You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தள்ளிப்போகிறது 'காலா': ஏப்ரல் 20-ஆம் தேதி வெளியாகிறது ''மெர்க்குரி'
தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களோடு நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்த நிலையில், இன்று (புதன்கிழமை) தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களோடு முத்தரப்பு பேச்சு வார்த்தையை தமிழக அரசு நேற்று பேச்சு வார்த்தையை நடத்தியது.
இதில் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறியது. இந்த நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இன்று நடந்த பேச்சுவார்த்தையில், மார்ச் 1ம் தேதியில் இருந்து புது படங்கள் வெளியாகாமல் இருந்ததை இந்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதிலும் இந்த வாரம் திரைப்படங்களை வெளியிட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட்டு கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி படம் 20ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது.
இது தவிர இன்னும் இரண்டு சின்ன பட்ஜெட் படங்களை திரையிட அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் இனி வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளியிடுவது என்றும் அதை கண்காணிக்க ஒரு புது குழு உருவாக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.
அதேபோல் மார்ச் 16ல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திரைப்பட படப்பிடிப்பை தொடங்கிக்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் புதிய விதியை உருவாக்கியுள்ளனர். அதாவது ஒரு புதிய தொடங்குவதற்கு முன் அந்த படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியை பெற வேண்டும். அதற்கு அந்த படக்குழு முழு கதையையும் தயாராக வைத்திருக்க வேண்டும்,
எந்த நாட்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்ற விவரத்தை கொடுக்க வேண்டும், படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் ஒப்பந்தத்தை சமர்பிக்க வேண்டும், தொழில் நுட்ப கலைஞர்களிம் ஒப்பந்த பட்டியலை கொடுக்க வேண்டும் இந்த விபரங்களை கொடுத்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கடிதம் கொடுக்கும்.
அந்த கடிதத்தை பெப்சி அமைப்பில் படக்குழுவினர் கொடுத்தால் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் அந்த படத்தில் பணியாற்றுவார்கள். இந்த புதிய விதியை கடைபிடிக்க வேண்டியிருப்பதால் வரும் வெள்ளிக் கிழமையே படங்களின் படப்பிடிப்பு தொடங்கும்.
திரையரங்குகளில் இனி 150 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை இருக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார். திரையுலகில் வரும் ஜூன் மாதம் முதல் புதிய நடைமுறைகளை அமல்படுத்தவுள்ளனர். அதில் முதல்கட்டமாக வெளிப்படைத்தன்மையோடு கூடிய கணினி முறை டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்துகின்றனர். அதற்காக தயாரிப்பாளர் சங்கம் பிரத்யேகமாக இரு இணையதளங்களை விரைவில் தொடங்கவுள்ளது என்று விஷால் தெரிவித்தார்.
இதன் மூலம் வசூல் நிலவரத்தின் உண்மைத்தன்மையை அனைவரும் தெரிந்துக்கொள்ள முடியும். அதை வைத்து நடிகர் சம்பளம் நிர்ணயம் செய்ய முடியும். மேலும் வங்கி கடன்கள் கிடைக்க இந்த புதிய விதி முறை உதவும் என்றும் விஷால் கூறினார். அதேபோல் சின்ன பட்ஜெட் திரைப்படம், பெரிய பட்ஜெட் திரைப்படம் என்று பிரிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள் விருப்பப்படி டிக்கெட் விலை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
ஆனால், 150 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்கப்படாது என்றும் விஷால் கூறினார். இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் ஜூன் மாதம் முதல் அமலாகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் உறுவாகியுள்ள காலா படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் நடந்ததால் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் காலா படம் தள்ளி போவது தற்போது உறுதியாகியுள்ளது. அதன் ரிலீஸ் தேதியையும், விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதியையும், திரைப்பட ரிலீஸ்குழு மற்றும் அந்த படக்குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யவுள்ளனர். அதன்பின் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்