சினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நயன்தாரா, மம்மூட்டி நடிப்பில் 2015ல் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் த ராஸ்கல் படத்தின் ரீமேக். விஜய் நடித்த காவலன் படத்திற்குப் பிறகு, சித்திக் இயக்கியிருக்கும் தமிழ்ப் படம் இது.
மனைவியை இழந்த பாஸ்கர் (அரவிந்த் சாமி) ஒரு தொழிலதிபர். அவருடைய மகன் (ராகவன்) படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் ஷிவானியின் (நைனிகா) தாய் அனு (அமலா பால்) கணவன் இல்லாதவர். அதிகம் கோபப்படும் பாஸ்கர், தன் மகனுக்காக எதையும் செய்யக்கூடியவர். பாஸ்கரையும், அனுவையும் இணைத்துவைக்க நினைக்கிறார்கள் குழந்தைகள். அந்த நேரத்தில் திடீரெனத் தோன்றுகிறார் காணாமல்போன அனுவின் கணவர். அவர் எப்படி காணாமல் போனார், இப்போது திடீரென வந்தது ஏன், பாஸ்கரும் அனுவும் ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.

மலையாளத் திரைக்கதையை அப்படியே தமிழில் படமாக்கியிருக்கிறார் சித்திக். ஆனாலும், மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற இந்தக் கதை தமிழில் மிகச் சொதப்பலாக படமாகியிருக்கிறது. பாஸ்கரை முதலில் அறிமுகப்படுத்தும்போது அவர் ஒரு ரவுடியா, தொழிலதிபரா என்பதே புரியவில்லை. வெகுநேரம் கழித்தே அவர் மிகப் பெரிய பணக்காரர் என்பதும் தொழிலதிபர் என்பதும் புரிகிறது.
பாஸ்கர் கோபக்காரரா, நினைத்ததைச் செய்ய விரும்புபவரா, சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாதவரா என அவரது பாத்திரமே மிக குழப்பமானதாக இருக்கிறது. மிகப் பெரிய தொழிலதிபராக இருப்பவர், தன் மகன் கராத்தே கற்றுக்கொள்ளும் இடத்தில் சென்று, தேவையே இல்லாமல் மிகப் பெரிய சண்டை போடுகிறார். திடீரென அருகில் இருக்கும் பெண்ணின் ஃபோனை எடுத்துப் பேசிவிட்டு, கீழே போட்டு உடைக்கிறார். பிறகு பார்த்தால், அது அவருடைய ஃபோனாம். ஆனாலும் ஃபோனை அவர் தேடவேயில்லை.

இப்படி கதாநாயகனின் பாத்திரமே மிகச் சொதப்பலாக இருப்பதால், படத்தின் எந்தக் காட்சியும் மனதோடு ஒட்ட மறுக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான பாத்திரங்கள், குழந்தைகள். ஆனால், இயல்பாக இருப்பதற்குப் பதிலாக, வழக்கமான சினிமா குழந்தைகளைப் போல அதீத புத்திசாலித்தனத்துடன் இருப்பது இன்னும் எரிச்சலூட்டுகிறது.
தனி ஒருவன் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த அரவிந்த் சாமிக்கு இந்தப் படம் ஒரு பெரிய சறுக்கல். குழப்பமான இந்தப் பாத்திரத்தை அவர் எவ்வளவோ சிறப்பாக நடித்துக்கொடுத்திருந்தாலும், அது எடுபடவேயில்லை.

படத்தில் சற்றே உருப்படியாக அமைந்திருப்பது அமலா பால் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் மட்டும்தான். அவரும் அதை மிக நேர்த்தியுடன் செய்திருக்கிறார். சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணாவின் கூட்டணி அடிக்கும் கூத்துகள் சிரிப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எரிச்சலை ஏற்படுத்துகின்றன.
இதற்கு நடுவில், ஒரு மிகப் பெரிய நிழலுலக கும்பல், அவர்கள் தேடும் ஹார்ட் டிஸ்க் என்று ஒரு த்ரில்லர் கதையை வேறு நுழைக்க முயல்வதால், படம் திசைமாறி எங்கெங்கோ போகிறது.

ஏகப்பட்ட பாடல்கள், ஏகப்பட்ட சண்டைகள் என இரண்டரை மணி நேரத்திற்கு பொறுமையை ரொம்பவுமே சோதிக்கிறார்கள். காவலன் படத்தை இயக்கிய சித்திக்கா இந்தப் படத்தை இயக்கியது என்ற சந்தேகமே ஏற்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












