You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி.டி.கோசாம்பி: இந்திய வரலாற்றை அறிவியல்பூர்வமாக எழுதிய கணிதப் பேராசிரியர்
(வரலாற்றை நேசிப்பவர்கள், வரலாற்றை வாசிப்பவர்கள் நிச்சயம் டி.டி. கோசாம்பியை கடந்து வந்திருப்பார்கள். இன்று அவரது 111 வது பிறந்த நாள். அதனையொட்டி பிபிசி அவரைப் பற்றிய இந்த சிறப்புக் கட்டுரையை வெளியிடுகிறது.)
புகழ்பெற்ற பெளத்த அறிஞர் தர்மானந்த் கோசாம்பியின் மகனாக 1907 ஆம் ஆண்டு ஜூலை 31- ஆம் தேதி கோவாவில் உள்ள கோஸ்பென்னில் பிறந்தவர் டி.டி. கோசாம்பி என்று அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பி.
தந்தையிடமிருந்து தொடங்கிய ஆர்வம்
தர்மானந்த் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் பெளத்தம் குறித்து வகுப்பெடுத்திருக்கிறார். தன் தந்தையிடமிருந்துதான் வாசித்தல், கற்றல் குறித்த ஆர்வம் டி.டி கோசாம்பிக்கு ஏற்பட்டிருக்கிறது.
புனேவில் பள்ளிக் கல்வியை முடித்தவுடன், தந்தையுடன் அமெரிக்காவுக்கு பயணமாகியிருக்கிறார் டி.டி. கோசாம்பி. அங்கு 1925 ஆம் ஆண்டு வரை கேம்பிரிட்ஜ் லத்தீன் பள்ளியில் படித்துள்ளார்.
பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது கணிதம், வரலாறு மற்றும் கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், பிரஞ்ச் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் மீது கோசாம்பிக்கு ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. 1929 ஆம் ஆண்டு நல்ல மதிப்பெண்களுடன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
ஹார்வார்டில் படித்துக் கொண்டிருந்த போது இவருக்கு ஏற்பட்ட கணிதம் மீதான ஆர்வம், இவரை புகழ்பெற்ற கணிதவியலாளர்களான ஜார்ஜ் மற்றும் நோர்பெர்ட்டுடன் இவரை நெருக்கமாக்கி இருக்கிறது.
நாடு திரும்புதல்
1929 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய கோசாம்பி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியில் சேர்ந்து இருக்கிறார். பின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பெயரில், அங்கு ஓராண்டு கணித பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.
பின் 1932 ஆம் ஆண்டு, பூனேவில் உள்ள ஃபெர்குஸ்ஸான் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்து இருக்கிறார். ஹார்வர்டு செல்வதற்கு முன் இந்த கல்லூரியில்தான், டி.டி.கோசாம்பியின் தந்தை பாலி மொழிப் பேராசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார்.
பதினான்கு ஆண்டுகள் இந்தக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் டி.டி. கோசாம்பி. இந்த காலக்கட்டத்தில்தான் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று, நவீன இந்தியாவின் பெரும் அறிஞராகவும், சிந்தனையாளராகவும் உருவெடுத்தார் கோசாம்பி.
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தின், கணிதவியல் துறைத் தலைவர் பதவி 1946 ஆம் ஆண்டு கோசாம்பியை தேடி வந்தது. அப்பதவியில் 1962 வரை அங்கம் வகித்தார் கோசாம்பி. அங்கு அவருக்கு அவர் துறையை சேர்ந்த பல்வேறு அறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு அவர்களுடன் விவாதித்தார்.
கணிதத் துறையில் டி.டி.கோசாம்பியின் பங்களிப்பானது எல்லைகள் தாண்டி சர்வதேச அறிஞர்களாலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக பிரிட்டன் அறிவியலாளர் ஜெ.டி. பெர்னல், கோசாம்பியை வெகுவாக பாராட்டினார்.
கணிதம் தாண்டி
கணிதம் தாண்டி பல்வேறு சமூக விஷயங்களில் கவனம் செலுத்தினார் கோசாம்பி. அணைகள் கட்டுவதற்காக தன்னிச்சையாக நிலங்களை தேர்ந்தெடுப்பதை எதிர்த்தார். அதற்கு மாற்று வழிமுறைகளை வலியுறுத்தினார்.
மழைக்காலம் தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு டைபாய்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மும்பையில் மட்டும் ஆண்டுக்கு 500 உயிரிழப்புகளை தடுக்கலாம் என்று தன் ஆய்வின் மூலம் நிறுவினார்.
அது போல மும்பையில் ஒரு சாலை திட்டத்திற்கு ஆலோசனை கூறினார். இவ்வாறாக எப்போதும் பல்வேறு துறைகளில் சமூகம் சார்ந்து, சிந்தித்து செயல்பட்டவர் கோசாம்பி. அவரது ஆய்வுகள், செயல் திட்டங்கள், நடவடிக்கைகள் என அனைத்திலும் சாமானிய மக்களின் தேவையும், நலனும்தான் முதன்மையானதாக இருந்திருக்கிறது.
தன்னை சுற்றி நடக்கும் சமூக விஷயங்களுக்கு எப்போதும் எதிர்வினையாற்றி இருக்கிறார். தேச மற்றும் சர்வதேச அளவிலான விஷயங்களில் எப்போதும் அஞ்சாமல் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியா அமெரிக்க அணு ஒப்பந்தங்கள் குறித்த தன் காத்திரமான கருத்துகளை தெரிவித்துள்ளார் கோசாம்பி.
சமூக அறிவியல், நாணயவியல்
தனது கணிதத் திறனை சமூக அறிவியல் குறித்து புரிந்துகொள்ளப் பயன்படுத்தினார் அவர்.
மற்ற நாணயவியல் அறிஞர்கள் போல அல்லாமல், நாணயவியல் துறையை பழமையான பொருட்களை சேகரிக்க வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உடைய நாணய சேகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு புத்தாக்கம் அளித்தார்.
நாணயம் என்பதற்கு பின்னால் பெரும் சமூக மற்றும் பொருளாதார வரலாறு உள்ளது. அதில் ஓர் ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் குப்தர் காலத்திற்கு பின் ஏற்பட்ட வணிக வீழ்ச்சியையும், சுயசார்பு கிராமங்களின் தோற்றத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று நிறுவினார்.
வரலாற்று தேடல்
பெரும் தேடலின் பயனாக இபர் பூனா மாவட்டத்தில் வரலாற்று காலத்திற்கு முந்தைய கல் கட்டுமானங்களை கண்டுபிடித்தார். அதனை ஆய்வு செய்து, வரலாற்று காலத்துக்கு முன்பு தக்காண பீட பூமிக்கும், மத்திய இந்தியாவுக்கும் இருந்த உறவினை விளக்கினார்.
வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் மற்றும் அதன் மூலமான கண்டுபிடிப்புகளை கோசாம்பி மூன்று புத்தகங்களாக தொகுத்தார். 'இந்திய வரலாறு ஓர் அறிமுகம்', 'தொன்மமும் உண்மையும்', ' பண்டைய இந்தியா' என மூன்று நூல்களாக தொகுத்தார்.
எதனையும் புனிதப்படுத்தாமல், துதிபாடாமல் மார்க்சிய வழியிலான இவரது ஆய்வு இந்தயாவின் பண்டைகால வரலாற்றை புரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கிறது.
இந்திய முதலாளித்துவ வகுப்பின் நிதி உதவியினால் செய்யப்பட்ட ஆய்வு, அதனை ஒட்டி எழுதப்பட்ட வரலாற்றுக்கு எதிர்நிலையில் இருந்தது கோசாம்பியின் ஆய்வு.
அவர் இறந்து பல தசாப்தங்களுக்கு பின்னரும் அவரது ஆய்வுகள், எழுத்துகள், கருத்தியல்கள் இந்திய முதலாளிகளுக்கு அசெளகர்யத்தை தருகின்றன. அவர் தேசியவாதத்தை மகிமைபடுத்தும் கருத்தியலை எதிர்த்தார். ஆனால், இப்போது தேசியவாதத்தையும், பாசிசத்தையும் தூக்கி பிடிக்கும் பரிவாரங்கள்தான் ஆட்சியில் இருக்கின்றன.
(டி.என்.ஜா எழுதிய 'Against the Grain' ஆங்கில நூலில் இருந்து...)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :