சினிமா செய்திகள்: கலகலப்பை இழந்த சுந்தர், இந்தி மொழியாக்கத்தில் ஜோதிகா

கோலிவுட்டில் இந்த வார சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

ஜோதிகா

பட மூலாதாரம், twitter/gvprakash

நாச்சியார் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு (Tumhari Sulu) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் ஜோதிகாவின் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான முதல்கட்ட வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அதிலும் நடிகர்கள் தேர்வில் இயக்குனர் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய இரண்டு தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பாராட்டைபெற்றார். இதை தொடர்ந்து தற்போது ஒப்பந்தமாகியிருக்கும் தும்ஹாரி சூலு (Tumhari Sulu) படத்தின் ரீமேக்கும் தனக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்பிக்கையோடு உள்ளார் வித்தார்த். தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line
நிக்கி கல்ராணி

பட மூலாதாரம், twitter/nikkigalrani

சுந்தர் சி இயக்கத்தில் பிப்ரவரி 9ம் தேதி வெளியான திரைப்படம் கலகலப்பு 2. காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு முதல் வாரத்தில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து ரசிர்களின் ஆதரவு கலகலப்பு 2 படத்திற்கு கிடைத்தது. இதனால் முதல் வாரத்தில் தவறவிட்ட வசூலை இரண்டாவது வாரத்தில் மொத்தமாக அள்ளியது. மேலும் இந்த படம் வெளியான பிறகு பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் மார்ச் 1ம் தேதியில் இருந்து தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் புதிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த இரண்டு காரணங்களும் கலகலப்பு 2 படத்திற்கு உதவிகரமாக அமைந்தன. இதனால் கலகலப்பு 2 படம் 8 வாரங்களை கடந்து திரையரங்குகளில் ஓடுகின்றன. இதன் மூலம் நல்ல லாபமும் வந்ததாக கூறப்பட்டது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் தன்னுடைய கலகலப்பு 2 படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை, இதனால் உங்களுக்கு ஷேர் கொடுக்க முடியாது என்று கூறியதாக இயக்குனரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார். மேலும் கோவை பகுதியில் தன்னுடைய திரைப்படத்தை திரையிட்ட ஒருவர் தன்னிடம் கலகலப்பு படத்திற்கு செலவு செய்ததற்காக 20 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வு தயாரிப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

நிக்கி கல்ராணி

பட மூலாதாரம், twitter/nikkigalrani/

Presentational grey line
வரலட்சுமி சரத்குமார்

பட மூலாதாரம், twitter/varusarath

'போடா போடி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். முதல் படம் தோல்வியடைந்த நிலையில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த தாரை தப்பட்டை படத்தை அதிகம் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படமும் தோல்வியடைந்தது. இதன் பிறகு ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அதில் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா படங்களில் நடித்து பாராட்டைபெற்றார். இந்த படங்களை தொடர்ந்து தற்பொழுது ஹீரோயினை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் "சக்தி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான வேலைகள் நடந்துவரும் அதேவேலையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "வெல்வட் நகரம்" என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தை அறிமுக இயக்குனர் மனோஷ்குமார் நட்ராஜன் இயக்குகிறார். சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மற்றும் கொடைகானலில் பகுதிகளில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களை மையமாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் "வெல்வட் நகரம்" படம் உருவாகவுள்ளது.

Presentational grey line
மெர்குரி

பட மூலாதாரம், twitter/karthiksubbaraj

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் மெர்குரி. வசனம் இல்லாமல் சைலண்ட் மூவி வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சுமார் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் வெளியாகவில்லை. தன்னுடைய படத்தை தமிழக ரசிகர்களுக்கு தற்போது திரையிட முடியாமல் போனது தனக்கு மிகப்பெரிய வருத்தம் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். ஆனால் ஒரு நல்ல நோக்கத்திற்காக இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது, இதனால் பல பெப்சி தொழிலாளர்கள் தங்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது எல்லாவற்றிற்கும் நல்லது நடக்க வேண்டும் என்றும் என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிந்த பிறகு மெர்குரி படம் தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

Presentational grey line
உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், twitter/Udhaystalin

சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக வேலை செய்த ஒருவரின் படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தில் பிரியா பவானிசங்கர், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதற்கான முதல்கட்ட வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் முடிந்ததும் தொடங்கவுள்ள அந்த படத்தில் நடிக்க மலையாள நடிகர் ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் உதய நிதி ஸ்டாலினுக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளதால் ஜெயராம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: