அழிவிலிருந்து மொழியை மீட்க துடிக்கும் தோடர் இன மக்கள்

துணி வேலைபாடுகளில் தோடர் பெண்கள்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

மொத்நார்ர்தோ, வூழ்தோஷியா, தர்மோமோ - இந்த சொற்கள் எழுத்துப்பிழைகள் நிறைந்த தமிழ் சொற்கள் அல்ல. இவை அனைத்தும் தென்னிந்தியாவின் முக்கியமான பழங்குடி இனமான நீலகிரி தோடர் இனமக்களின் மொழியில் இயற்கையே கடவுள், நீங்கள் நலமா? நன்றி என்பதற்கான சொற்கள்.

எழுத்து வடிவம் இல்லாத இந்த மொழியானது ஒரு நூற்றாண்டைத் தாண்டியும் வழக்கத்தில் இருந்தாலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐநா சபையின் யுனெஸ்கோ அறிக்கை, இந்தியாவில் அழியும் தருவாயில் இருக்கும் 42 மொழிகளில் தோடர் இன மொழியும் ஒன்று என கண்டறிந்துள்ளது.

ஐநா அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அழிந்துவரும் மொழிகளை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் இந்திய அரசின் மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

''பேச்சு வழக்கான தோடர் மொழியைப் பாதுகாக்க ஆரம்பப்பள்ளியில் பாடங்களைச் சொல்லித்தர புத்தகங்களை மத்திய பழங்குடி விவகார அமைச்சகம் வடிவமைத்துள்ளது,'' என நீலகிரியில் உள்ள மத்திய அரசின் பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ப. சுப்பிரமணியன் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், தோடர் இனமக்களிடமும் அவர்களின் மொழியை பாதுகாக்க தேவையான முயற்சிகளை செய்யும் பொறுப்பு அந்த இனக்குழுவுக்கு உள்ளது என்று குறிப்பிட்டார் சுப்பிரமணியன்.

தோடர் மக்கள்

நீலகிரி மலையில் வாழும் சுமார் மூவாயிரம் தோடர் இனமக்கள் அவர்களின் மொழியில் பேசியும், பாடியும், பூசைகள் செய்தும் வருகின்றனர்.

முதியவர்கள் தமிழ் கலப்பில்லாமல் பேச, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரும்பாலும் தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசுகின்றனர்.

தோடர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவர்களின் மொழி அழியும் நிலை ஏற்படக் காரணம் என்ன என தோடர் மக்கள் மற்றும் நிபுணர்களிடம் பேசினோம்.

குறையும் மேய்ச்சல் நிலமும், அழியும் மொழியும்

தோடர் இனமக்களில் ஒருவராகவும் தனது தாய்மொழியை பாதுகாக்கவும் வேலைசெய்துவரும் நீலகிரி மலையில் பகுதியில் வசிக்கும் வாசமல்லியைச் சந்தித்தோம்.

தோடர் இன மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெருமளவு பயன்படுத்தப்படும் வார்த்தைகள் நீலகிரியின் இயற்கை வளம், எருமை வளர்ப்பு தெய்வத்திற்கு செய்யவேண்டிய சடங்குகள் தொடர்பானதாகவே இருக்கும் என்று கூறிய வாசமல்லி, நீலகிரியில் மேய்ச்சல் நிலங்கள் குறைந்துபோனதால் பல வழக்கு சொற்கள் மறைந்துவிட்டன என்கிறார்.

வேலை செய்யும் தோடர் ஆண்கள்

''ஆங்கிலேயர் காலத்தில் இருந்து, யூக்கலிப்டஸ் தைல மரங்களை பயிரிட்டப்பட்டாலும், இந்தியா சுதந்திரம் பெற்றபின், நீலகிரி மலையில் உள்ள பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை அரசாங்கம் தைல மரங்களை வளர்க்க எடுத்துக்கொண்டது.

இதன் விளைவாக, பல குடும்பங்கள் எருமை வளர்ப்பை நிறுத்தவேண்டிய கட்டாயம். எருமை வளர்ப்பை குறிக்கும் சொற்களை இழந்துவிட்டோம்.

எடுத்துக்காட்டாக, மேய்ச்சல் நிலத்திற்கு அருகில் எருமை பால் கறக்கும் இடத்தை - ‘இர்ர்கர்ர்ம்மிர்ஸ்’ என்று கூறுவோம்,

வளர்ந்த எருமை கன்றுகளை அடைத்துவைக்கும் இடத்தை ‘கர்ர்டு’ என்று கூறுவோம். இதுபோன்ற சொற்களை எங்கள் பாடல்களில் பயன்படுத்துவோம்.

இலங்கை
இலங்கை

தினமும் பேசுவோம். தற்போது எருமை வளர்ப்பு குறைந்துவருவதால், பல தோடர் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகள் தெரியாது. நாங்கள் பாடினாலும் பொருள் தெரியாது. இதுபோல பல சொற்களை இழந்துவிட்டோம்,''என்றார் வாசமல்லி.

''ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி மலைப்பகுதியில் அதிகம் காணப்பட்ட தோடர் இன மக்களின் வீடுகள் ‘மந்த்’ என்ற பெயரில் வழங்கப்படுவதால், நீலகிரிக்கு ஓட்டகாமந்த் என ஆங்கிலேயர்கள் பெயரிட்டதாக எங்கள் முன்னோர்கள் கூறுவார்கள்.

இன்றைய நிலையில் மற்ற பழங்குடிகளைவிட தோடர்கள் மிக குறைவாக உள்ளனர். நாங்கள் பேசும்மொழியும் அழிந்துவருவதால், நீலகிரி மலையில் நாங்கள் வாழ்ந்ததற்கான சுவடே இல்லாமல்போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்,'' என்றார் வாசமல்லி.

நடனமாடும் தோடர் பெண்கள்

தோடர் குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்றுத்தரப்படுவதால், தோடர் மொழியை அவர்கள் குடும்பத்தில் மட்டுமே பேசுகிறார்கள் என்றும் அதிலும் மொழிக்கலப்பு அதிகமாக இருப்பது வேதனை அளிக்கிறது என்கிறார் வாசமல்லி.

''தோடர் மொழியில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது, பூ, நிலா, ஆறுகள், அணிகலன்கள் போன்ற பெயர்களை பெண்களுக்கும், மரம், மலையின் பெயர்கள், கோயிலின் பூசைபொருள் போன்ற பெயர்களை ஆண்களுக்கும் சூட்டுவோம்.

தற்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்கள் தோடர் குழந்தைகளின் பெயர்களை சொல்ல சிரமப்படுவதால், பிற தமிழ் குடும்பங்களைப் போலவே குழந்தைகளுக்கு பலர் பெயர் வைக்கிறார்கள்,'' என்று கூறினார்.

தோடா சிறுவனின் அனுபவம்

நீலகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தோடர் இனச் சிறுவனான பத்து வயது பொன்ஷ்குட்டனிடம் பேசும்போது, அவனது உரையாடலில், வாசமல்லி கூறிய கருத்துகள் விளங்கியது.

நம்மிடம் பேசும்போது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்தான் பொன்ஷ்குட்டன் அதிகமாக பேசுகிறான்.

''என்னுடைய வகுப்பில் இருப்பவர்கள் யாரும் பழங்குடியினர் இல்லை. மற்ற மாணவர்களிடம் பேசும்போது, தோடர் மொழியை பேசமுடியாது.

என்னுடைய பாடங்களிலும் ஆங்கிலம், தமிழில்தான் உள்ளது என்பதால், வீட்டில் அம்மா, அப்பா பேசுவதைக் கேட்பேன்.

எங்கள் பூசைக்கான பாடல்களை கற்றுக்கொள்ளவேண்டும் என பெரியவர்கள் சொல்கிறார்கள். நான் இப்போதுதான் என் தாய்மொழியை கற்று வருகிறேன்,'' என்றான். பள்ளியில் அவன் பெயர் பொன்ஷ்குட்டன் அல்ல, தீபக் என்றும் கூறினான்.

மொழிகளின் அழிவு வரலாறுகளின் அழிவு

இந்திய அளவில் பேசப்படும் மொழிகளை தொகுக்கும் பணிகள், அழியும் தருவாயில் உள்ள மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்துவது என இயங்கிவரும் ஆளுமையான கணேஷ் தேவியிடம் பேசினோம்.

தோடர் மக்கள்

''இந்திய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தாய்மொழியாக பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படும்.

அரசின் தரவுகளைக் கொண்டு நாங்கள் செய்த ஆய்வில், 1961ல் 1,100 தாய்மொழிகள் இருந்தன.

2011ல் அந்த எண்ணிக்கை 850யாக குறைந்து, அதாவது கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 250 தாய்மொழிகள் மடிந்துள்ளன என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

குறிப்பாக எங்களது கள ஆய்வில் கடந்த பத்து ஆண்டுகளில் 75 மொழிகள் காணமல்போயுள்ளன என்பதற்கான ஆதரங்களை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

இலங்கை

ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி மொழி: வினோத ஆப்பிரிக்க பழங்குடியினர்

காணொளிக் குறிப்பு, ஆணுக்கு ஒரு மொழி, பெண்ணுக்கு ஒரு மொழி: அசத்தும் ஆப்பிரிக்க பழங்குடி
இலங்கை

இத்தனை மொழிகள் அழிந்திருப்பது தேசிய அவமானமாக கருதப்படவேண்டும் என்றே எண்ணுகிறேன்,'' என காட்டமாக பேசினார் கணேஷ் தேவி.

பழங்குடிகளின் மொழிகள் அழிவது குறித்து கேட்டபோது, பெரும்பாலான பழங்குடி மக்களின் மொழிகளில் சூழலியல் குறித்த சொற்கள் அதிகம் இருக்கும்.

அவர்களின் பாரம்பரிய அறிவியல் அறிவு, அவர்கள் பின்பற்றும் காலச்சார விழாக்களில் இருக்கும் நியதி என பலவும் அவர்களின் மொழி அழியும்போது காணாமல்போகும் என்றார்.

''மொழியை பயன்படுத்துவது மக்கள் என்றாலும், அரசின் கடைமையும் மொழியை காப்பதில்அவசியம். எத்தனை நூலகங்களில், பழங்குடி மொழியில் வெளியான இலக்கியங்கள் கிடைக்கின்றன?

பழங்குடி மக்களின் மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்க என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன? ஒரு மொழி அழியும்போது, அந்த இனத்தின் வரலாறும் அழிந்துபோகிறது” என்றார் கணேஷ் தேவி.

தோடர் மொழியின் இழப்பு என்பது அவர்களின் இனத்திற்கானது மட்டுமல்ல, இந்த சமூகம் அந்த பழங்குடியின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களையும் அழித்துவிடும் என்றார்.

தோடர் மக்கள்

பெய்யென பெய்யும் மழை

நமது நீலகிரி பயணத்தின்போது, அகநாடுமந்த் என்ற இடத்தில் தோடர் மக்களின் கோயில் ஒன்றில் புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

அந்த விழாவில் தோடர்கள் ஒன்றுகூடி, பிரார்த்தனை செய்துவிட்டு, ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு வட்ட வடிவில் சுற்றிவந்து ''ஓஹஹோஹ்ஹோ'' என பலத்த குரலில் பாடத்தொடங்கினர்.

ஐந்து நிமிடங்களில் அடைமழை பெய்யத்தொடங்கியது. மழையில் முழுக்க நனைந்த அடையாளக்குட்டன்(65) நம்மிடம், ''இயற்கை எங்க தெய்வம். கூப்பிட்ட குரலுக்கு வந்திடும். இத்தனை நாளா மழை இல்லை. மழையை வேண்டி எங்க மொழியில கூப்பிட்டோம், உடனே வந்திடுச்சு,'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

அன்று இரவு முழுவதும் நீலகிரி மலையில் மழை கொட்டியது. அண்டை மாவட்டமான கோவையில் இருந்தவர்களும் சூறைகாற்றுடன் பெய்த மழையை அனுபவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: