You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: இந்தியாவில் மீண்டும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்?
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி:
உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹராஷ்ட்ரா, பீகார், ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே சந்தையில் பணப்புழக்கம் குறைவாக இருந்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களின் பெரும்பாலான நகரங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களும் பணமின்றி எந்தநேரமும் காலியாக கிடக்கின்றன. இதை சமாளிக்க தினமும் 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக பணத்தேவை திடீரென அதிகரித்து உள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தற்காலிகமானது தான். இந்த பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தி இந்து (தமிழ்)
ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு,''ஆந்திராவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இங்கு நடைபெறும் நல்லாட்சியை மனதார பாராட்டுகின்றனர். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினருக்கு இது தெரியவில்லை.'' என பேசியுள்ளார் என்கிறது தி இந்து (தமிழ்) செய்தி.
தினமலர்
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும், பசு கொலைக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என கோரி குஜராத்தில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்திற்கு வெளியே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி
மக்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு வெறும் 15 நிமிடங்கள் கூட பதிலளித்துப் பேச பிரதமர் மோதியால் முடியாது என விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாட்டு மக்களின் பணத்தை பறித்து நீரவ் மோதி உள்ளிட்ட கடன் ஏய்ப்பாளர்களுக்குப் பிரதமர் வழங்கிவிட்டதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது.
தி இந்து
கடற்கரை சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக, சென்னையின் மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையை ஒட்டிய பகுதிகளை அரசு மேம்படுத்த உள்ளது. மெரினா மற்றும் பெசண்ட் நகரில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தும் பணி இந்த மாதம் தொடங்க உள்ளது என்றும், மத்திய அரசின் நிதியுதவியால் இப்பணிகள் நடக்க உள்ளது என்றும் `தி இந்து’ செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்