ஃபானி : ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயல்: மீட்புப் பணிகள் தீவிரம்

புயல் கரையை கடக்கும் ஒடிசா மாநிலத்தில் கனத்த மழை பதிவாகி உள்ளது.

புவனேஸ்வரில் இருந்து வட கிழக்கே 200 கிமீ வேகத்தில் நகரும் ஃபானி, வலுவிழந்து தீவிர புயலாக மாறி வங்க தேசம் நோக்கி செல்கிறது.

சுற்றுலா மற்றும் கோயில் நகரமான பூரியில் மணிக்கு 175 கி.மீ என்ற வேகத்தில் சூறை காற்று வீசியது. இதனால் ஒடிசாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள், சாலைகள் என அனைத்தும் சேதமாகியுள்ளது.

அதே போல ஆந்திராவின் வடக்கு பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதென்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள் .

புயலின் காரணமாக கிழக்கு கடற்கரையில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. எட்டு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடக்கவிருக்கும் ஒடிசா பூரியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 850 ஆண்டுகள் பழமையான ஜகநாதர் கோயிலும் இங்குதான் உள்ளது. இந்த புயலினால் கோயில் சேதமாகலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

7 போர்க்கப்பல், 6 விமானம்

கப்பற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன.

7 போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 6 விமானங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக கப்பற்படை தெரிவிக்கிறது.

பெருமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீரின் அளவு 5 அடி வரை உயரலாமென வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் கடந்த முப்பது ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் நான்காவது பெரிய புயல் ஃபானி.

2017ஆம் ஆண்டு தாக்கிய ஓக்கி புயலில் 200 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் தம் வாழ்விடங்களை இழந்தனர்.

கனமழை

காலை 6 மணி நிலவரப்படி ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் பகுதியில் அதிகபட்சமாக 173.75 மி.மீ மழை பெய்துள்ளது. சோம்பேட்டாவில் 167 மி.மீ மழையும், மேல் பத்துபுரத்தில் 153.75 மி.மீ மழையும், கீழ் பத்துபுரத்தில் 131 மி.மீ மழையும், கவிட்டியில் 148 மி.மீ மழையும் பெய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பத்துலட்சம் மக்களை தங்க வைக்க 850 தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

81 தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையமும், அரசு துரிதமாக செயல்பட தங்களது விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :