சினிமா விமர்சனம்: டெட் பூல் 2

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களை சற்றே கேலி செய்து உருவாக்கப்பட்ட Dead Pool படத்தின் இரண்டாம் பாகம். எக்ஸ் மென் பட வரிசையில் இது 11வது படம்.

புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சகிச்சையால் கிட்டத்தட்ட சாகாநிலைக்குச் சென்றுவிட்ட வேட் வில்சன் (ரையான் ரெனால்ட்ஸ்), தன் காதலியோடு (மொரேனா பாக்கரின்) குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடுகிறான். ஆனால், காதலியை எதிரிகள் கொன்றுவிட, தானும் இறக்க முடிவுசெய்கிறான் வேட். ஆனால், இன்னொரு எக்ஸ்-மேனான கொலாசஸ் அவனைக் காப்பாற்றிவிட, எக்ஸ் - மென் குழுவில் இணைகிறான் வேட்.

அந்த நேரத்தில், எதையும் தீப்பிடிக்க வைக்கும் சக்தி கொண்ட சிறுவனான ரஸ்ஸல் (ஜூலியன் டெனிசன்) என்பவனை கட்டுப்படுத்த அவனை ஐஸ் - பாக்ஸ் என்ற சிறைச்சாலையில் அடைக்கிறது அரசு. சிறுவனைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் வேட்-டும் ஒருவனைக் கொன்றுவிட, அவனும் சிறுவனுடன் சேர்ந்து ஐஸ் - பாக்ஸில் அடைக்கப்படுகிறான்.

இவர்கள் ஐஸ் பாக்ஸ் சிறையில் இருக்கும்போது கேபிள் (ஜோஸ் ப்ரோலின்) என்ற எதிர்காலத்தைச் சேர்ந்த எக்ஸ் மேன், சிறுவனான ரஸ்ஸலைக் கொல்ல முயற்சிக்கிறான். கேபிள் ஏன் ரஸ்ஸலைக் கொல்ல முயற்சிக்கிறான், வேட் வில்சனால், ரஸ்ஸலைக் காப்பாற்ற முடிந்ததா, ஐஸ் - பாக்ஸிலிருந்து தப்பினார்களா என்பதெல்லாம் மீதிக் கதை.

ஆரம்பத்திலேயே ஒரு எச்சரிக்கை: என்னதான் எக்ஸ் - மென் வரிசையைச் சேர்ந்த படமென்றாலும், இது குழந்தைகளுக்கான படமில்லை. ஆனால், Dead Pool முதலாம் பாகத்தைவிட ரகளையான படம்.

எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும் டேங்கிற்குள் தீயை கொளுத்திப்போட்டு வேட் வில்சன் தற்கொலைசெய்ய முயல்வதிலிருந்து துவங்குகிறது படம். அப்போது பேச ஆரம்பிக்கும் வேட், படம் முடியும்வரை பேசிக்கொண்டேயிருக்கிறார். அவரைப் போலவே படத்தில் வரும் மற்றவர்களும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். பெரும்பாலான வசனங்கள், பலரால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு 'ஏ' ரகம். ஆனால், இந்த Dead Pool பட வரிசையைப் புரிந்துகொண்டுவிட்டால், ரசிக்கத்தக்க, விழுந்துவிழுந்து சிரிக்கத்தக்க வசனங்கள்.

தவிர, இந்தப் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், தமிழில் பார்த்தால் இன்னும் ரகளையாக இருக்கும். தமிழில் ஓடாத படங்களில் துவங்கி, கமல்ஹாசனின் ட்விட்டர், மக்கள் நீதி மய்யம்வரை கேலி செய்கிறார்கள்.

இந்தப் படத்தின் பல காட்சிகள், ரசிகர்கள் முந்தைய எஸ்க் - மென் படங்களையோ, Dead Pool முதலாம் பாகத்தையோ பார்த்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் உருவாக்கப்பட்டவை. அதனால், எக்ஸ்-மென் வரிசையைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் சற்று திகைப்பை ஏற்படுத்தலாம். அல்லது ரசிக்கவே முடியாமலும் போகலாம். ஆனால், படம் புரிய ஆரம்பித்துவிட்டால், அதிலிருக்கும் நுணுக்கமான நகைச்சுவையை ரசிக்கவே இரண்டு முறை பார்க்க வேண்டியிருக்கும்.

திரைக்கதையும் எடிட்டிங்கும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு. அதை வைத்துக்கொண்டு விளையாடியிருக்கிறார்கள். அதேபோல, தங்களைத் தாங்களே கேலிசெய்து கொள்வதும் படம் நெடுக இருப்பதும் ரசிக்கவைக்கிறது.

ஒரு வரியில் சொல்வதென்றால், சற்று முதிர்ந்த மனநிலையுடைய ஹாலிவுட் ரசிகர்களுக்கான படம்.நடிகர்கள்: ஜோஸ் ப்ரோலின், ரையான் ரெனால்ட்ஸ், மொரேனா பாக்கரின், ஜாஸி பீட்ஸ்; இசை: டைலர் பேட்ஸ்; இயக்கம்: டேவிட் லெய்ட்ச்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: