தொழில்நுட்ப பிழை: வடகொரிய இணைய தளத்தில் திறக்கும் அரசு எதிர்ப்பு டிவிட்டர் பக்கம்

வட கொரிய அரசு நடத்தி வருகின்ற இணையதளத்தில் இருக்கிற ஒரு தவறால், அந்தப் பக்கத்தை பயன்படுத்துவோர் டுவிட்டர் கணக்கை கிளிக் செய்தால் அரசை விமர்சிக்க கூடிய போலி டுவிட்டர் கணக்குக்கு இணைப்பு ஏற்படுகிறது.

கிம் ஜாங்-உன்னை கேலி செய்கின்ற படம்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்னை கேலி செய்கின்ற படங்களும், அந்நாட்டிலுள்ள மோசமான மனித உரிமை நிலை பற்றிய விமர்சனங்களும் இந்தப் போலி டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளன.

"அவர் நேஷன் ஸ்கூல்" இணையதளம் வட கொரியாவின் முன்னாள் தலைவர் கிம் இல்-சுங்கின் கொள்கைகளை வாசகர்களுக்கு போதிக்கிறது.

அதனுடைய டுவிட்டர் கணக்கு @Juche_School என்பதாகும். ஆனால், இதனை கிளிக் செய்தால் @Juche_School1 என்கிற சைபர் அனாகின் என்று தன்னை இனம்க்காட்டி கொள்ளும் போலி இணைய பக்கத்திற்கு இணைப்பு செல்கிறது என்று வட கொரிய டெக் இணையதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் டுவிட்டர் பயனர் பெயரை கிளிக் செய்தவுடன் அது காலியாக இருந்ததை கண்டு, போலி டுவிட்டர் பக்கமாக பயன்படுத்தி வருவதாக சைபர் அனாகின் தெரிவித்திருக்கிறது.

இந்தப் போலி டுவிட்டர் கணக்கில், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்னை கேலி செய்கின்ற படங்களும், அந்நாட்டிலுள்ள மோசமான மனித உரிமை நிலைமை பற்றிய விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வட கொரிய குடிமக்களுக்கு இணைய வசதி இல்லை. எனவே வட கொரியாவுக்கு வெளியிலுள்ள வாசகர்களை இலக்கு வைத்து இந்த "அவர் நேஷன் ஸ்கூல்" நடத்தப்பட்டு வருகிறது.

டுவிட்டர் மற்றும் சமூக ஊடக சேவைகள் வட கொரியாவில் எங்கேயும் இல்லை.

கிம் ஜாங்-நாமின் இறப்பால்...

அவர் நேஷன் ஸ்கூல்

பட மூலாதாரம், OUR NATION SCHOOL

படக்குறிப்பு, வட கொரியாவிலுள்ள எல்லா இணையதளங்களும் பதிவிடுவதைபோல, “அவர் நேஷன் ஸ்கூல்” கிம் இல்-சொங்கின் பெயரை பெரிய எழுத்துக்களில் வைத்துள்ளது.

சைபர் அனாகினை பிபிசி தொடர்பு கொண்டபோது, வட கொரிய அரசால் நடத்தப்பட்ட படுகொலை என்ற பரவலாக நம்பப்படுகின்ற, 2017ம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாமின் இறப்பினால் தூண்டப்பட்டு இதனை செய்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

அவருடைய இறப்போடு தொடர்புடைய இரு பெண்கள் விசாரணையை சந்தித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எடுக்கப்படும் ஏமாற்று வேலை என்று இந்த தாக்குதலை எண்ணிக்கொண்டதாக இந்த பெண்கள் கூறி வருகின்றனர்.

கொரிய நட்புறவு கூட்டமைப்பின் அமெரிக்க கிளையின் இணையதளத்தையும் ஹேக் செய்துள்ளதாக சைபர் அனாகின் தெரிவிக்கிறது.

வட கொரியாவுக்கு ஆதரவான கட்டுரைகளை வெளியிட்டு, வட கொரியாவில் விடுமுறை சுற்றுலாவை ஊக்கமூட்டி வளர்க்கும், அரசுக்கு ஆதரவான குழுதான் கொரிய நட்புறவுக் கூட்டமைப்பு..

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு வட கொரியா நடத்தி வரும் "அவர் நேஷன் ஸ்கூல்" இணைய தளத்தில் ஏப்ரல் 12ம் தேதி வரை இந்தப் போலி டுவிட்டர் கணக்கின் இணைப்பில்தான் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: