You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழர்களிடம் நற்பெயர் பெற முயற்சிக்கிறாரா சந்திரபாபு நாயுடு?
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் சமீப காலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களும், மோதி தமிழகத்துக்கு வந்தபோது டிரண்டான #GoBackModi என்ற ஹாஷ்டாகும் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போக்கு நிலவுவதை தெளிவாக காட்டுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசுக்கு எதிராக சமீபத்தில் போர்க்கொடி தூக்கினார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக தேர்தல் கூட்டணியின் போது மத்திய அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார் சந்திரபாபு நாயுடு. பின்பு அதை வழங்காத மத்திய அரசின் கூட்டணியிலிருந்து வெளியேறினார். பின்பு நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவர் முற்பட்டார்.
இந்நிலையில், நேற்று முந்தினம் அமராவதியில் நடைபெற்ற தனது கட்சி செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், தனது ஆட்சியை தமிழக மக்களும் பாராட்டி வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலும் ஆதரவு
"தமிழ்நாட்டில் சந்திரபாபு நாயுடுவுக்கான ஆதரவு எப்போதும் மிக அதிகமாகவே காணப்படும். முதலீடுகளை வரவேற்பது குறித்தும், அவரது ஆளுமை குறித்தும், சில சமயங்களில் தங்கள் மாநிலங்களில் உள்ள ஆட்சியை சந்திரபாபு நாயுடுவுடன் ஓப்பிட்டு பேசும் சூழ்நிலையும் தமிழ்நாட்டில் நிலவியுள்ளது" என்று தனது அனுபவத்தில் தான் கவனித்ததை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் மூத்த பத்திரிகையாளர் உமா சுதிர்,
தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிராகவும், மோதிக்கு எதிராகவும் நிலவும் போக்கை அவர் கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார் உமா சுதிர்.
அமராவதியில் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில் தமிழ் மக்களை கவர்வதற்காக பேச வேண்டிய அவசியம் சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை என்றும், அவர் கட்சியினரை உத்வேகப்படுத்த இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பகவான் சிங். மேலும், ஆந்திராவை தவிர பிற மாநிலங்களிலும் சந்திரபாபு நாயுடு தனக்கு நல்லதொரு பெயரை வைத்துக் கொள்ளவே எப்போதும் விரும்புவார் என்றும் கூறுகிறார் பகவான் சிங்.
தமிழ் மக்களிடம் நற்பெயரை வாங்கவே சந்திரபாபு எப்போதும் முயற்சிப்பார் என்றும் ஆனால் தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலத்திற்கும் மேலாக இருப்பதால் தற்போது தேர்தலுக்காக அவர் தமிழ் மக்கள் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் டன்காஷாலா அஷோக் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தீர்மானம் கொண்டு வர முற்பட்டபோது அந்த முயற்சி அதிமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். எனவே, அங்குள்ள அதிமுக ஆதரவு தமிழ் மக்கள் அவருக்கு எதிராக மாறும் சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் சந்திரபாபு நாயுடு அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அஷோக் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்