இல்லாமல் இதனைச் செய்வோம்," என்று குறிப்பிட்டார்.

இது சினிமா ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அரசு இந்த ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தினால், ஒரு திரைப்படத்திற்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் மட்டுமே எடுக்க வேண்டுமா, அப்படியானால் கிராமங்களில் வசிப்பவர்கள், இணையத் தொடர்பை பயன்படுத்தத் தெரியாதவர்கள், ஆன்-லைன் வங்கிப் பரிவரித்தனைகளில் ஈடுபடாதவர்கள் என்ன செய்வார்கள் என கேள்வியெழுப்பப்பட்டது.

ஆனால், அமைச்சர் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளரும் இயக்குநருமான கேபிள் சங்கர். "இந்தத் திட்டம் செயலுக்கு வந்தால் ரசிகர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்காது. டிக்கெட் புக்கிங் தளம் மூலமாகவோ, நேரிடையாகவோ டிக்கெட் வாங்க எந்தவிதமான தடையும் கிடையாது. திரையரங்குகளின் சர்வர்கள்தான் இந்தக் கட்டமைப்பில் இணைக்கப்படும்," என்கிறார் அவர்.

சினிமா டிக்கெட் விற்பனை

பட மூலாதாரம், Hindustan Times/Getty images

அதாவது, தற்போது பல திரையரங்குகளில் கம்யூட்டர் மூலம் டிக்கெட் கொடுத்தாலும், அவர்களிடம் அதற்கான சரியான கணக்குகள் இருப்பதில்லை. பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டிற்குப் பதிலாக, கம்யூட்டரில் பில்லிங் சாஃப்ட்வேரை வைத்து பிரிண்ட் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இனி அனைத்துத் திரையரங்குகளும் டிக்கெட் விற்பனையை அரசின் சர்வரில் இணைத்து செய்ய வேண்டும் என்கிறது. அப்படி அரசின் சர்வர் மூலம் இணைத்தால், ஏற்கனவே உள்ள டிக்கெட்நியூ, புக்மைஷோ போன்ற இணையதளங்களும் இயங்குவதோடு, நேரடியாகவும் தியேட்டரிலும் சென்று டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் கேபிள் சங்கர்.

தற்போது இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் பல இணையதளங்கள் திரையரங்க உரிமையாளர்களுடன் கைகோர்த்துச் செயல்படுவதாகவும் இதனால், தயாரிப்பாளர்களுக்கு ஏதும் கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார் அவர்.

அதாவது, சில இணையதளங்கள், சில காட்சிகளுக்கு குறைந்தது 100-150 டிக்கெட்டிற்கான பணத்தை முன்கூட்டியே திரையரங்குகளுக்கு அளித்துவிடுவதாகவும் 150 பேருக்குக் குறைவாக ஆட்கள் வந்தால், ஒவ்வொரு டிக்கெட்டோடும் சேவைக் கட்டணமாகப் பெறும் 35 மூலம் அந்த இழப்பைச் சரிக்கட்டிக்கொள்வதாகவும் கூறுகிறார் அவர்.

சினிமா டிக்கெட் விற்பனை

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images

இதனால், திரையரங்க உரிமையாளருக்கும் பணம் கிடைக்கிறது; இணையதளங்களுக்கும் பணம் கிடைக்கிறது. தயாரிப்பாளருக்கு ஏதும் கிடைக்காது என்கிறார் கேபிள் சங்கர்.

திரையரங்க உரிமையாளர்களைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு குழப்பமானது என்கிறார்கள். அமைச்சர் கூறுவதைப் பார்த்தால் இணையதளம் மூலமாகவே டிக்கெட் பெற வேண்டும் என்பதைப் போலிருக்கிறது. இதனை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

"பல இடங்களில் இணைய இணைப்பு கிடையாது. எத்தனை பேரிடம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கும்," என்கிறார் அவர்.

ஆனால், திரையரங்குகளின் சர்வர்களை அரசு உருவாக்கும் சர்வருடன் இணைத்து, டிக்கெட் விற்பனை செய்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்கிறார் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"நாங்கள் எப்போதுமே கணக்குகளை ஒழுங்காக வைத்திருந்திருக்கிறோம். திரையரங்க உரிமையாளர்கள் ஒழுங்காகக் கணக்குக் காட்ட வேண்டுமெனக் கூறிவருகிறோம். இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை," என்கிறார் சுப்பிரமணியம்.

இம்மாதிரி ஒரு நடவடிக்கையில் ஈடுபட மாநில அரசு ஏன் ஆர்வம் காட்டுகிறது? "வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகவே அரசு இதில் ஆர்வம் காட்டுகிறது. கடந்த ஜூன் மாதமே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மல்டிப்ளக்ஸ்கள் அனைத்திலும் கனிணி மூலம் டிக்கெட் வழங்குவதைக் கட்டாயமாக்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதன் தொடர்ச்சிதான் இது," என்கிறார் கேபிள் சங்கர்.

அமைச்சருடைய அறிவிப்பில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அதனால்தான் குழப்பம் இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். முதலாவதாக, எல்லா டிக்கெட் விற்பனையும் அரசு உருவாக்கும் ஒரு சர்வர் மூலமாகச் செல்லும்.

சினிமா டிக்கெட் விற்பனை

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவதாக, பல இணையதளங்கள் ரசிகர்களிடமிருந்து டிக்கெட் விற்பனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசே இதற்காக ஒரு செயலியை உருவாக்க முயல்கிறது என்கிறார் தனஞ்ஜெயன்.

"என்னைப் பொறுத்தவரை இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை" என்கிறார் தனஞ்ஜெயன்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறார். "இதில் உள்ள குழப்பம் தேவையில்லாதது. எப்போதும் கவுன்டரிலும் டிக்கெட் வாங்கலாம். இணையம் மூலமாகவும் வாங்கலாம். எல்லாம் கணக்கில் வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை," என்கிறார் சிவா.

ஆனால், கிராமப்புற பகுதிகளில் உள்ள சாதாரண திரையரங்குகள் இதற்காக இணைய இணைப்பையும் கம்ப்யூட்டரையும் வைத்திருக்க வேண்டுமே? "ஆமாம். அதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், க்யூப், யுஎஃப்ஓ போன்ற திரையிடல் முறைகள் வந்த பிறகு எல்லாத் திரையரங்குகளிலுமே கம்பியூட்டர்களும் இணைய இணைப்பும் இருக்கின்றன," என்கிறார் கேபிள் சங்கர்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் இது தொடர்பாக விளக்கமளிக்கிறார்கள். உண்மையில் அரசு இதற்காக என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிறது, எப்படிச் செய்யப் போகிறது என்பதை அறிய அமைச்சர் கடம்பூர் ராஜுவைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் தரப்பில் வியாழக்கிழமையன்று அமைச்சரைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிகிறது. அப்போது இந்தக் குழப்பங்கள் குறித்துப் பேசித் தீர்க்கப்படுமென தயாரிப்பாளர்கள் தரப்பு கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: