You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆன்லைனில் பொருள் வாங்குபவர்கள் ஏமாற்றப்பட்டால் என்ன செய்வது?
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்களை வாங்குவது இன்றளவில் சர்வ சாதரண விஷயமாகி போய்விட்டது. அதில் சிலர் தேவையை தாண்டி இணையத்தில் பொருட்களை வாங்குவதை வாடிக்கையாகவும் வைத்துள்ளனர்.
எந்த ஒரு விஷயத்திலும் சாதகம் பாதகம் இரண்டும் இருப்பது போல் ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்குவதிலும் சாதகம் பாதகம் ஆகிய இரண்டுமே உள்ளன.
இவ்வாறு ஆன்லைன் வர்த்தக பொருட்கள் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சுபாஷினிக்கு நேர்ந்த அனுபவம் வித்தியாசமானது சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் பணம் கொடுத்து ஏமாறவும் நேர்ந்திருக்கும்.
அவ்வாறு தனக்கு நேர்ந்த அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் சுபாஷினி.
சமீபத்தில் சுபாஷியின் வீட்டிற்கு கொரியர் ஒன்று வந்துள்ளது. சுபாஷினியின் கணவர் பெயரை கூறி அவர் பொருள் ஒன்றை ஆன்லைன் வர்த்தக தளம் ஒன்றில் ஆர்டர் செய்ததாகவும், `கேஷ் ஆன் டெலிவரி` (cash on delivery) என்றும் கேட்டுள்ளார். அதிலும் தெளிவான முகவரி ஏதுமின்றி, பெயர், வீட்டின் எண் ஆகியவை மட்டுமே அதில் இருந்துள்ளது மேலும் இதற்கான ரசீது குறித்து கேட்ட பொழுது பின் வாங்கிய அந்நபர் அலுவலகத்தில் வந்து பார்சலை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
அரிதாகவே தாங்கள் இணைய வர்த்தக தளங்களில் பொருட்களை வாங்குவதாலும், குறிப்பாக வீட்டில் யாரும் பொருட்களை கேஷ் ஆன் டெலிவரியில் வாங்குவதில்லை என்பதாலும் சுபாஷினிக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.
அதே சமயம் அவர் தனது கணவரிடம் பேசி அவர் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்பதையும் தெரிந்து கொண்டார்.
பின் ரசீது, மற்றும் பார்கோட் போன்ற மேல் விவரங்கள் குறித்து சுபாஷினி மீண்டும் கேட்டவுடன் தொலை தூரத்தில் நிறுத்திய தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார் அந்நபர்
அந்நபர் வழங்கிய பார்சலை திறக்க அச்சப்பட்ட சுபாஷினி ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு திறந்து பார்த்த பிறகு அதில் பயன்படுத்தப்பட்ட பழைய சட்டை ஒன்று இருந்துள்ளது.
வீட்டில் வயதான நபர்கள் இருந்தாலோ அல்லது பெண்கள் தனியாக இருந்திருந்தாலோ இது மிகவும் ஆபத்தாக முடியலாம் என்றும் கூறும் சுபாஷினி, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த தான் இதை டிவிட்டரில் பகிர்ந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இது குறித்து நாம் அனைவருக்குமே ஒரு விழிப்புணர்வு தேவை என்ற கருத்தையும் அவர் முன் வைக்கிறார்.
டிவிட்டரில் இந்த சம்பவம் குறித்து பகிர்ந்த சுபாஷினி பெங்களூரு போலிஸையும் அதில் டேக் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த காவல்துறை சம்பந்தப்பட்ட இடத்துக்கு உட்பட்ட காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
"வாடிக்கையாளர்களுக்கு தேவை விழிப்புணர்வு"
ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்களை வாங்குவது தொடர்பாக வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் கன்ஸ்யூமர் காசின் (consumer cause) செயலாளர் கதிர்மதியோன்
"பெயர்பெற்ற தளங்களில் பொருட்களை வாங்குவதே அறிவுறுத்தப்பகூடிய ஒன்று. ஏனென்றால், புகார் அளித்தால் 99 சதவீதம் அவர்கள் பொதுவாக அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்." என்கிறார் கதிர்மதியோன்.
"பல விதங்களில் பொருட்கள்,விலைக்குறிப்பு, சலுகைகள் என இணையத்தில் பொருட்கள் வாங்குவது தற்போது வசதியான ஒன்றாக இருப்பதால் வாடிக்கையாளர்களால் அதை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆனால், நாம் எந்த தளத்தில் பொருட்களை ஆர்டர் செய்கிறோம், என்ன தரத்தில் ஆர்டர் செய்கிறோம் என்பது குறித்தெல்லாம் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்" என்கிறார் கதிர்மதியோன்.
மேலும் பெயர்பெற்ற தளங்களின் பெயரை சொல்லி ஏமாற்றப்பட்டால் சம்பந்தப்பட்ட தளங்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் கொடுப்பதற்கான போக்கு அதிகரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் கதிர்மதியோன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :