பாரிசில் தாக்கப்பட்ட இளம்பெண் - வைரலாக பரவிய அதிர்ச்சி காணொளி

பாரிஸ் நகர வீதியில் இளம்பெண் ஒருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியை அந்த பெண் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் மாணவி ஒருவருக்கு பாரிஸ் வீதியில் ஒருவர் தொந்தரவு தருகிறார். தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கெஞ்சுகிறார். ஆனால், அதன் பின் அந்த மனிதர், இளம்பெண்ணைத் தாக்கும் காட்சி அந்தக் காணொளியில் இடம்பிடித்துள்ளது.

இந்த சம்பவமானது பாரிஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள உணவக வாசலில் நடந்துள்ளது.

மேரி லாகெயர் எனும் பெண் தான் தாக்கப்படும் சி.சி.டி.வி காணொளியை பகிர்ந்ததை தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாக பரவியது.

என்ன நேர்ந்தது?

கடந்த செவாய்க்கிழமை, மேரி லாகெயர் (22 வயது) பாரீஸ் நகரின் 19- ஆவது மாவட்டத்தில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

இது குறித்து பிரஞ்ச் வானொலி ஒன்றுக்கு திங்கட்கிழமை பேட்டி அளித்த அவர், அந்த நபர் தகாத வார்த்தை பேசியதாகவும், மோசமாக நடந்துக் கொண்டதாகவும் கூறி உள்ளார்.

அந்த பேட்டியில் மேரி, "இது முறை அல்ல. இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அன்று அந்த நபர் அவ்வாறு மோசமாக நடந்துக் கொள்ள தொடங்கியபோது. நான் அவரை நோக்கி 'நிறுத்து' என்றேன். அவர் கதில் அந்த வார்த்தை விழுந்திருக்கும் என்று நினைக்கவில்லை.

ஆனால், விழுந்து இருக்கிறது. அதன்பின், என்னை தாக்க தொடங்கினார்." என்கிறார்.

அந்த உணவகத்தில் இருந்த மக்கள் அந்த இளைஞரை கண்டித்து இருக்கிறார்கள். மேரி உடனே வீடு திரும்பி இருக்கிறார். ஆனால், இந்த சம்பவத்தை மற்றொரு சம்பவமாக கடந்து செல்ல அவர் விரும்பவில்லை.

சம்பவம் நடந்த உணவகத்திற்கு சென்று, சி.சி.டி.வி காணொளியை கேட்டு இருக்கிறார். உணவக உரிமையாளரும் உடனே அந்த காணொளியை கொடுத்து இருக்கிறார். இந்த காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதும், வைரலாக பரவத் தொடங்கி இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான இவ்வாறான துன்புறுத்தலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ள மேரி, "என்னால் அமைதியாக இருக்க முடியாது. நாம் மெளனமாக இருக்க கூடாது" என்று பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.

சட்டம்

இதுபோன்ற துன்புறுத்தலுக்கு எதிராக அண்மையில் அபராதம் விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது பிரான்ஸ். அதன்படி, 105 டாலர் வரை துன்புறுத்திய நபருக்கு அபராதம் விதிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :