பெரும் செலவில் உருவாகும் 'மகாவீர் கர்ணன்' : கர்ணன் கதாப்பாத்திரத்தில் விக்ரம்?

சூர்யா

பட மூலாதாரம், STRDEL

ஆந்திர மாநிலத்தின் முன்னால் முதல்வரான ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் யாத்ரா என்ற படம் உருவாகிறது. அதில் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். இதற்கான முதல்கட்ட வேலைகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் மகி வி ராகவ் இயக்குகிறார்.

'யாத்ரா'

பட மூலாதாரம், Shiave Meka/Yatra Movie

இந்த படத்தில் ஒய்.எஸ்.ஆர் வாழ்கையில் நடந்த அனைத்து ஏற்ற இறக்கங்கள் மற்றும் மறைவு என எல்லா விஷயத்தையும் பதிவு செய்ய உள்ளனர்.

யாத்ரா படத்தில் சூர்யா நடிப்பாரா?

ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க, அவருடைய மகன் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வு தற்போது நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சிக்கின்றனர். அந்த கதாபாத்திரத்துக்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என்றும், விரைவில் அவரை அணுகி கதையை கூறவுள்ளோம் என்றும் யாத்ரா படத்தின் இயக்குனர் மகி வி ராகவ் கூறியுள்ளார்.

இதனால் யாத்ரா படத்தில் சூர்யா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் சூர்யாவுக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்தால் யாத்ரா திரைப்படம் தமிழிலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சூர்யா தற்போது செல்வராகவன், கே.வி ஆனந்த், ஹரி ஆகியோர் படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் யாத்ரா படத்தில் நடிப்பது கேள்விகுறிதான் என்று கூறப்படுகிறது.

300 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 'மகாவீர் கர்ணன்'

நடிகர் விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், சாமி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து மலையாள இயக்குனர் விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அறிவிப்புக்கு பின்னார் கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலையில் இயக்குனர் விமல் ஈடுபட்டு வந்தார்.

நடிகர் விக்ரம்

பட மூலாதாரம், Andreas Rentz

இந்நிலையில தற்போது கதை விவாதங்களை முடித்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். ஹிந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மகாவீர் கர்ணன் உருவாகவுள்ளது. அதேபோல் 300 கோடி ரூபாய் செலவில் அந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். மகாவீர் கர்ணா படத்தின் கதை வேலைகள் முடிந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலில் தமிழ், ஹிந்தியில் உருவாகும் மகாவீர் கர்ணா படத்தை மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள 'காளி' எப்போது வெளிவரும்?

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கியிருக்கும் படம் காளி. இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸூக்கு தயராக இருக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாதுரை படத்தை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் நிறுவனம், விஜய் ஆண்டனை தயாரித்து நடித்துள்ள காளி படத்தை வெளியிடுவதற்கு தடைக்கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வில்லியம்ஸ் அலெக்ஸாண்டர் என்பவர் ''அண்ணாதுரை படத்தை வாங்கி வெளியிட்டதில் எனக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.

''இதனால் குறைந்த தொகைக்கு காளி படத்தை தருவதாக விஜய் ஆண்டனியும், அவருடைய மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் 50 லட்சம் கொடுத்து முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்துக்கொண்டேன். தற்போது வேலை நிறுத்தம் நடந்து வருவதால் அந்த படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் மீதி தொகையை என்னால் தற்போது கொடுக்க முடியவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில விஜய் ஆண்டன் தன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் காளி படத்தை தடையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் காளி படத்துக்கு இடைக்கால தடைவிதித்தது. இதை எதிர்த்து விஜய் ஆண்டனி மேல் முறையீடு செய்திருந்தார். இதில் பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் செலுத்தி படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: