You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் சங்க தேர்தலை நடத்துவதில் சிக்கல் - என்ன நடந்தது?
- எழுதியவர், நா.ரமேஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23ந்தேதி நீதிபதி பத்மநாபன் தலைமையில் சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை நிறுத்தி வைப்பதாக மாவட்ட சங்க பதிவாளர் இன்று தெரிவித்துள்ளார்.
தேர்தலும் சங்கமும்
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட நாசர், விஷால் தலைமையிலான 'பாண்டவர் அணி' இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் 'சுவாமி சங்கரதாஸ் அணி' என இருமுனை போட்டியாக இந்த நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்த்தும் போட்டியிடுகின்றனர். இதுமட்டும் அல்லாமல் மொத்தம் 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, 58 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
3000க்கும் அதிகமான நடிகர் சங்க உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் 1000 - 1200 உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். இதற்காக இரு அணியினரும் மூத்த நடிகர்களையும், தமிழகம் எங்கும் உள்ள நாடக நடிகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக நாடக நடிகர்கள் உள்ள நிலையில் அவர்களது வாக்குகளை குறிவைத்து இரு அணியினரும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த நடிகர் சங்கத் தேர்தலின்போது நடிகர் சங்கத்திற்குக் கட்டடம் கட்டவேண்டும் என்ற விஷயம்தான் முக்கிய வாக்குறுதியாக இருந்தது. சரத்குமார், ராதாரவி என நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் இல்லாமல் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 'பாண்டவர் அணி', 'சுவாமி சங்கரதாஸ் அணி' இரு அணிக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளையும் வாரி இறைத்து வருகின்றனர். 'பாண்டவர் அணி' தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு உள்ளனர். அதில் முக்கியமானது சங்கக் கட்டடத்தை நிர்வாகிப்பது. நலிந்த மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்ட உதவிகளையும் பட்டியலிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம் சூடு பிடித்த நிலையில் 23ந்தேதி தேர்தலை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்தது. அதை தொடர்ந்து, 'பாண்டவர் அணி'யின் விஷால் மற்றும் பூச்சி முருகன் இருவரும் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இதற்கு முன் நடந்த பொது நிகழ்ச்சிகளை பற்றியும் வெறும் 1700 வாக்காளர்கள் தான் வாக்களிக்க இருப்பதையும் எடுத்து கூறியுள்ளனர். மேலும் இந்த இட விவகாரத்தில் புகார் அளித்தவர்களில் ஒருவரான நாடக நடிகர் பாரிவேந்தர் என்பவர் இந்தத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக 'பாண்டவர் அணி'யை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் போட்டியிடுபவர் என்பதால் இது தேர்தலை தள்ளிப்போடும் முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர். இதற்கிடையில் காவல்துறை அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை நடத்த அனுமதி கிடைக்காததால், இடத்தைத் தர இயலாது என எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி கூறி விட்டது.
தேர்தல் நடத்த பாதுகாப்பு கோரி 'பாண்டவர் அணி' தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அதே தேதியில் அதே இடத்தில் நடிகர் எஸ்.வி.சேகரின் 'அல்வா' என்ற நாடகம் நடக்கும் என அறிவிக்கப்பட்டதும் அதற்கான அனுமதி நேற்று முன் தினம் தான் பெறப்பட்டதும் நேற்று காலை வெளியாகி பரபரப்பானது. எனவே நடிகர் சங்கத் தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதற்கு ஒரு கும்பல் வேலை செய்து வருவதாக 'பாண்டவர் அணி'யினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வழக்கில், 'எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது' என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை இன்று தெரிவிக்க நடிகர் சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நந்தனம் ஒய் எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்ய நடிகர் சங்கத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியிருக்கிறார்.
தேர்தலுக்கு 21 நாள்கள் முன்னரே உறுப்பினர்களுக்கு தேர்தல் குறித்த அறிவிப்பை நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்க விதிமுறைகள் இருப்பதால் இடம் மாறினால் நடிகர் சங்க தேர்தல் 23ந்தேதி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி தற்போதைய பாண்டவர் அணி அமைப்பாளரும் செயற்குழு உறுப்பினரும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருமான பூச்சி முருகன் கூறியதாவது, "தேர்தல் குறித்த அறிவிப்பை தான் 21 நாட்கள் முன்னதாக வெளியிட வேண்டும். இதுபோன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் இடம் மாற்றப்பட்டால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டியதில்லை என்று சங்க விதிகளிலேயே இருக்கிறது. எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த யோசனை சொன்னதே ஐசரி கணேஷ் தான். அவரது தந்தையின் நினைவு நிகழ்ச்சி அங்கு சமீபத்தில் நடந்தது. அப்போது அவர்தான் இதே இடத்தில் தேர்தலை நடத்தலாம் என்று சங்கத்துக்கு யோசனை சொன்னார்."
"எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த கேட்டு இருப்பது ஒரு அரங்கத்தில் மட்டும் தான். ஆனால் நாங்கள் கல்லூரி வளாகத்தையே கேட்டு இருந்தோம். வழக்கு கோர்ட்டில் வரும் சூழலில் அன்றைய தினம் காலையே போலீஸ் சூமோட்டாவாக அனுமதி இல்லை என்று அறிவித்தது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நடிகர் சங்க தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க திரைமறைவில் வேலைகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்". இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஷால் அணியினர் இன்று ஆளுநரை சந்தித்தனர். அவர்கள் தேர்தல் நடத்துவதற்கான மாற்று இடங்களாக 3 இடங்களை தேர்வு செய்து ரகசியமாக வைத்துள்ளார்கள் என்றும் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைப்பார்கள் என்றும் முன்னதாக கூறப்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என விஷால் தெரிவித்துள்ளார்.
"நடிகர் சங்க தேர்தல் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு ஆவண செய்யுமாறு ஆளுநரிடம் மனு அளித்தோம். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் திட்டமிட்டபடி நடக்கும் என்று நம்புகிறோம்" என ஆளுநரிடம் மனு கொடுத்தப்பின் விஷால் தெரிவித்தார்.
இன்று மதியம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ், "பதிவாளர் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். எங்களுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை. வெற்றிபெறப் போவது நாங்கள், பிறகு ஏன் தேர்தலை நிறுத்த வேண்டும்?." என்றார்.
விஷால் சரியாக செயல்படாததே தேர்தல் ரத்தாக காரணம் என்று குறிப்பிட்ட அவர், நாங்களும், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் எனவும், வாக்காளர் பட்டியலை இறுதிசெய்த பிறகு தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்