அமெரிக்க ராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் பிற செய்திகள்

ராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - 'மதுபானமும் காரணம்'

அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்தாண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் கடந்து குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2016ஆம் ஆண்டு 14,900 என்ற அளவில் இருந்த முறையற்ற பாலியல் உறவுகள் , 2018ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் உள்ளது. குறிப்பாக பணிக்கு எடுக்கப்படும் 17 -24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றில் ஒரு பங்கு குற்றத்திற்கு மதுபானமே காரணமாக இருக்கிறது.

'உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்'

தங்களுடைய காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கு விதையைப் பயன்படுத்தி சாகுபடி செய்ததாக, குஜராத்தின் நான்கு உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் கம்பெனியின் பிரபல 'லேஸ்' பிராண்ட் சிப்ஸ் தயாரிப்புக்காக தாங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் எஃப் சி 5 ரக உருளைக் கிழங்கினை சாகுபடி செய்ததாக நான்கு குஜராத் விவசாயிகள் மீது கடந்த மாதம் வழக்குப் தொடர்ந்தது பெப்சிகோ. ஆனால், வழக்கு வாபஸ் தொடர்பாக தமக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார் விவசாயிகளின் வழக்குரைஞர் ஆனந்த் யக்னிக்.

ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மூன்று கண் பாம்பு

ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண் பாம்பு ஒன்றின் புகைப்படங்களை வனவிலங்கு அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். ஆன்லைனில் அதிகமாக பகிரப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பை நார்த்தன் டெரிட்டெரி பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை "தனித்துவமானது" என்று விவரித்துள்ளது. 'மன்டி பைத்தான்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்த கார்பெட் மலைப்பாம்பு குட்டி, மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களில் இறந்துவிட்டது. "இதன் தலையில் இருந்த மூன்றாவது கண் இயற்கையான திரிபாக இருந்தது" என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

குண்டுதாரிகளின் உடல்கள் மத சடங்குகளின்றி அடக்கம்

இலங்கை கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த 10 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டன. மத அனுசரிப்புகள் எதுவுமின்றி, போலீஸாரினால் இந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் ஊடக தொடர்பாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இப்பகுதியிலுள்ள மதத் தலைவர்களின் வேண்டுக்கோளுக்கு அமைய, எந்த வித மத அனுசரிப்புகளும் நடத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ராமலிங்கம் கொலை வழக்கு: திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் என்.ஐ.ஏ. சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் திருச்சியில் உள்ள எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 இடங்களில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது என்கிறது என்.ஐ.ஏ.வின் செய்தி அறிக்கை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :