You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெப்சிகோ அறிவிப்பு: உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்
- எழுதியவர், ஹரிதா கந்த்பால்
- பதவி, பிபிசி குஜராத்தி
தங்களுடைய காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கு விதையைப் பயன்படுத்தி சாகுபடி செய்ததாக, குஜராத்தின் நான்கு உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் கம்பெனியின் பிரபல 'லேஸ்' பிராண்ட் சிப்ஸ் தயாரிப்புக்காக தாங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் எஃப் சி 5 ரக உருளைக் கிழங்கினை சாகுபடி செய்ததாக நான்கு குஜராத் விவசாயிகள் மீது கடந்த மாதம் வழக்குப் போட்டது பெப்சிகோ .
ஆனால், வழக்கு வாபஸ் தொடர்பாக தமக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார் விவசாயிகளின் வழக்குரைஞர் ஆனந்த் யக்னிக்.
பெப்சி வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பாக பெப்சிகோ இந்தியா செய்தித் தொடர்பாளர் விடுத்த அறிக்கை:
"கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிறது பெப்சி கோ. இந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த உருளைக் கிழங்கு கூட்டுப் பண்ணைத் திட்டத்தை கம்பெனி உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர். இந்த கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல சந்தை விழிப்புணர்வு தரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உயர் விளைச்சல், உயர்ந்த தரம், சிறந்த நடைமுறைகள், மேம்பட்ட விலை ஆகியவை கிடைத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.
விவசாயிகளின் பரந்த நண்மைக்காக தமது பதிவு செய்யப்பட்ட (உருளைக்கிழங்கு) வகையைப் பாதுகாக்க நீதித்துறை மூலமான தீர்வை நாடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெப்சிகோ இந்தியா தள்ளப்பட்டது. சுமுகத் தீர்வுக்கான வழியையும் ஆரம்பம் முதலே பெப்சிகோ முன்வைத்துவந்தது. அரசாங்கத்துடன் விவாதித்த பிறகு விவசாயிகளுக்கு எதிரான வழக்கைக் கைவிட நிறுவனம் ஒப்புக்கொண்டது. விதைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் சுமுகமான, நீண்ட காலத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் நடந்த அந்த பேச்சுவார்த்தையை நாங்கள் நம்பியிருக்கிறோம்.
நாடு முழுவதும் இணைந்து பணியாற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கம்பெனி அர்ப்பணிப்போடு இருக்கும். சிறந்த சாகுபடி முறைகளை மேற்கொள்வதை உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளார் பெப்சிகோ இந்தியாவின் செய்தித் தொடர்பாளர்.
இது தொடர்பான முந்தைய செய்தி: குஜராத் விவசாயிகளிடம் பெப்சிகோ கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்பது ஏன்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்