You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கே - 13: சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்குப் பிறகு அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம். 'கொலையை யார் செய்தது?' பாணியிலான மர்மக் கதையைக் கொண்ட படம்.
துணை இயக்குநராக இருந்தபடி வாய்ப்பு தேடும் மதியழகனை (அருள்நிதி) இரு நாட்களில் நல்ல ஒரு கதையுடன் வரும்படி சொல்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
மற்றொரு பக்கம் தன் தோழியின் சொந்தக் கதையை நாவலாக எழுதியதால், பிரச்சனை ஏற்பட்டு தோழியைப் பிரிந்து வாழும் மலர்விழி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்). மதியழகனும் மலர்விழியும் ஒரு பாரில் சந்திக்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில் மலர்விழியின் ஃப்ளாட்டில் மதியழகன் கண் விழித்துப் பார்க்கும்போது, அவள் செத்துக் கிடக்கிறாள். கொலையா, தற்கொலையா எனத் தெரியாமல் தடுமாறும் மதியழகன் அந்த வீட்டிலிருந்து எல்லாத் தடயங்களையும் அழித்துவிட்டு எப்படித் தப்புகிறான், அவனுக்குக் கதை கிடைத்ததா என்பது மீதிக் கதை.
அருள்நிதி இதுவரை நடித்திருக்கும் பதினொரு திரைப்படங்களில் மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமான்டி காலனி போன்ற திகில் - மர்மத் திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரையும் கவனத்தையும் பெற்றுத்தந்தவை. ஆகவே மீண்டும் ஒரு மர்மக் கதையை முயற்சித்திருக்கிறார் அவர்.
'நான் - லீனியர்' பாணியில் முன்னும் பின்னுமாக நகரும் இந்தப் படம் பல தருணங்களில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
இருந்தபோதும் படத்தின் துவக்கத்திலும் இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரமும் மிக மெதுவாக நகர்வது சோர்வை ஏற்படுத்துகிறது.
ஆனாலும், கதாநாயகன் - கதாநாயகி ஆகிய இருவரை மட்டும் வைத்துக்கொண்டு பெரும்பகுதி படத்தை சலிப்பு ஏற்படுத்தாமல் நகர்த்திச் செல்கிறார் இயக்குநர்.
ஒரு கொலை- அந்தக் கொலையை யார் செய்தது என்ற கேள்வியை மையமாக வைத்து, காமெடி, சண்டை என தேவையில்லாத எந்த கவனச் சிதைவிலும் ரசிகர்களை ஈடுபடுத்தாமல் படம் தொடர்ந்து நகரும்போது மெல்ல மெல்ல படத்தின் மர்மத்தை விலக்கிக்கொண்டுவருகிறது திரைக்கதை. முடிவில் ஓர் எதிர்பாராத திருப்பம்.
படத்தில் மிகச் சில பாடல்களே வருகின்றன என்றாலும் அவையும் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் தவிர இந்தப் படத்தில் வேறு யாருக்கும் சொல்லும்படியான பாத்திரங்கள் இல்லை. இருவருமே தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
டிமான்டி காலனி, மௌனகுரு அளவுக்கு இல்லையென்றாலும் த்ரில்லர் - மர்ம திரைப்பட ரசிகர்கள் ஒரு முறை ரசிக்கத்தக்க திரைப்படம்தான் இது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்