You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராமலிங்கம் கொலை வழக்கு: திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் என்.ஐ.ஏ. சோதனை
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் திருச்சியில் உள்ள எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 இடங்களில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது என்கிறது என்.ஐ.ஏ.வின் செய்தி அறிக்கை.
கைப்பற்றப்பட்ட பொருள்கள்
16 மொபைல் போன்கள், 21 சிம் கார்டுகள், 3 லேப்டாப்புகள், 9 ஹார்ட் டிஸ்குகள், 7 மெமரி கார்டுகள், 118 சிடி/டிவிடிகள், 1 டேப், 7 டைரிகள், 2 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பேனர்கள், 1 டிவிஆர், 1 வாள், 1 கூரிய கத்தி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 குற்ற ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்கிறது அந்த அறிக்கை.
இது தொடர்பாக எமது சென்னை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் தரும் செய்தி:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி, தனது கடையிலிருந்து ஷேர் ஆட்டோவில் வீடுதிரும்பும்போது ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டார். மதமாற்றம் செய்யவந்தவர்களிடம் முன்னதாக அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலேயே கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
முதலில் இந்த வழக்கை தஞ்சையின் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படைகள் விசாரித்துவந்தன. அதற்குப் பிறகு இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக முன்னதாக 8 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏ.பி. சௌகத் அலி தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பாக தஞ்சைக்கு வந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் துவக்கினர்.
இதற்குப் பிறகு, வியாழக்கிழமையன்று திருச்சி பாலக்கரையில் உள்ள அந்த மாவட்டத்தின் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதேபோல, கும்பகோணத்தில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் காரணமாக, அந்தப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்